தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் மிகப் பெரியது (ஜனத்தொகையில் மட்டும்). தூங்கா நகரம், கூடல் நகரம் என்று பெயர் பெற்றது.
நகரின் தூங்கா இயக்கத்திற்கு சீதோஷ்ணமும், நடைபாதைக் கடைகளும் முக்கிய காரணங்கள். குளிர்காலம் என்பது டிசம்பர் 25 முதல் ஜனவரி 15 வரை மட்டுமே. அதுவும் கம்பளி தேவைப்படாத அளவிற்கு தான். இங்குள்ள பெரும்பாலான மக்கள் கம்பளி, ஸ்வெட்டர் போன்றவைகளை உபயோகிப்பதே இல்லை.
அதே போல் குடைகளையும் பொதுவாக வயதானோர் மட்டுமே வெயிலுக்கு பயன்படுத்துகிறார்கள். மழை சாதாரணமாக 1/2 மணி நேரம் முதல் 1 1/2 மணி நேரத்திற்கு மேல் பெய்வதில்லை, அதுவும் சில நாட்கள் மட்டும். மதுரை மக்களுக்கு மழை என்பது ஒதுங்கி நிற்கும் தருணம். ரெயின் கோட், ரப்பர் சூ, குடைகள் போன்றவை பள்ளிச் சிறார்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
நகரின் அமைப்பு:
நகரின் வாழ்க்கை 2500 வருட சரித்திரச்சின்னங்களோடு உரசிக் கொண்டு இயங்கி வருகிறது. நகரின் நடு நாயகமாக மீனாட்சி அம்மன் கோவில். பாண்டிய மன்னர்களும், தொடர்ந்து நாயக்க மன்னர்களும் கோவில் திருப்பணிகளை தாராளமாக செய்து வந்ததால் கோவில் பல மடங்கு விரிவடைந்து நான்கு புறமும் ஆடி வீதிகளை உள்ளடக்கி நிற்கிறது. மன்னர் திருமலை நாயக்கர் கட்டத்துவங்கிய ராஜகோபுரம் கோவிலைச் சுற்றி உள்ள சித்திரை வீதிகளையும், அதையடுத்த ஆவணி மூல வீதிகளையும் தாண்டி நிற்கிறது. இந்த வேலை நிறைவு பெற்றிருந்தால் இந்த வீதிகளும் கோவிலுக்குள் அடங்கி நின்றிருக்கும்.
கோவிலைச் சுற்றி சதுரம் சதுரமாக விரிவடைந்து கொண்டே வரும்
வீதிகளுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள் தான். கோவிலுக்குள் ஆடி, கோவிலுக்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என மூன்று சதுர வீதிகளுக்குப் பின் 'வெளி வீதி'கள். இவையனைத்தும் நகரின் மையப்பகுதியான பின்கோட் எண் 625001ல் அடங்கிய பகுதிகள் மட்டுமே. ஆனால் சரித்திரச் சின்னங்கள் நகரின் தற்போதைய எல்லையைத் தாண்டியும் பரவலாக உள்ளன.
நகர வரலாறு:
Meenakshi Temple - Golden Lotus Tank வைகை நதியின் கரையில் அமைந்திருக்கும் மதுரை பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. பாண்டிய மன்னன் குலசேகரன் மீனாட்சி அம்மன் கோவிலை நகரின் மையத்தில் ஸ்தாபித்து அதைச் சுற்றி தாமரை வடிவிலான நகரை அமைத்தான். இந்த நகரில் சிவபெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது. இன்றும் கூட சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
நகரின் அதிமுக்கிய திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இது மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒட்டி நடைபெறுவதால் தொடர்ந்து இரு வாரங்களுக்கு நகர் முழுவதும் விழாப் கோலத்தில் இருக்கும். இந்தத் திருவிழா சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைப்பது மட்டுமல்லாமல் முஸ்லிம்களையும் பங்கு கொள்ளச் செய்கிறது.
முக்கிய இடங்கள்:
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்:
புராதனமான, நன்கு கட்டப்பட்ட கோவில். இந்தியாவில் எல்லாப் பகுதியிலும் மதுரை தெரிந்த பெயராக இருக்கக் காரணமானது. நகரின் மையத்தில் இருக்கிறது. ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள், கலைப்பொருட்கள் மியூசியம் ஆகியவை கோவிலில் பார்க்க வேண்டியவை.
திருமலை நாயக்கர் மஹால்:
Thirumalai Nayakar Mahalஇந்தோ-சார்செனிக் கட்டிட அமைப்பில் அமைந்த அரண்மனை. 1523ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்போது மிச்சமிருப்பது கால் பங்கிற்கும் குறைவு. மற்ற பகுதிகள் வீடுகளாகவும் தெருக்களாகவும் மாறி விட்டன. மஹாலுக்கு பின்புறம் சற்றுதூரம் தள்ளி அரண்மனையின் பெரும் தூண்கள் மட்டும் ஒரு சிறிய சந்தின் (சந்தின் பெயர்: பத்துத் தூண் சந்து) வரிசையாக நிற்கின்றன.
தெப்பக்குளம்:
Teppakulam மதுரையின் கிழக்குப் பகுதியில் பரந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இணையான நிலப்பரப் பில், மன்னர் திருமலை நாயக்கரால் 1646ல் அமைக்கப்பட்ட குளத்தின் நடுவில் தீவு போல மரங்களும் மைய மண்டபமும் உள்ளது. முன்பு வைகை நதியிலிருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வழிகள் இருந் ததாக சொல்லப்படுகிறது. தற்போது தெப்பத் திருவிழா தவிர மற்ற சமயங்களில் காலியாக இருக்கும்.
கூடல் அழகர் கோவில்:
மிகப் பழமையான கோவில். 108 திருப்பதிகளில் ஒன்று. பெரியார் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள இக்கோவில் பாண்டியர் காலத்தில் மதுரையை அடுத்த கிராமமாக இருந்ததாக கூறுவர்.
காந்தி மியூசியம்:
Gandhi Museum ராணி மங்கம்மாளின் கோடை கால அரண்மனையில் அமைந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெளிவான வரலாற்றையும், காந்தியைப் பற்றி பல அரிய விஷயங்களையும் அறியலாம். காந்தி சுடப்பட்டு இறக்கும் போது அணிந்திருந்த (இரத்தக் கறை படிந்த) மேல் துண்டு இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள்ளேயே மாநில அரசின் அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
திருப்பரங்குன்றம்:
முருகனின் ஆறு படை வீடுகளில் முதலாவது. குடைவரைக் கோவில். மதுரையின் தெற்குப் பகுதியில் 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
அழகர் கோவில்:
Alagar Koilமதுரையிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் ரம்மியமான சூழ்நிலையில் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியே சித்திரைத் திருவிழாவில் முக்கிய அம்சமாகும்.
பழமுதிர் சோலை:
அழகர் கோவில் மலையில் அமைந்துள்ளது. அழகர் கோவிலில் இருந்து மலை மீது சுமார் 1 1/2 கி.மீ. செல்ல வேண்டும். வேன் வசதி உண்டு. முருகனின் ஆறு படை வீடுகளில் ஆறாவது படை வீடு இது.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்:
கொடைக்கானல் - (120 கீ.மீ வடமேற்கு.):
மலை வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 2130மீ. உயரம்.
பழனி - (118 கி.மீ. வட மேற்கு.):
குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
பெரியார் வனவிலங்கு சரணாலயம் (தேக்கடி) - (140 கி.மீ. மேற்கு.):
தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான சரணாலயம். சிறந்த காலம் அக்டோபர் - ஜூன்.
மேகமலை (130 கி.மீ. மேற்கு):
மேற்குத் தொடர்ச்சி மலையில் டீ எஸ்டேட்டுகள் நிறைந்த இடம்.
சுருளி அருவி - (123 கீ.மீ. மேற்கு):
தேக்கடிக்குச் செல்லும் வழியில் பசுமையான இயற்கைச் சூழ்நிலையில்.
குற்றாலம் - (155 கி.மீ. தெற்கு-தென்மேற்கு):
பிரபலமான நீர்வீழ்ச்சிகள் நிறைந்த ஆரோக்கிய ஓய்வுத் தலம்.
கன்னியாகுமரி - (255 கி.மீ. தெற்கு):
நாட்டின் தெற்கு முனை. விவேகானந்தர் பாறை.
திருச்செந்தூர் - (160 கி.மீ. தெற்கு-தென்கிழக்கு):
கடலோர முருகன் கோவில். ஆறுபடை வீடுகளில் ஒன்று.
ராமேஸ்வரம் - (175 கி.மீ. கிழக்கு):
மிகப் பழமையான கோவில். ராமாயண கால வரலாறு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக