மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

நவகிரக சன்னிதிகள்

 மதுரை லிருந்து வாடகை வண்டி எடுத்துக்கொண்டு ஒன்பது நவகிரக ஸ்தலங்களுக்கு (நவ என்றாலே ஒன்பதுதானே!) யாத்திரை கிளம்பினோம்.


தெய்வ அனுகிரகம் இருந்தால் அந்தந்த கோவிலுக்குச் செல்லமுடியும் என்ற என் நம்பிக்கை நிஜமானது. மேப் வாங்கி ரெண்டு ரங்கமணிகளும் சுலமாக செல்ல ரூட் போட்டுக் கொண்டார்கள்.  எனக்கு இத்தலங்களுக்குப் போகவேண்டுமென்று வெகு நாளாக ஆசை. ஆகவே "ஓகே!" என்றேன்.


மதுரையிலிருந்து முதலில் சென்றது பிள்ளையார்பட்டி. என்ன நீங்களே டைவர்ஷன் எடுக்கிறீர்களே? என்றதுக்கு, ஆனைமுகனை வணங்கி விட்டுச் சென்றால் நல்லதுதானே என்றார்கள். அதானே!!!!
அங்கிருந்து தஞ்சாவூர் வழியாகப் போகும் போது...என்னோட "முந்திரி நீ பிந்திரி" பதிவில் வந்த அதே இடம் வந்தது. அதேபோல் முந்திரியை வறுத்து தோல் நீக்கி பாக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டவரும் (அவர்கள் பாக்காத முந்திரியா?) அதை படமெடுத்துக் கொண்டும் விலைக்கு வாங்கிக்கொண்டுமிருந்தார்கள்.நானும் ஒரு கிலோ வாங்கிக்கொண்டு அதோடு பொடிப்பொடியாக உடைந்த முந்திரியும் வாங்கிகொண்டேன். அன்று படமெடுக்காத குறை தீர படமும் எடுத்துக் கொண்டேன்.

அடுத்து தஞ்சாவூரில் காலை உணவு. அந்த ஹோட்டல் வாசலில் நான் பார்த்த தஞ்சாவூர் ஓவியம்! திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பது போல் தஞ்சாவூரிலேயே பிடித்த ஆளுயர தஞ்சாவூர் ஓவியம்!!

சந்திரனுக்கான கோவில் 'திங்களூர்' இங்கு கோவில் கொண்டிருக்கும் பிறையணி அம்மனின் மீது கார்த்திகைமாத பௌர்ணமி அன்று சந்திரனின் ஒளி அம்மன் மீது படுமாம். எங்கு பார்த்தாலும் தாமரைக் குளமாக இருக்கும் அப்பகுதியில் உள்ள தடாகத்தில் பூத்த தாமரைகளையே அர்ச்சனைக்கு மலராக வைத்திருந்தார்கள்.
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களேன்!!கும்மி கொட்டத் தயாராய் அடுக்கியிருக்கும் தாமரை மொட்டுக்கள்!!!!
அடுத்து சென்றது குருஸ்தலமாகிய ஆலங்குடி. மழையாயிருந்ததால் படமெடுக்க இயலவில்லை. சூரியனார்க்கு உரிய தலம், சூரியனார்கோவில்!
சூரியனுக்கான கோவிலின் கோபுர வாசல்
அதே கோபுரவாசல்! சூரியனார் கோவிலில்தான் மற்ற எட்டு கிரகங்களுக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கின்றன. ஒரே கோவிலில் ஒன்பது கிரகங்களுக்கும் சன்னதிகள் இருப்பது..ஒரே இடத்தில் அத்தனை பேரையும் தரிசித்து விடலாம்தானே?
இங்குள்ள குளத்தில் நீந்தும் பெரியபெரிய மீன்களுக்கு காசு கொடுத்து பொரி பாக்கெட் வாங்கி தூவி அவைகள் தாவி வந்து கொத்தித் தின்றது. மீன்கள் உள்ள குளத்தில் கால்களை வைத்தால் அவைகள் நம் பாதங்களை கொத்திகொத்தி சுத்தப் படுத்தும் என்று அறிந்திருந்தேன். நாத்தனாருக்குப் பயம். நான் கீழ் படியில் அமந்து கொண்டு ரெண்டு கால்களையும் நீருக்குள் வைத்ததுதான் தாமதம்..........! என்ன ஆச்சு? மீன்கள் எல்லாம் அலறி அடித்து ஓடிவிட்டன. ஏற்கனவே சுத்தமாய்த்தானே இருக்கு இதில் நாமென்னத்த சுத்தம் செய்வது என்று எண்ணிற்றோ என்னவோ?
திருநாகேஸ்வரம்!!!நாக தோஷமுள்ளவர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய தலம்.
29/01/09 அன்று நிகழ்ந்த ஓர் அதிசயத்தைப் படமெடுத்து வைத்திருக்கிறார்கள். பெரிது பண்ணி பார்த்தால் விபரம் புரியும்.



அன்றைய கோட்டா ஆறு கோவில்கள். கடைசியாக சென்றது கஞ்சனூர், சுக்கிரனுக்கானது. மற்றது வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாயுடையது. பக்கத்தில்பக்கத்தில் நிறைய கோவில்கள் இருந்தாலும் ஒரே மனசாக ஒன்பது கோவில்களில் ஆறு கோவில்களை முதல் நாள் முடித்துவிட்டு இரவு தங்குவதற்கு சென்ற இடம் திருக்கடையூர்!!!!!!!!ஆஹா! அபிராமி அழைக்கிறாளா...?அபிராமி...அபிராமி...!!


மீதி முன்று கோவில் தரிசனம் அடுத்தபதிவில்.



வெள்ளிக்கிழமை இரவு அபிராமி என்றன் விழுத்துணையே! என்று அவள் மடியில் சுகமான நித்திரை. காலையில் சீக்கிரம் அம்பிகையை தரிசித்துவிட்டு கிளம்பிம்பினால்தான்
மீதி மூன்று கோவில்களையும் பார்த்துவிட்டு இரவு பத்து மணிக்குள் மதுரை சென்றடைய முடியும். எனவே அதிகாலை ஐந்து மணிக்கு குளித்து முடித்து மடியாக கீழே இறங்கி
ஹோட்டல் ரிசப்ஷனுக்கு வந்தால், அங்கு கண்ட காட்சி...!
பாருங்கள்!! என்ன அழகு...!என்ன அழகு...!
அம்மையப்பனை சுத்திவந்த ஐயனை நானும் சுத்தி வந்து படமெடுத்துக்கொண்டு, வாழ்வு மிகுத்துவர வேழமுகத்தானின் ஆசியையும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
எங்களைக் கண்டுக்காமல், "போறாயே பொன்னுத்தாயீ...!" என்று தண்ணீருக்குள்ளிருந்து குமிழ் குமிழாய் குமிழியது அங்கிருந்த மீன் தொட்டிக்குள் நீந்திக் கொண்டிருந்த மீன்கள். அவைகள் ஆசையும் தீர காமேராவை அங்கேயும் திருப்பினேன். இது நம்மவல்லிக்கு.
தனம் தரும், கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் ஆத்தாளின் திருக்கோயில் வாசல்.

பிரகாரத்தில் இறங்கியதும் அங்கும் குளித்து முடித்து நெற்றியில் வீபூதி அணிந்து யானை வடிவில் வரவேற்றார் வினாயகர்! பழகலாம் வாங்க என்றுபழமோ அல்லது காசு கொடுத்துவிட்டு தும்பிக்கையை தலையில் ஏந்திக் கொள்ளவோ முடியாததால் கையில் ஒன்றும் இல்லையென்பதால் முகம் காட்ட மறுத்தார், படம் பிடிக்க.விடுவேனா? அப்படியே க்ளிக்கிக் கொண்டேன். நம்ம கர்ர்ர்ர்ர்ர்புர்ர்ர்ர்ர்ர்ர் கீதாவுக்கு.

துறுதுறுவென்று கால் மாற்றி மாற்றி ஆடிக் கொண்டிருந்த மாறியாடும் பெருமானின் தலைமகனையும் படமெடுத்துக் கொண்டேன்.....நம்ம துள்சிக்காக.
முதலில் சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தானே சக்தியை கும்பிட
வேண்டும்? அமிர்தகடேஸ்வரரை ஆனந்தமாய் கும்பிட்டுவிட்டு, பக்கத்தில் இருக்கும், ஸ்ரீபாலாம்பாள் சமேத ஸ்ரீகாலஸ்ம்ஹாரமூர்த்தியையும் வணங்க அர்ச்சகர் அழைத்துச் சென்றார். மார்க்கண்டேயனை எமதர்மனிடமிருந்து காத்தருளிய பெருமானாம்! கற்பூரம் காட்டுமுன் எமதர்மனை வதைக்கும் காட்சியை சுவாமியின் பாதத்தடியில் ஒரு ஸ்லைடிங் டோர் மாதிரி இழுத்து காட்டிவிட்டு கற்பூர ஆரத்திக்குப் பின் அந்த டோரை உடனே மூடிவிட்டார். ரொம்பநேரம் பாக்கக்கூடாதாம்!
பின் சுவாமியின் பிரகாரம் சுத்தி வரும் போழ்தில் சுமார் ஏழு அல்லது எட்டு சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடும் தம்பதிகளைப் பார்த்தோம். அவர்களுக்கு மானசீகமாக எங்கள் ஆசிர்வாதத்தை வழங்கிவிட்டு, ஆத்தாளை அண்டமெல்லாம் பூத்தாளை பாக்க அவள் சன்னதிநோக்கி நடந்தோம். (அதென்னவோ அறுபதைக் கொண்டாடும் தம்பதிகளெல்லாம் இப்போதுதான் திருமணமானவர்கள் போல் அவ்வளவு இளமையாயிருக்கிறார்கள்!!!)
தனம் தரும் கல்வி தரும் நல்லன எல்லாம் தரும் அம்மையின் சன்னதி வாசல்.
சந்நிதிக்குள் நுழைந்ததும் அப்போதுதான் அபிஷேகம் அலங்காரம் முடித்து
'சித்துசிறுக்குன்னு சிகப்பு சேலையில் சின்னஞ்சிறுமி போல், அந்த "அமரர் பெருவிருந்து" எங்கள் கண்களுக்கு விருந்தாக காட்சி கொடுத்தாள்.
"வெளிநின்ற நிந்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லைகருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே."



அங்கிருந்து திரும்பினால் கோவிலின் நந்தவனம். கண்களுக்கு குளுமையாகவெகு நேர்த்தியாக பராமரிக்கப் பட்டு யாரும் உள்ளே நுழைய முடியாதபடி கம்பிக் கதவிட்டு இருக்கிறது. குளிர்ச்சியான காட்சி!!
கொடிமர வணக்கம் செய்துவிட்டு வெளிவந்தோம்.அடுத்த கோயிலை நோக்கி விரைந்தோம்.
மங்களம் பொங்க மனம் வைக்க வேண்டிய, சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரபகவானின் திருநள்ளாறு ஸ்தலம். அதன் கோபுர வாசல்.
அன்று சனிக்கிழமையுமாதலால் கோயிலில் பெருங்கூட்டம்! அர்ச்சனை தட்டு ஏந்தியிருந்ததால் அதற்கான க்யூவில் நின்றோம். ஒவ்வொருவராக அர்ச்சனை முடிந்து வரிசை நகர வெகு நேரமாயிற்று. எங்களுக்கு முன்
கைக்குழந்தைகளோடு மூன்று பெற்றோர்கள். நேரமாக ஆக குழந்தைகள் தாகத்தால் தவித்தது. ஹையோ! நாம் தண்ணீர் பாட்டில் கொண்டு வராமல் போய்ட்டோமே!! என்று என் மனமும் தவித்தது. கடைசியில் மதிற்சுவரோரம் ஒரு குழாயில் நீர் கசிந்து கொண்டிருந்தது. ஓர் அப்பா
கம்பி வேலையைத் தாண்டிக் குதித்து ஒரு ஃபீடிங்க்பாட்டில் நிறைய தண்ணீர் பிடித்து வந்து குழந்தைகளின் தாகத்தைத் தணித்தார். சின்ன மூடியில் ஆவலோடு குடித்தைப் பார்த்தபின்தான் காஞ்சுபோன என் தொண்டையும் நனைந்தது.
வரிசையில் காத்திருந்தபோது, மதிற்சுவர் மேல் குந்தியிருந்த நந்தி என் கேமராவின் கண்ணில் பட்டார்.
சிறிது நகர்ந்த பின், இரு நந்திகளுக்கிடையே மும்மூர்த்திகளும் வெளிப்பக்கம் வேடிக்கை பார்த்தவாறு குந்தியிருந்தனர்.

கடைசி ஆனால் ஒன்று(last but one). பல சங்கீத மேதைகளை வழங்கிய
திருவெண்காடு....புதபகவானுக்கான ஸ்தலம்.
இங்கு எழுந்தருளியிருப்பது...ஸ்ரீவித்தியாம்பாள் சமேத ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமிகள். நல்ல கல்வி பெற வேண்டிக் கொள்ளவேண்டிய ஸ்தலம்.
இங்குஅக்னிதீர்த்தம், சூரியதீர்த்தம், சந்திரதீர்த்தம் என்று மூன்று தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன.
அக்னிதீர்த்தம்.
சூரியதீர்த்தம்.
மூன்று குளங்களும் படு சுத்தமாக இருக்கின்றன
ஒரு தந்தை தன் குழந்தைகள் தலையில் குளத்து நீரை புனித நீராக தெளிக்கிறார். ஆம்!அப்படித்தான் இருக்கின்றன
குளிப்பதற்குத் தோதாக, பாதுகாப்பாக குழாய்களைப் பொருத்தி வசதி செய்திருக்கிறார்கள். 'சோறு கண்ட இடம் சொர்க்கம்' என்பது போல் தண்ணீர் கண்ட இடத்தில் குளிக்க ஆசை வரும். நேரங்காலம் கருதி ஆசையை அடக்கிவிட்டேன். என்ன அழகாயிருக்கு தண்ணீரும் குளமும்!!ஹூம்!!!
கொடிமர வணக்கம். அடுத்தது...ஒன்பதாவது.
கீழப்பெரும்பள்ளம்....கேதுஸ்தலம். ஒரே மழையாயிருந்ததால் வெளியே படமெடுக்க முடியவில்லை. சந்நதியில் ஏற்ற பதினோரு அகல் வாங்கிக்கொண்டோம். மழையில் நனையாமல் முந்தானையால் மூடிக் கொண்டே சந்நதி அடைந்தோம். விளக்கேற்றி கேது பகவானை வணங்கி
எங்கள் நவகிரக தல யாத்திரையை ஒன்பது பேரின் கருணையால் திருப்தியாக முடித்தோம்.
கீழப்பெரும்பள்ளத்திலிருந்து பூம்புகார் மெயின் ரோடு வழியாக குத்தாலம் என்ற ஊரைக் கடக்கும் போது ஓரிடத்தில் உயரத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப் பார்த்தோம். இது கார்த்திகை மாசம் கூட இல்லையே சொக்கப்பனை கொழுத்துவதுக்கு...? என்றெண்ணிய போது, "அம்மா! அது எரிவாயு!! இந்த இடத்தில் கிடைப்பதை ONGC- க்காரர்கள் கண்டு பிடித்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்." என்றார் எங்கள் ஓட்டுனர்.
அதைப் பார்த்ததும் ஒரு வேடிக்கையான யோசனை!! வீணாகும் அந்நெருப்பைச் சுற்றி சாரங்கட்டி மேலே ஒரு பெரிய.....குண்டானா வைத்து ஊருக்கெல்லாம் சோறாக்கினால் எப்படியிருக்கும்????!!!!!!!
நவகிரக தல யாத்திரை நல்லபடி முடித்து நல்லாத்தானே இருந்தே.....???!!!!
அதுக்குள் பத்தாவதா எந்த கிரகம் உன்னைப் புடிச்சுது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக