மொத்தப் பக்கக்காட்சிகள்

5/17/2013

காயமே இது பொய்யடா- வெறும்காற்றடைத்த பையடா!



காயமே இது பொய்யடா- வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணு பாண்டம் ஓடடா!'


என்று சித்தர் ஒருவர் பாடினார்.

காயம்- இந்த உடல் நிரந்தரமானது என்று நினைத்து, இந்த நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்!

ஆடம்பர ஆடை- அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு, சத்தான- சுவையான உணவு, காயகல்பலேகியங்கள்- இப்படியெல்லாம் கவனம் செலுத்தி நிலையற்ற இவ்வுடலை வளர்க்கிறோம்.

இந்த உலகில் வியப்பான- ஆச்சரியமான விஷயம் எது?''

"மனிதன் அன்றாடம் தன்னைச் சுற்றி இறப்பைப் பார்க்கிறான். ஆனாலும் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானே' .

கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் பற்றி ஒரு சுவையான கதை உண்டு. உலகையே ஆள நினைத்தான் அலெக்ஸாண்டர். படை யெடுத்தான்; சமர்புரிந்தான்; பல நாடுகளை வென்றான். தான்வென்ற நாடுகள், சம்பாதித்த செல்வம், அடைந்த கீர்த்தி, மதிப்பு எல்லாவற்றையும் பற்றி ஒருமுறை நினைத்துப் பார்த்தான். "இவற்றால் நாம் அடையப் போகும் பயன்தான் என்ன? நான் இறந்து போகும்போது நம்முடன் இதையெல்லாம் எடுத்துச் செல்லப் போகிறோமா' என்ற தத்துவ உணர்வு அவனுக்குத் தோன்றியது.

அலெக்ஸாண்டரின் இறுதிக் காலம் வந்தது. அவன் மரணப் படுக்கையில் கிடக்கும்போது தன் பிரதம சேனைத் தலைவரை அழைத்துக் கூறினான்:

""நான் மரணமடையும் நேரம் வந்துவிட்டது. நான் இறந்து போனவுடன் என்னை அடக்கம் செய்யத் தயாரிக்கும் சவப்பெட்டியில், எனது இரு கரங்களும் வெளியே நீட்டும் வசதியுள்ளபடி இரு துளைகள் அமைப்பாய்'' என்றார்.

இதைக் கேட்ட படைத்தலைவன் திகைப் புற்று அலெக்ஸாண்டரை நோக்கினான். ""எதற்கென்று யோசிக்கிறாயா? நான் என் வாழ் நாளில் வென்ற நாடுகள், சொத்துகள், அரண்மனைகள், உடைமைகள் எதையும் என்னுடன் எடுத்துச் செல்லவில்லை. வெறும் கைகளுடன்தான் போகிறேன் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த ஏற்பாடு'' என்றான்.

பிறக்கும்போது என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்போது என்ன எடுத்துச் செல்லப் போகிறோம்? ஏதுமில்லையே! இதை மகான்கள், சித்த புருஷர்கள் எல்லாம் உணர்த்திச் சென்றுள்ளனர்.

இந்த சரீரம் நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்து, பற்றுகளைத் துறந்து, தெய்வ சிந்தனையுடன் வாழ்வோமாக