மொத்தப் பக்கக்காட்சிகள்

3/15/2023

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவில் - விரிவான தகவல்கள்.
Kanchana (actress) - JungleKey.in Image #50
சென்னையில் நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் 17.03.2023ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில் திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயம். இக்கோயிலுக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

அதே போல் தமிழகத்தின் தலைநகர் சென்னையின், வர்த்தகப் பகுதியான தி நகர், வெங்கட்நாராயணா சாலையிலும் ஒரு வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.

திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் கூட தி நகரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசிப்பதுண்டு. திருப்பதியைப் போல் இங்கும் நாள்தோறும் கூட்டம் அலைமோதும். விசேஷ நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்துச் செல்வதுண்டு. இவரை நினைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகை காஞ்சனா. 1960 - 70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர். திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருபவர். தற்போது இவருக்கு 84 வயதாகிறது.

இவர் திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை எல்லாம் இவருடைய உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர்.

உறவினர்கள் ஏமாற்றி அபரித்துக்கொண்ட சொத்துக்களை மீட்க நீதிமன்றப் படியேறினார். அப்போது, தான் வழக்கில் ஜெயித்தால் அனைத்து சொத்துக்களையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கு எழுதிவைப்பதாக வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக் கொண்டது போலவே, வழக்கில் வெற்றி பெற்று இழந்த சொத்துக்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார். அவர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டது போலவே சொத்துக்கள் திரும்பக் கிடைத்ததால், சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்துக்கள் அனைத்தையும் திருப்பதி தேவஸ்தனத்திற்கே எழுதிக் கொடுத்துவிட்டார்.

நடிகை காஞ்சனா தானமாக எழுதிக் கொடுத்த நிலத்தில், தி.நகர், G N செட்டி சாலையில் உள்ள ரூ.40 கோடி மதிப்பிலான காலி இடமும் அடக்கம். இந்த இடத்தில் தான் 14,880 சதுர அடியில், ரூ.7 கோடி மதிப்பீட்டில், பத்மாவதித் தாயாருக்கு கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவெடுத்தது. ராஜகோபுரம், பிரகாரம் மற்றும் முகாம் மண்டபம் என கோயில் மிகப் பிரமாண்டமாகக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, நிதியானது திருப்பதி தேவஸ்தான விதிகளின் படி நடைகொடை பெறப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 22.02.2021அன்று, காஞ்சி காமகோடி பீடாதிபதி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு, கோயில் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

தற்போது கட்டப்படும் கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்று தாயார் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும்  17.03.2023 ஆம் தேதி பத்மாவதி தாயார் கோவிலுக்கு கும்பாபிஷேகம்.

கோயிலுக்கு சொந்தமாக புஷ்கரணி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.