ஆயிரம் கோவில்களை அமைப்பதைவிடவும், ஒரு பள்ளிக்கூடம் நிறுவுவது சாலச் சிறந்தது’ என்பார்கள். அதேபோல் இன்றைக்கு ‘ஒரு சினிமா திரையரங்கை நிர்மாணிப்பதைவிட, ஒரு நூலகத்தை அமைப்பது நாட்டுக்கும், ஊருக்கும், வீட்டுக்கும் நல்லது’ எனலாம். அந்த நல்ல வேலையை இப்போது செய்து வருகிறார் 85 வயதான திரையுலகப் பெரியவர் திரு.முக்தா வி.சீனிவாசன்.
கதை, வசனகர்த்தா, திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பெரியவர் தீவிரமான காங்கிரஸ்காரர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் பிறந்தவர் முக்தா சீனிவாசன். பெரும் சிரமத்திற்கிடையே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சினிமாவில் உதவி இயக்குநராக வேலைக்கு வந்தவர். பின்னர் கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர்.
பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1947 முதல் 1957ம் ஆண்டுவரையிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
1957-ல் இவர் இயக்கம் செய்த முதல் திரைப்படம் ‘முதலாளி’ வெளி வந்தது. இந்த முதல் திரைப்படமே, ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய அண்ணன் முக்தா வி.ராமசாமி அவர்களுடன் இணைந்து முக்தா பிலிம்ஸை துவக்கி அதன் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். இதுவரையிலும் மொத்தம் 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் முக்தா சீனிவாசன். கூடவே தெலுங்கில் புகழ் பெற்ற 12 திரைப்படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டிருக்கிறார்.
இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இவர் தயாரித்து, இயக்கிய ‘சூரியகாந்தி’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவில் தந்தை பெரியார் கலந்து கொண்டது அப்போதைக்கு மிகப் பெரிய பரபரப்பு செய்தி. அந்தப் பெருமையுடன் எனதருமை கவியரசன் கண்ணதாசனின் புகழ் பெற்ற பாடலான ‘பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ பாடலை வெளிக்கொணர்ந்த இயக்குநர் என்கிற முறையில் இவர் பெரும் பாராட்டுக்குரியவர்.
‘நடிகர் திலகம்’ சிவாஜியின் உற்ற நண்பரான இவர், ‘அந்தமான் காதலி’, ‘இமயம்’, ‘பரீட்சைக்கு நேரமாச்சு’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை நடிகர் திலகத்தை நடிக்க வைத்து இயக்கினார். இதில் ‘அந்தமான் காதலியும்’, ‘இமயமும்’ நூறு நாள் ஓடிய திரைப்படங்கள்.. ‘அந்தமான் காதலி’யின் கிளைமாக்ஸ் காட்சியின் வசனங்கள் இன்னமும் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ‘சூப்பர்ஸ்டார்’ அண்ணன் ரஜினியின் ‘பொல்லாதவன்’, ‘சிவப்புசூரியன்’ திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியவரும் இவரே.
இன்றளவிலும் உலகின் மிகச் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக ‘டைம்’ பத்திரிகையால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் மணிரத்தினத்தின் ‘நாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்ததும் இவருடைய ‘முக்தா பிலிம்ஸ்’தான்..
1979-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலில் இவருடைய தலைமையில்தான் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ முதல் முறையாக உருவாக்கப்பட்டது என்பது தமிழ்த் திரைப்பட உலகத்தின் வரலாறு..
துவக்கக் காலத்தில் தீவிர கம்யூனிஸ்ட்டாக இருந்து வந்த முக்தா சீனிவாசன் அவர்கள், 1963-ம் ஆண்டு முதல் கதராடை அணிந்து காங்கிரஸ்காரராக பவனி வர ஆரம்பித்தார். பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தார். அதோடு ஜி.கே.மூப்பனாரின் பள்ளித் தோழர். அவருக்கும் சிறந்த நண்பர் இவர்தான். தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவருடைய இன்னுமொரு மிகப் பெரிய தகுதி.. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் கோஷ்டி சேர்க்கத் தெரியாத ஒரு தலைவர் உண்டென்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்..
எதற்கு இவரது வரலாறு என்கிறீர்களா..?
இவர் தற்போது செய்து வருகின்ற தன்னலமற்ற ஒரு சமூகத் தொண்டை குறிப்பிட்டுச் சொல்லும்முன் இவரைப் போன்றவர்களின் வரலாற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பட்ட முக்தா சீனிவாசன் துவக்கக் காலத்தில் இருந்தே பெரும் படிப்பாளியாகவும், படைப்பாளியாகவும் இருந்திருக்கிறார். இதன் விளைவாக கதை, வசன எழுத்தாளராகவும் உருமாறியிருக்கிறார்.
எழுத்தாளர் என்றால் சும்மா இல்லை.. இதுவரையிலும் சுமார் 350 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் 16 தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. மேலும் ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’, ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரலாறு’, ‘கலைஞர்களோடு நான்’, ‘கதாசிரியர்களோடு நான்’, ‘அறிஞர்களோடு நான்’ போன்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
இவர் எழுதிய மிக, மிக முக்கியமான புத்தகத் தொகுப்பு ‘தமிழகம் கண்ட இணையற்ற சாதனையாளர்கள்’ என்ற புத்தகம்தான். இதில் ஐந்து பாகங்களாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்து சாதனை படைத்த அத்தனை முக்கியப் புள்ளிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தொகுத்து தந்திருக்கிறார். இது நிச்சயம் மிகப் பெரும் சாதனைதான் என்பதை அந்தப் புத்தகங்களை லேசாகப் புரட்டிப் பார்த்தாலே தெரிகிறது.
மேலும் காளிதாஸனின் ‘சாகுந்தலம்’, ‘மேகதூதம்’, ‘ருது சம்ஹாரம்’, ‘வடமொழி இலக்கியம்’ போன்றவற்றை தமிழில் மொழி பெயர்த்தும் தந்திருக்கிறார். மாணவர்களுக்கான ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை’ எழுதியிருக்கிறார்.
இப்படி தனது கலையுலகப் பணிகளுக்கிடையே இப்படி எழுத்துப் பணியையும் விடாமல் தொடர்ந்து வந்திருக்கும் முக்தா சீனிவாசன், இத்தனை ஆண்டு காலமாய் படிப்பதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களை அடுக்குவதற்கே இரண்டு வீடுகள் தேவைப்படுகின்றனவாம்.
சும்மா நாமே படித்து முடித்துவிட்டு அடுக்கி வைப்பதற்காக புத்தகங்கள்..? மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்பதற்காக இந்த வயதில் ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறார் இந்தப் பெரியவர்.
தி.நகரில் வைத்தியராமன் தெருவில் இருக்கும் இவரது வீட்டின் கீழேயே ஒரு நூலகத்தைத் துவக்கியிருக்கிறார். அதில் தன்னிடமிருக்கும் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார். வெறும் நூறு ரூபாய் அட்வான்ஸாக கட்டிவிட்டால் போதும்.. சிலரிடம் அதைக் கூட கேட்பதில்லை.. ஒரு நேரத்தில் இரண்டு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். 5 அல்லது 6 நாட்கள் டைம் கொடுக்கிறார். படித்துவிட்டு மீண்டும் வந்து வேறு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் என்கிறார்.
ஆனால் ஒன்று.. திரும்பி வரும்போது யாராக இருந்தாலும் “புத்தகத்தைப் படித்தீர்களா..? முழுசாகப் படித்தீர்களா..? எனக்குச் சந்தேகமா இருக்கு.. எங்க நான் கேள்வி கேட்கிறேன்.. பதில் சொல்லுங்க..” என்று புத்தகத்தைப் பார்த்து கேள்வி கேட்டு அவர்களை அசடு வழியவும் வைக்கிறார். பார்ப்பதற்கு கொஞ்சம் காமெடியாகவும் உள்ளது.
மனிதர் நிறைய பேசுகிறார். அரசியல், பொதுவாழ்வு, சினிமா என்று எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு அடித்திருப்பதால் அத்தனையிலும் தெளிவாக இருக்கிறார்.
பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து அதீதமாக முன்னேறிக் கொண்டிருக்கும் சினிமா துறையை போதும் என்று ஒதுக்கி வைத்துவிட்டதாகச் சொல்கிறார். “என்னை மாதிரியான ஆட்களுக்கு இனிமேல் இங்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்துதான் ஓரமாக ஒதுங்கியிருக்கிறேன்..” என்கிறார் இவர்.
வயசான காலத்தில் அக்கடாவென்று ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு வேளாவேளைக்கு சாப்பிட்டுக் கொண்டு ஓய்வெடுக்காமல் இப்படி எதுக்கு சின்னப்புள்ளைத்தனமா இப்படி ஒரு வேலை..?
“மக்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரணும் தம்பி.. எல்லாரும் டிவிலேயே மூழ்கிட்டு இருக்காங்க.. வரலாறை படிக்கணும்.. நாம எப்படி இருந்தோம்..? நாடு எப்படி இருந்துச்சு..? எதனால் நமக்கு இத்தனை வசதிகள் கிடைச்சது..? இப்படி எதுவுமே தெரியாம ஒரு தலைமுறை உருவாகிக்கிட்டிருக்கு.. பார்க்கிறதுக்கும், கேக்குறதுக்கும் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு தம்பீ.. அதுக்குத்தான் இதை ஆரம்பிச்சேன்..” என்று உண்மையான வருத்தத்தோடு சொல்கிறார் பெரியவர். “ரீடிங் ஹேபிட்டை உருவாக்கியே தீரணும்.
அதுக்காகத்தான் படிச்சீங்களா.. படிச்சீங்களான்னு திருப்பித் திருப்பிக் கேக்கிறேன்..” என்று அழுத்தமாக தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.
ஆரம்பத்தில் கேள்விப்பட்ட நான், சாதாரணமாகப் போய்ப் பார்க்கலாம் என்றுதான் சென்றேன். ஆனால் அங்கிருக்கும் புத்தகங்கள் என்னை மேலும், மேலும் இழுத்துக் கொண்டுவிட.. இப்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை சென்று வந்து கொண்டிருக்கிறேன்.
மனிதருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் போச்சு.. புத்தகத்தில் கேள்விகளை கேட்கத் துவங்கி விடுகிறார். இதில் இருந்து தப்பிக்க முடியாமல் பலரும் தவிக்கின்ற சங்கடத்தை உணர்ந்தாலும், “திரும்ப இதையே எடுத்திட்டுப் போங்க.. நல்லா படிச்சிட்டு உங்களால எப்ப வர முடியுமோ அப்ப வாங்க.. போங்க..” என்று நயமாகச் சொல்லித் திருப்பி அனுப்புகிறார்.
இந்த நூலகத்தில் பல அரிய பழைய காலப் புத்தகங்கள் இருக்கின்றன. இன்னும் நிறைய புத்தகங்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், இங்கே வைப்பதற்கு இடமில்லாததால் வைக்க முடியவில்லை என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.
நூலக முகவரி
திரு.முக்தா சீனிவாசன்
5, வைத்தியராமன் தெரு
தி.நகர்
சென்னை-600 017.
5, வைத்தியராமன் தெரு
தி.நகர்
சென்னை-600 017.
பதிவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரையிலும் நூலகம் இயங்குகிறது. சீனிவாசன் ஐயா கலந்துரையாடலிலும் மிகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். பதிவர்களுக்கு இவருடனான ஒரு அறிமுகம் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். சென்று வாருங்கள்..
பொறுமையாகப் படித்தமைக்கு எனது நன்றிகள்..