தமிழகத்தில் கூலிங்கிளாஸ், ருத்ராட்சை விபூதி இவற்றின் விற்பனை அதிகமானதற்கு காரணம் ரஜினிகாந்த் என்று சில பேர் வேடிக்கையாக சொல்வார்கள்.
அது ஒருவகையில் மிகப் பெரிய உண்மையும் கூட...
அதுவரை பக்திப்படங்களில் மட்டும் தான் நடிகர்கள் விபூதிப்பட்டையுடன் தோன்றுவார்கள்.
அவற்றை எல்லாம் மாற்றி கமர்ஷியல் படங்களில் ஒரு கதாநாயகன்
ஒரு மாஸ் ஹீரோ விபூதிப்பட்டை, ருத்ராட்சையுடன் தோன்றியது இந்தியாவிலே ரஜினிகாந்த் ஒருவராகத் தான் இருக்க முடியும்.
அதுவும் திராவிடம் திராவிடம் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்...
தன்னுடைய படத்தில் தான் தோன்றும் முதல் காட்சி ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும்;உற்சாகப்படுத்த வேண்டும் என்பதில் ரஜினி எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்.
அண்ணாமலை தொடங்கி தர்பார் வரை அது நிகழும் அதிசயத்தைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.
அண்ணாமலை பாடல்பதிவின் போது
"எந்த ஊர்ல சார் சைக்கிள்ல வர்ற பால்காரன் கேன்வாஸ் ஷூ போட்டுட்டு இருப்பான்?" என்று ரஜினியைக் கேட்டாராம் இசையமைப்பாளர் தேவா. அதற்கு அருகில் இருந்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சிரித்துக் கொண்டே" பால்காரனா நடிப்பது சூப்பர் ஸ்டார் னா தாராளமா போடலாம் சார் "என்று ரஜினியை கை காட்டி சொன்னாராம்.
பால்காரன் (அண்ணாமலை) மட்டுமல்ல
கூலித் தொழிலாளி(மன்னன், உழைப்பாளி, பணக்காரன்)
பட்டறையில் வேலை செய்பவர் (ஊர்க்காவலன்)
குதிரை வண்டி ஓட்டுபவர் (முத்து)
இவர்களெல்லாம் ஷூ போட ஆரம்பித்தது ரஜினிகாந்த் புண்ணியத்தில் தான்.
பனியன் போட்டு கொஞ்சம் சட்டையைத் திறந்து விட்டாற் போல் வருவது தான் ரஜினி ஸ்டைல்.
பெரும்பாலான கதைகள் உழைத்து முன்னேறும் பாத்திரங்கள் தான். அதற்கேற்றாற் போலவே கெட்டப்களில் நுணுக்கமாக சில விஷயங்களைச் செய்திருப்பார் ரஜினி.
அந்த காலத்தில் எம்ஜிஆர் அவர்கள் ரிக்ஷாக்காரன், படகோட்டி படங்களில் போட்டு வந்த தனித்தன்மையான கெட்டப், உடைகள் நிறைய ரிக்ஷா தொழிலாளிகளையும் படகோட்டிகளையும் மாற்றியது.
விவசாயம் என்றாலே வேட்டி என்று இருந்த காலத்தில் தான் 'விவசாயி' என்று பேண்ட் சட்டை அணிந்து வந்து பாடினார் எம். ஜி.ஆர். டி ஷர்ட்கள் எம்ஜிஆர் காலத்தில் தான் பிரபலமானது.
சிரித்து வாழ வேண்டும் திரைப்படத்தில் ஒரே பாடலில் 12 உடைகள் அணிந்து வருவார்.
கூலிங்கிளாஸ் அதற்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி சில படங்களில் மட்டுமே அணிந்து நடித்திருப்பார்கள். கதாநாயகன் கண் தெரியாதவனாகவோ, மாறுவேடத்தில் வருபவனாகவோ இருந்தால் கூலிங்கிளாஸ் அல்லது ரீடிங் கிளாஸ் அணிந்து வருவார்கள்.
ஆனால் கூலிங்கிளாஸ் அணிவதை ஒரு ஸ்டைலாக ஒரு அழகாக மாற்றியவர் ரஜினிகாந்த். கூர்ந்து கவனித்தால் பல பாடல்களில் கூலிங்கிளாஸும்
காற்றில் பறக்கும் அவரது தலைமுடியுமே பாடலை வேறு ஒரு உயரத்துக்கு எடுத்து சென்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா" தொடங்கி "நான் தாண்டா இனிமேலு" வரை.
அவரைப் பார்த்து தான் எல்லா நாயகர்களும் இளைஞர்களும் பின்பற்றினார்கள். ஆனால் அவருக்கு இயற்கையாக கனகச்சிதமாகப் பொருந்தியது போல் மற்றவர்களுக்கு பொருந்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கலைச்சேவை செய்யறேன், கஷ்டப்பட்டு நடிக்குறேன், கலையை உயர்த்த போறேன்னு லாம் சும்மா சொல்லிட்டு இருக்காம தன் ரசிகனுக்கு என்ன தேவை?
எதை மக்கள் ரசிப்பார்கள்?
அவர்களை எப்படி சநதோஷப்படுத்துவது?
என்று பார்த்து பார்த்து நடித்ததால் தான் அவர் சூப்பர் ஸ்டார். சும்மா வந்தது அல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்.