மொத்தப் பக்கக்காட்சிகள்

11/26/2011

ஆப்ரஹாம் லிங்கன்


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
 •  
  • தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
  • வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
  • மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
  • குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
  • அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • .
  • தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

சொர்க்கத்துக்கு அனுமதிச் சீட்டு!


ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.


மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்தி ருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’

சித்ரகுப்தன் சிரித்தான்.

‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’

‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’

‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’

‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானா லும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’

‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’

‘‘வேறே எப்படி வாங்கறது?’’

‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’

‘‘என்ன சொல்றே நீ?’’

‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக் கான அனுமதிச் சீட்டு!’’


‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’

‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித் தான்.

பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’

‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட் டார்!’’

‘‘என்ன உத்தரவு?’’

‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’


‘‘அப்புறம்?’’

‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:


காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!


Thanks to Tenkasi co swaminathan

மதவாதிகளே! தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!


ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவ மனைக்குப் போனார்.

டாக்டரிடம் சொன்னார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.

அவர் அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினார்.

மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

மருந்து கிடைக்காமல் எங்கே அலைகிறாரோ? படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.

‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார்.

அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

படுத்திருந்தவரை தலைவலி பாடாகப்படுத்துகிறது. டாக்டரும் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.

அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.

இவர்கள் போடுகிற சத்தத்தைக் கேட்டு டாக்டர் வெளியே ஓடி வந்து பார்க்கிறார். அந்த இரண்டு பேருமே உள்ளே படுத்திருக்கிற தலைவலிக்காரருக்காக மருந்து வாங்கப் போனவர்கள்.

இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்!

மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!

இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!

தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

எது சரி


தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதைகள்

ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.


கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்

எதை விட்டுக் கொடுப்பது?

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காத


ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான்.

நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.

இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு.

போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.

ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!

ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’

ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகி றார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி விடுகிறார்கள். பற்றையே விடுகிறவர்கள் கடவுளாகி விடுகிறார்கள்!

மனிதநேயம் - தென்கச்சி சுவாமிநாதன்

thenkachi-swaminathan
இப்பொழுதெல்லாம் மிருகங்களைவிட மனிதனிடம் தான் ஜாக்கிரதையாக பழக வேண்டி உள்ளது. ஏனென்றால், மிருகங்கள் என்ன செய்யும் என்பது தெரியும். எனவே அதற்காக முன்கூட்டியே தயாராகிவிடலாம்.

ஆனால் மனிதன் அடுத்து என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.

என்ன தான் மதம் மனித நேயத்தை குலைக்கிறது என்றாலும், மதமோ, கட்சியோ, அரசியலோ எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் முக்கியம் என்பதற்கு இன்றைக்கும் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உதாரணமாக உள்ளது.

மனித நேயம் குறைந்து வருவதற்கு மனிதர்கள், குறிப்பாக தமிழர்கள் அறிவு வசப்படுவதற்கு பதிலாக உணர்ச்சி வசப்படுவது தான் காரணம்.

பெரும்பாலும் மனிதநேயம் எங்கு குறைகின்றது என்றால், படித்தவர்கள், அரசியல்வாதிகள், பெரிய மனிதர்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் மனிதநேயம் தேய்கிறது.

அவசர வாழ்க்கை, கோபம், டென்ஷன், கர்வம் கொள்ளுதல் சகிப்புத்தன்மை குறைவு, பொறாமை போன்றவை தான் மனித நேயம் குறைய வழிவகுக்கிறது.

இதனால் மனிதனுக்கே மனிதனை அடையாளம் காட்ட வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே


ஒருவருக்குத் துன்பங்கள் ஏற்படப் பெரும்பாலும் காரணம் அவரது மனப்பான்மையே ஆகும். பிறர் தனக்குத் துன்பமிழைத்த போதும் தன் மேல் அவதூறு சொன்னாலும் அவற்றால் மனம் கெடாமல் தைரியத்தைக் கைக்கொண்டு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உலகில் வாழ முடியும். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று அறிஞர் அண்ணாதுரை அறிவுறுத்தியதும் இக்கொள்கையையே ஆகும்.

அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளைக் கையாண்டு கவிஞர் கண்ணதாசன், "எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும்" என்று மொழிந்த பாடல் மிகவும் பிரசித்தமானது. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தேனினும் இனிய தன் குரலால் சுமைதாங்கி எனும் தமிழ்த் திரைப்படத்துக்காகப் பாடிய இப்பாடலைத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் சென்ற நிலையில் தற்செயலாகக் கேட்ட ஒருவர் தன் தற்கொலை எண்ணத்தை விடுத்து வாழ்ந்து பார்த்து விடுவது எனும் திடமான முடிவுக்கு வந்தது உண்மைச் செய்தி.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

திரைப்படம்: அருணோதயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி உன்
குணத்துக்குத் தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவன் வந்து விட்டான்
கடலின் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தையில்லை அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

11/22/2011

தாழ் நிலைச் சர்க்கரை ,அதன் அறிகுறிகள் என்ன ?
தாழ் நிலைச் சர்க்கரை ,அதன் அறிகுறிகள் என்ன ?

இரத்தத்தில் சர்கரையின் அளவு சாதாரண நிலைக்கு மிகவும் கீழே குறையும் போது தாழ் நிலைச் சர்க்கரை நிலை ஏற்படுகிறது. இது சாதாரணமாக வயிறு காலியாக இருக்கும் நேரங்களில் உண்டாகும். இதைப் பற்றி சர்க்கரை நோய்க்கான மாத்திரை, இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் நோயாளிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
அறிகுறிகள்:
மிக அதிகமாக வேர்த்தல்
அதிக சோர்வு
மயக்கம்
தலைவலி
பார்வை மங்குதல்
மற்றும் உதடு மரத்தல்
உடனடியாக கவனிக்காவிட்டால்,நோயாளிகள் சுய நினைவை இழக்க நேரிடும்.
கோமா போன்ற நிலையினை அடைய நேரிடும்.
உடனடியாக செய்ய வேண்டியவை: கீழ்கண்ட ஏதாவது சாப்பிடவும்.
*இரண்டு ஸ்பூன் சர்க்கரை அல்லது க்ளுகோஸ் அல்லது ஒரு க்ளாஸ் சர்க்கரை கலந்த காபி,டீ, பால் , பழச்சாறு ,அல்லது இரண்டு மிட்டாய் (சாக்லேட்)
*அடுத்த அறை மணி நேரத்திற்குள் திட உணவு எதாவது சாப்பிடவும்.
*மருத்துவரின் ஆலோசனைப்படி தங்கள் மருந்து மற்றும் இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்

தாராளமாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள் என்னென்ன ?

அனைத்து காய்கறிகளும் (கிழங்கு வகைகள்,பீட்ரூட்,தேங்காய் நீங்கலாக)
 
அனைத்து கீரை வகைகள்
சோடா,நீர்,மோர்,சர்க்கரை போடாத பால் அல்லது
காபி, தேநீர் மற்றும் சூப் வகைகள்.
சர்க்கரை போடாத எலுமிச்சை மற்றும் தக்காளி ரசம்.
சாப்பாடு நேரம் நீங்கலாக மாற்ற நேரத்தில் பசியை அடக்க, மோர்,தக்காளி ஜூஸ்,வெஜிடபிள்
சாலட்,  அனுமதிக்கப்பட்ட பழ வகைகளில் எதாவது ஒன்று

11/21/2011

புகையிலை ஒழிப்புபெரும்பாலான மக்களுக்கு புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது என்பது தெரிந்திருந்த போதும், புகையிலையினால் உண்டாகும் தீமையின் அளவு குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை எனலாம். புகையிலை நிறுவனங்கள், புகையிலைப் பெட்டிகளை, பொட்டலங்களை அழகாக, வசீகரமாகத் தயாரித்து வழங்குவதன் மூலமும் வித்தியாசமான விளம்பர உத்திகள் பலவற்றின் மூலமும் புகையிலை விற்பனையைப் பெருக்கி, உடல்நலத்திற்கு புகையிலை உண்டாக்கும் தீமைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியாதவாறு திசை திருப்புகின்றன.

புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் தீமைகளை மக்கள் உணருமாறு செய்யச் சிறந்த சிக்கனமான, பயனுள்ள வழி, புகையிலைப் பெட்டிகள் / பொட்டலங்களின் மீது புகைப்பதனால் வரும் தீங்கினைக் குறித்த எச்சரிக்கை செய்வதோடு, படங்களோடு கூடிய எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்படுவது மிகுந்த பலனளிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மக்கள், புகைப்பிடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும் முழுமையாக நிறுத்திக்கொள்ளவும் இந்த எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் பெரிதும் உதவுகின்றன. படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கும் எச்சரிக்கைப் படங்கள், தெளிவான உடனடியான எச்சரிக்கையைத் தருகின்றன எனலாம். இத்தகு எச்சரிக்கைப் படங்களும் வாசகங்களும் புகையிலைப் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்,அதிலிருந்து விடுபடவும் வழிவகுக்கின்றன. எச்சரிக்கை படங்களின் மூலம் எச்சரிக்கை விடுப்பது படிப்பறிவில்லாதவர்களுக்கும் உடனடியாக செய்தியைத் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. புகையிலைப் பெட்டியின் மீது இருக்கும் படமும் வாசகங்களும் புதிய வாடிக்கையாளர்களுக்குப் (குறிப்பாக இளைஞர்களுக்கு) புகையிலையின் மீது ஏற்படும் நாட்டத்தைப் பெரிதும் குறைக்கின்றன. புகைப்பிடிப்பதினால் வரும் பெரும் தீங்கு குறித்த எச்சரிக்கையை தெரிவிக்க வேண்டியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தியதாலும். 2009இல் நடத்தப்பட்ட புகையிலை ஒழிப்பு நாள் முகாம் பின்வரும் இன்றியமையாத செய்தியின் மீதுத் தன் கவனத்தைக் குவித்தது. அதாவது, உடல்நலம் குறித்த எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் புகையிலைப் பெட்டியின்மீது அச்சிடுதல் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் புகைப்பிடிப்பதனால் வரக்கூடிய மிகப்பெரிய தீங்கினை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உண்டாக்குவதற்கும் புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் இந்த எச்சரிக்கை வாசகங்களும் படங்களும் உதவுகின்றன


 • முயன்றால் தடுக்கக்கூடிய இறப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய காரணங்களில் ஒன்று புகையிலை. ஒவ்வொரு வருடமும் 5 மில்லியன் மக்களுக்கு மேல் புகையிலையினால் மக்கள் இறக்கின்றார்கள். ஒரு ஆண்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ், மலேரியா, காசநோய் போன்ற அனைத்து நோய்களிலும் இறக்க கூடியவர்களைவிட புகையிலையால் இறப்பவர்களே அதிகம்.
 • புகையிலை மட்டுமே சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு, தயாரிப்பாளரின் எண்ணப்படியே உபயோகிப்பவர்களைக் கொல்லும் நுகர்பொருளாகும். புகைபிடிப்பவர்களில் பாதிபேர் புகையிலை தொடர்பான வியாதிகளினாலேயே இறக்கிறார்கள். இரண்டாம் நிலை புகைப் பிடிப்பவர்களுக்கும், (அதாவது புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினை சுவாசிப்பவர்கள்) புகையிலையினால் ஏற்படும் எல்லா நோய்களும் ஏற்படுகிறது.
 • புகையிலை நிறுவனங்கள் மாதந்தோறும் 10 மில்லியன் டாலர் அளவு பணத்தைச் செலவு செய்து புதிய வாடிக்கையாளர்களை புகைப்பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றனர். மேலும் புகைப்பிடிப்பவர்கள் அப்பழக்கக¢தை, விட்டுவிடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களின் மூலமாகவும், கவனமாக, அழகாகவும், தயாரிக்கப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் மூலமாகவும், புகையிலை நிறுவனங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பி, புகையிலை மற்றும் அதனால் செய்யப்படும் பொருள்களினால் ஏற்படும் உயிர்கொல்லித் தீமைகளை மக்கள் மறந்துபோகும்படி செய்கின்றன.
 • புகையிலைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) உருவாக்கிய நெறிமுறைகளின்படி, புகையிலையினால் ஏற்படும் விளைவுகளை ஒழிக்க  எச்சரிக்கை படங்கள் மற்றும் வாசகங்கள் மூலம் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.சர்வதேச ஒப்பந்தப்படி இந்நோக்கினை எட்ட, எம்பவர் (MPOWER) தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்துகிறார்கள்.
 •  உடல்நலம் குறித்த எச்சரிக்கைகள், குறிப்பாக படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள், புகையிலை உபயோகிப்பவர்களை அப்பழக்கத்தை விட்டு விடவும், புகைப்பிடித்தலுக்கு அடிமையாகாமல் இருக்க வைக்கவும் உதவுகின்றன. ஆனாலும், புகைபிடிப்பவர்களில் பத்தில் ஒன்பது பேர் புகையிலைப் பெட்டியின் மீது எவ்விதமான எச்சரிக்கையும் தேவையில்லாத நாடுகளில்தான் வாழ்கிறார்கள்.
 • நிகோடின் என்பது மிகமோசமாக அடிமைப்படுத்தக் கூடிய போதைப் பொருளாகும். மக்களுக்கு அதனுடைய தீமைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு உண்டாக்கும் பயணத்தில் நாம் நீண்டதூரம் செல்லவேண்டும். அதனால் புகையிலைப் பெட்டிகளின் மீது எச்சரிக்கை வாசகங்களையும் படங்களையும் அச்சிடுதல் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் குறைத்து மக்களின் வாழ்க்கையைக் காக்க எளிய, சிக்கனமான ,பயனுறு வழியாகும்.
 • posted by: http://www.indg.in/ • பெண் சிசுக்கொலை


 • அண்மைக்கால யூனிசெஃப் அறிக்கையின்படி இந்திய நாட்டில் 50 மில்லியன் சிறுமியரும், பெண்களும் தொடந்த பெண்பால் வேற்றுமையுணர்வு காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.


 • உலகின் பல நாடுகளில் ஏறத்தாழ 100 ஆண் குழந்தைகள் பிறக்கும்போது 105 பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.


 • ஆனால் இந்தியாவில் 100 ஆண்களுக்கு 93க்கும் குறைவாகவே பெண்கள் இருக்கிறார்கள்.

 • இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2000 பெண் சிசுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கருவிலேயே கலைக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றன

 • ஏறத்தாழ சமமாக இருக்கவேண்டிய பிறப்பு இறப்பு விகிதத்தில், அதிகரித்துவரும் பெண்கருக்கொலை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் குழந்தைகளும் பெண்களும் வன் புணர்ச்சிக்கு உள்ளாவர். ஒரு பெண்ணைப் பலர் மனைவியாகப் பங்கிட்டுக்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளன. இச்சூழல் ஏற்படின் அது சமுதாயப் பண்பாட்டினை, மதிப்பினைப் படிப்படியாகக் குறைத்து நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம்

  பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த மனநிலை வறுமையிலிருக்கும் குடும்பங்களில் மட்டும் நிலவவில்லை. இத்தகைய பாலின வேறுபாடு, வெறுப்பு தோன்ற சமுதாய விதிகளும் கலாச்சார நம்பிக்கைகளுமே காரணம். இத்தகைய சமுதாய விதிகளை மாற்றியமைப்பதன் மூலமாக மட்டுமே பெண் சிசுக் கொலை என்னும்  நிலையை மாற்ற முடியும்.
  இந்திய நாட்டில் பெண் குழந்தைகளை விரும்பாத அல்லது தேர்ந்தெடுக்காத நிலைக்குச் சமுதாயப் பொருளாதாரக் காரணங்களைக் கூறலாம். இந்திய நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பின்வரும் மூன்று செய்திகளைப் பெண் குழந்தைகளை ஒதுக்குவதற்குக் காரணங்களாகக் கூறுகின்றன. அவை 1. பொருளாதாரப் பயன்பாடு, 2. சமுதாய கலாச்சாரப் பயன்பாடு மற்றும் 3. மதச் சார்புடைய நிகழ்வுகளின் பங்கு என்பனவாம்.
  • மகளைவிட மகன் வயல்வெளியில் வேலை செய்து அல்லது குடும்ப வியாபாரத்தை கவனித்து பொருளீட்டுவதினாலும், முதுமைக் காலத்தில் பாதுகாப்பும் ஆதரவும் தருவதாலும், பொருளாதாரப் பயன்பாடு கருதி மகனை இந்திய மக்கள் விரும்புகின்றனர்.
  • திருமணத்தின் மூலம் மகன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள மனைவியை அழைத்து வருகிறான். மேலும் வரதட்சணை மூலம் பொருளாதாரத்தையும் உயர்த்துகிறான். ஆனால் மகளோ திருமணத்தின் மூலம் வீட்டை விட்டுப் பிரிவது மட்டுமின்றி வரதட்சணையாகப் பணமும் வீட்டிலிருந்து எடுத்துச் செல்கிறாள்.
  இந்திய நாட்டிலும் தந்தைக்குப்பின் மகன் குடும்பத்தலைவன் என்ற அமைப்பிருத்தலால் ஒரு மகனாவது குடும்பத்தில் இருக்கவேண்டும். பல மகன்கள் இருப்பது குடும்பத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தருகிறது.
  • பெற்றோர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவர்களின் அஸ்தியைக் கரைத்து, இறந்தவர் இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைய வழிகோலும் உரிமையும் வாய்ப்பும் ஒரு மகனுக்கு மட்டுமே இருப்பதால் இந்து மதத்தினர் ஆண் குழந்தையையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் வேண்டாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பது இதுவேயாகும்.
  சமுதாயத்தைச் சிரழிக்கும் இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் எண்ணப் போக்கை மாற்றவும் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல சட்ட திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது. உதாரணமாகக் கிழ்காணும் சட்டங்களைக் கூறலாம்.
  • வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம் 1961
  • கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT Act.
  • பெண் கல்விக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுரிமைக்கு ஆதரவான சட்டம்
  • பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை/பங்கு தரும் சட்டம்.

  காரில் கியர் மாற்றுவது எப்படி?- டிப்ஸ்

  கார் ஓட்டும் கலைக்கு அடிப்படையானது கியர் மாற்றும் தந்திரம். எரிபொருள் சிக்கனத்திற்கு கியர் மாற்றும் முறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வேகத்திற்கு தகுந்தாற்போல் காரில் கியர் மாற்ற தெரிந்துகொண்டால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதோடு, கார் ஸ்மூத்தாக செல்லும்.

  இல்லாவிட்டால், எவ்வளவு காஸ்ட்லியான காரை வாங்கி ஓட்டினாலும், கட்டை வண்டியில் போவதற்கு சமமான அனுபவத்தையே பெற முடியும். மேலும், ஸ்மூத்தாககவும், வேகத்திற்கு சரியான கியரிலும் ஓட்ட பழகிக்கொண்டால் கியர்பாக்ஸ் மற்றும் எஞ்சின் தீர்க்க ஆயுளை பெறும்.

  மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களில் முதல் கியர் போட்டவுடன் கார் 10 முதல் 15 கி.மீ வேகம் எடுக்கும் வரை அடுத்த கியரை மாற்ற வேண்டாம். 10கி.மீ வேகத்திற்கு மேலும் 15 கி.மீ வேகத்திற்குள்ளும் இரண்டாவது கியரை மாற்றவும்.

  இரண்டாவது கியருக்கு ஒரு சில கூடுதல் சிறப்புகள் உண்டு. அவசர காலத்தில் இரண்டாவது கியரை பிரேக் போன்று பயன்படுத்தலாம். அவசர நேரத்தில் கிளட்ச் பிடிக்காமல் இரண்டாவது கியரை மாற்றினால், கார் உடனடியாக சடன் பிரேக் அடித்தது போன்று நின்றுவிடும். இது விபத்துக்களிலிருந்து தப்பிக்க உதவும். இதற்கு எஞ்சின் பிரேக்கிங் என்று கூறுவார்கள்.

  தவிர, வளைவுகளில் திரும்பும்போது இரண்டாவது கியரில் திரும்ப வேண்டும். இது மிகவும் பாதுகாப்பானதும், சரியானதும் கூட. முதல் இரண்டு கியரை மாற்றுவதில் நீங்கள் திறமைசாலிகளாகிவிட்டாலே போதும். வேகத்தை கூட்ட வேண்டும் எனும்போது அடுத்தடுத்த கியர்களை மாற்றிக்கொள்ளலாம்.

  மேலும், ஒரு குறிப்பிட்ட கியரிலிருந்து அடுத்த கியரை மாற்ற வேண்டும் என்பதை எஞ்சினிலிருந்து சப்தத்தை வைத்தும் அறிந்துகொண்டு அதற்கேற்ப கியரை மாற்றலாம். மூன்றாவது கியர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மிதமான வேகத்தில் ஓட்டுவதற்கு சிறந்தது.

  தவிர, கார் கேஜில் இருக்கும் ஆர்பிஎம் மீட்டரில் காண்பிக்கும் எஞ்சி்ன் வேகத்தை வைத்தும் சரியான கியரில் காரை இயக்கமுடியும். டாப் கியரில் செல்லும்போது பொதுவாக ஆர்பிஎம் மீட்டரில் எஞ்சின் வேகம் 3,000 முதல் 3,500 ஆர்பிஎம்மாக இருக்கும்.

  தொடர்ந்து நாம் வேகமாக செல்லப்போகிறோம் என்று தெரிந்தவுடன் டாப் கியரை மாற்றலாம். இது காருக்கு கார் மாறும். பொதுவாக வேகத்தை குறைத்து ஓட்ட வேண்டும் எனும்போது இரண்டாவது கியரை மாற்றவும். முதல் கியருக்கு மாற்ற வேண்டாம். முதல் கியர் காரை கிளப்பும்போது மூவ் செய்யும்போது மட்டும் பயன்படுத்தவும்.

  ரிவர்ஸ் கியரை மாற்றும்போது கிளட்ச் மற்றும் ஆக்சிலேட்டரை சரியான அளவிலும், கவனமாகவும் கொடுக்கவேண்டும்.

  சரியான வேகத்தில் கியரை மாற்ற பழகிக்கொண்டால், கார் ஓட்டுவதில் நீங்கள் பாதி எக்ஸ்பர்ட் என்பது மட்டுமல்ல, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாக அமையும்.

  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் 'இன்ஸ்டன்ட்' சோறு - புதுவகை அரிசி அறிமுகம்!


  சமைக்காமல் அப்படியே சாப்பிடும் 'இன்ஸ்டன்ட்' சோறு - புதுவகை அரிசி அறிமுகம்! டெல்லி: வேக வைக்காமலேயே சாப்பிடக்கூடிய அரிசி வகையை ஒரிசாவில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர்.

  'அகோனிபோரா' என்ற பெரிலான இந்த அரிசி வகையை சமைப்பதற்கு பதிலாக, அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தாலே போதும். சாப்பிடுவதற்கான பதம் அதில் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

  கட்டாக்கில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த அரிசிக்கான சோதனைகள் நடந்து வருகின்றன.

  'கோமல் சாவல்' இலக ரகத்தைச் சேர்ந்த இந்த அரிசி, அசாமின் திதாபர் நெல்லாராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டது.

  பொதுவாக அரிசியில், சர்க்கரை மற்றும் கெட்டித் தன்மையைக் கொடுக்கக்கூடிய 'அமிலோஸ்' 20 முதல் 25 விழுக்காடு வரை இருக்கும்.

  இந்த 'இன்ஸ்டன்ட் சோறு' அரிசியில் அமிலோஸ் அளவு 4.5 விழுக்காடு மட்டுமே உள்ளது. இதனால், கெட்டித்தன்மை குறைவாகவும், நீரில் ஊற வைத்தே சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

  நீரிழிவு நோயாளிகள் பலர் அரிசி வகைகளை கண்டாலே பயந்து தவிர்த்து வரும் நிலையில், அவர்களுக்கு இந்த வகை அரிசி பயன்படுமா என்பது குறித்தும், அனைத்து சீதோஷண நிலையில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அரிசி ஒத்து வருமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Thaks to One India.in

  உங்கள் பிள்ளைகளை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றுவது எப்படி?
  தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக உலகமே சுருங்கி உள்ளங்கையில் அமர்ந்துள்ளது. இணையத்தின் பயன்பாட்டினால் எந்தளவிற்கு நன்மை உண்டோ அதே அளவிற்கு தீமையும் உண்டு. இன்றைக்கு பள்ளி மாணவர்கள் கூட மடிக்கணினி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எனவே பாடத்திற்கு தேவையான விசயங்களை அவர்கள் இணையத்தின் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இணைய பயன்பாட்டின் மூலம் எளிதில் ஏமாற்றத்திற்குள்ளாவோரும் உள்ளனர். சைபர் குற்றங்கள் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகமாகி வருகின்றன.

  இந்தியா இரண்டாவது இடம்

  உலக அளவில் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் ஏமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் 76 சதவிகிதம் பேர் சைபர்கிரைமால் பாதிக்கப்படுகின்றனர் என்று நார்டன் சைபர்கிரைம் ரிப்போர்ட்: தி ஹ்யூமன் இம்பாக்ட் என்னும் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களால் 12 சதவிகித குழந்தைகள் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமையாகும்.

  பாதிப்பிற்கு காரணம்

  இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகள் பிறரிடம் சாட் செய்யும் போது 62 சதவிகிதம் பேர் தங்களின் சொந்த விசயங்களை தெரிவிக்கின்றனராம். 58 சதவிகிதம் பேர் தங்களின் இருப்பிட முகவரியை பரிமாறுகின்றனராம். இதுவே சைபர் குற்றவாளிகளுக்கு தோதாக போய்விடுகின்றது. எனவே இன்டர்நெட் பயன்படுத்தும் குழந்தைகளை கண்கணித்து சொந்த விசயங்களையோ, முகவரியையோ கேட்கும் நபரிதவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

  குழந்தைகளுடன் விவாதியுங்கள்

  தினமும் குழந்தைகளிடம் சில மணிநேரமாவது பேசவேண்டும். ஆன்லைனில் யாரிடம் அவர்கள் சாட் செய்கின்றனர். தெரிந்த நபரா? நண்பர்களா? அல்லது முகம் தெரியாத புதுமுகமா? என்னென்ன உரையாடுகின்றனர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களின் சம்பாசனைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் முகம் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க முடியும்.

  கண்காணிப்பு அவசியம்

  சைபர் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதற்கென உள்ள நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது பெற்றோரின் கடமை.

  கணினியின் திரை எப்பொழுதுமே நம்முடைய கண்ணில் படுமாறு வைத்திருப்பது அவசியம். அப்பொழுதுதான் தேவையற்ற வெப்சைட்கள், குழந்தைகளை திசை திருப்பும் படங்கள், நமக்குத் தெரியாமல் சிறுவர்கள் தவறான வெப்சைட் முகவரிகளின் பக்கம் திரும்பமாட்டார்கள்.

  பெண் குழந்தையா கூடுதல் கவனம்

  பெண் குழந்தைகள் சாட் செய்யும் போது கவனமாக இருக்க வலியுறுத்த வேண்டும். வயதானவர்கள் கூட பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றிய வாய்ப்புண்டு. மெயில் அனுப்பும் முறைகளையும், பைல்களை அட்டாச் செய்யும் முறைகளையும் விவரம் தெரியும் வரை கற்றுத் தராமல் இருப்பது நல்லது. அதேபோல் ப்ளாக்குகளில் உள்ள படங்களையும், மெயில் முகவரிக்கு வரும் இணைப்புகளையும் கவனமாக கையாள வேண்டும். வைரஸ்கள் உங்கள் கம்யூட்டரையே முடக்கிவிடும் ஜாக்கிரதை.

  தற்பொழுது நடைபெறும் சைபர் குற்றங்கள் பலவும் சிறுவர்கள் தரும் தகவல்களைக் கொண்டே நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை நடத்திய "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:

  இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.

  உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே உங்கள் கணினியை பாதுகாக்க தேவையான பாதுகாப்பு மென்பொருட்களை பொருத்துவது அவசியம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க முடியும்.

  Posted by : That'stamil One India