மொத்தப் பக்கக்காட்சிகள்

6/14/2014

மன நிம்மதி


சிவபெருமான் உலகை எல்லாம் படைத்துக் கொண்டிருந்தாராம். அவருக்கு உதவியாக உமாதேவியார் இருந்தாராம்.

எல்லா தாவரங்கள், நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள், விலங்குகள் என்று எல்லாவற்றையும் படைத்துவிட்டு இறுதியாக தனது அம்சமாக மனிதனைப் படைத்தாராம்.

அவனைப் படைத்து விட்டு தன்னருகே உள்ள ஒவ்வொரு பாத்திரங்களிலும் உள்ள ஒவ்வொரு விஷயமும் மனிதன் அடையும் படிக்கு அருளினாராம்.
 முதலில் செல்வங்களை அடையும்படிக்கு செல்வம் உள்ள பாத்திரத்தில் உள்ள செல்வங்களை அவன்மீது தெளித்தாராம்.
பிறகு கல்வி, தைரியம், சந்தோஷம் என்று அங்கிருந்த பாத்திரங்களில் உள்ள எல்லாவற்றையும் அவன் மீது வர்ஷித்து அவையெல்லாம் அவனுக்கு கிடைக்கும்படிக்கு அருளினாராம்.

எல்லாவற்றையும் கொடுத்தாலும் ஒரு பாத்திரத்தை மட்டும் கொடுக்காமல் இருக்கவே, உமா தேவியார் சுவாமி ''இந்த பாத்திரத்தில் என்ன இருக்கிறது ? இதை மட்டும் ஏன் மனிதனுக்கு கொடுக்காமல் ஒதுக்குகிறீர்கள் ? ஆறறிவு, வடிவம், இத்யாதி செல்வங்களையெல்லாம் எல்லாம் கொடுத்த நீங்கள் இதை மட்டும் கொடுக்காமல் விட்டதென்ன ? அப்படி அதில் என்னதான் இருக்கிறது ? என்று கேட்கவும், சிவபெருமான் புன்னகைத்தபடி ''தேவி அதில் உள்ளது நிம்மதியாகும்'' என்கிறார்.

உமா தேவியும் அதை ஏன் கொடுக்கவில்லை என்று மீண்டும் வினவ, சிவபெருமான் ''தேவி அதைக் கொடுத்துவிட்டால் மனிதன் என்னை மறந்துவிடுவான் என்பாராம்.''

இது கதைதான் என்றாலும் மிகப் பெரிய உண்மையை உணரவைக்கும் கதையாகும்.

நாம் வாழும் உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் உற்று நோக்கும் போது இந்த உண்மை புரியும்.

மன நிம்மதி என்பது பூர்வ புண்ணியத்தினால்தான் கிடைக்கும் என்று புதிய கதையெல்லாம் சொல்வார்கள்.

 கிட்டத்தட்ட உண்மை நிலையும் அவர்கள் கூற்றுக்கு சாதகமாகவே இருக்கிறது.

 மன நிம்மதி என்பது அரிதாகவே இருக்கிறது.

நம் எல்லோருடைய அனுபவமும் இதுதான். கல்வி, பதவி, சொத்து, அந்தஸ்து என்று ஒவ்வொன்றாக கிடைக்கக் கிடைக்க நிம்மதி என்பது விலகிப் போய்க் கொண்டே இருக்கிறது.

ஆனால் இதுவே தீர்மானமான முடிவல்ல. நாம் ஆழ்ந்து சிந்தித்தோமேயானால் ஆரோக்யம், சக்தி, அறிவு, உணர்வு, உற்சாகம், சந்தோஷம் எல்லாம் நம் வாழ்வில் அளவுக்கு அதிகமாகவே கொட்டிக் கிடக்கிறது.

அதே போல் மன நிம்மதியும் நம்மிடம் ஏராளமாகவே இருக்கிறது.

ஆனால் அதை அடையும் வழிமுறைகளை நாம் பின்பற்றுவதில்லை.

 நம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் முறை, இயற்கைக்கும், இறைவனுக்கும் முரணான செயல்பாடுகள் என்ற இவற்றை விட்டு கொஞ்ச கொஞ்சமாக விலகி வருவதால் ஆரோக்யம், சந்தோஷம், மன நிம்மதி எல்லாம் பறிபோகிறது.

இதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவற்றிற்கு எல்லாம் அடிப்படை நம் மனமும், எண்ணமும், உணர்வுகளும், செயல்களுமே ஆகும். எனவே அதற்குத் தகுந்தாற் போல, நம இயல்புக்குத் தகுந்தாற் போல வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, இயற்கையோடு ஒன்றி, இறையாற்றலை உணர்ந்து மெய்யறிவு பெற்று மனநிம்மதியோடு வாழ வாழ்த்துகிறேன்.

நான் வேண்டிக் கொள்வதெல்லாம், எல்லா மக்களும் ஆரோக்யம், சக்தி, உற்சாகம், சந்தோஷம், மனநிம்மதி பெற்று, நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ வேண்டும் என்பதே.வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

6/12/2014

வந்தாச்சு ரெடிமேட் வீடுகள் – ஒரு நாளில் நான்கு வீடு கட்டலாம்

ஒரு வீடு கட்ட எவ்வளவு காலம் ஆகும்?


நான்கு மாதத்தில் இருந்து ஆறு மாதம் வரை ஆகாலம். அதற்கும் மேலும்கூட காலம் ஆகும். இந்தப் புதிய தொழில் நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தினால் ஒரு நாளில் நான்கு வீடு கட்டலாம் என்கிறார் கெவின் மூர். நியூசிலாந்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளரான இவர், இந்த ரெடிமேட் வீட்டுத் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார். கட்டுமானத் துறையில் ஆகும் செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரு புதிய தொழில்நுட்பம் கொண்டு வர வேண்டும் என மூர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தனது பல ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1985-ம் ஆண்டு அவர் Insulated Precast Concrete panelsகளை உருவாக்கினார்

. இந்தப் பேனல்களின் மூலம் அவர் வீட்டையே ரெடிமேடாக உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொழில்நுட்பத்திற்காக அவர் 1989-ம் ஆண்டு உரிமமும் பெற்றுள்ளார். இதன் மூலம் முழு வீட்டையும் ஃபேக்டரியிலேயே உருவாக்கிவிட முடியும். வீடு கட்டப்படும் இடத்தில் கொண்டு வந்து இறக்கினால் போதும். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தங்கும் விடுதிகள், சிறிய அறைகள் தொகுப்பு வீடுகளுக்கே பொருத்தமானதாக இருக்கும். பெங்களூரு வளர்ச்சி நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 12 ஏக்கர் நிலத்தில் 1520 தொகுப்பு வீடுகளைக் கட்டியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் வீடு கட்டுவது சுவாரஸ்யமானதாக இருக்கிறது. 

வீட்டுக்கான தரை, ஜன்னல்கள், சமையல் அறை எல்லாமும் தொழிற்கூடத்திலேயே தயாரிக்கப்பட்டு விடுகின்றன. முழு வீட்டையும் கட்டு மானத் தலத்தில் வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கி வைத்தால் போதும். அறைகள் மட்டுமல்ல. எலக்ட்ரிக்கல் வயரிங், ஸ்விட்ச், பிளம்பிங் வேலைகளையும் தொழிற்கூடத்திலேயே முடித்துவிடுகிறார்கள். மாடிப் படிகளையும் தேவையான அளவுக்கேற்ப முன்பே தருவித்தால் அதையும் தொழிற்கூடத்திலேயே தயாரித்து, கொண்டு வந்துவிடுகிறார்கள். ரெடிமேட் வீடு என்பதால் அது பாரம்பரிய கட்டிடத்தை விட உறுதி குறைந்தது என நினைக்க வேண்டாம். இம்முறையில் உருவாக்கப்படும் தூண்கள் கான்கீரிட், கம்பிச் சட்டகங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால் இது பாரம்பரிய முறையைவிடவும் உறுதியானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். மேலும் இந்தத் தூண்கள் அதிக எடையைத் தாங்கக் கூடியது. பூகம்பம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையிலும் இதன் அமைப்பு இருக்கும். 95 சதவீத வேலைகள் தொழிற்கூடத்திலேயே முடிந்துவிடும் என்பதால் பொருட்செலவு பாரம்பரிய முறையைக் காட்டிலும் மிகவும் குறைவு. வெளிப்புறச் சுவர்கள் 4 அங்குல கனமும், உட்புறச் சுவர்கள் 3 அங்குல கனமும் கொண்டவை. 

இந்த வகை வீடுகள் சமூகத்தின் மிகப் பின் தங்கியுள்ளவர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் மூர், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வசதியான வீடுகளும் கட்ட முடியும் என்கிறார். ஆஸ்திரேலியாவில் சாலையோர உணவு விடுதிகள் இந்தத் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கியுள்ளனர். நியூசிலாந்தில் வீட்டு வசதிக் குடியிருப்புகளையும் உருவாக்கியுள்ளனர். ரெடிமேட் தொழில்நுட்பம் மூலம் மிக விரைவாக வீடுகளைக் கட்டிவிட முடியும். மேலும் பாரம்பரியக் கட்டிடக் கலையுடன் ஒப்பிடும்போது பொருட்செலவும் மிகக் குறைவு. இப்போது இந்தத் தொழில்நுட்பத்தால் நாள் ஒன்றுக்கு நான்கு வீடுகளை உருவாக்கிவருகிறோம். எதிர்காலத்தில் இது 12 ஆக உயரலாம் என மூர் நம்பிக்கை தெரிவிக்கிறார். 

Thanks to Kallaru.com