மொத்தப் பக்கக்காட்சிகள்

9/26/2012

தமிழக "ஜேம்ஸ்பாண்ட்" ஜெய்சங்கர்


மேல்நாட்டு "ஜேம்ஸ்பாண்ட்" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், "தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குறுகிய காலத்தில் 300-க்கு மேற்பட்ட படங்களில் நடித்தார்.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர், விவேகானந்தா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி யூனியன் செயலாளராக இருந்தார். அப்போது கல்லூரியில் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து திறம்பட நடத்தினார். பின்னர் முதன் முதலாக `மேக்-அப்' போட்டு "காதலுக்கு மருந்து" என்ற நாடகத்தின் மூலம் மேடை ஏறினார். இது எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது.

அந்த காலகட்டத்தில் டைரக்டர் ஜோசப் தளியத் தன்னுடைய புதிய படத்திற்காக புது முகங்களை தேடிக்கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. இவரை (ஜெய்சங்கர்) தளியத்திடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே ஜெய்சங்கருக்கு கதாநாயகன் வேடம் கொடுத்தார். "இரவும் பகலும்" என்ற படத்தின் மூலம் ஜெய்சங்கர் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படம் 1965-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளிவந்தது.

ஜெய்சங்கர் ஜோடி வசந்தா. முதல் படமே ஜெய்சங்கருக்கு பெயர் சொல்லும்படி அமைந்தது. இரவும் பகலும் படத்தை தொடர்ந்து "நீ", "எங்க வீட்டுப் பெண்", "பஞ்சவர்ணக்கிளி" (இதில் ஜெய்சங்கர் இரு வேடங்களில் நடித்தார்). "குழந்தையும் தெய்வமும்" ஆகிய படங்கள் வெளிவந்தன. "நீ" படத்தில் ஜெயலலிதாவும், "குழந்தையும் தெய்வமும்" படத்தில் ஜமுனாவும் கதாநாயகிகள். ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "குழந்தையும் தெய்வமும்" 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே ஜெய்சங்கருக்கு அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. மேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில், 1966-ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" தயாரித்த "இரு வல்லவர்கள்", "வல்லவன் ஒருவன்" ஆகிய படங்களில் ஜெய்சங்கர் சிறப்பாக நடித்தார். அதனால், தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்டார். இதே ஆண்டில், "காதல் படுத்தும் பாடு", "கவுரி கல்யாணம்", "நாம் மூவர்", "யார் நீ" (பி.எஸ்.வீரப்பா தயாரித்தது) ஆகிய படங்களிலும் ஜெய்சங்கர் நடித்தார்.

அதற்கு அடுத்த ஆண்டில், ஜெய்சங்கர் நடித்து 9 படங்கள் வெளிவந்தன. "காதலித்தால் போதுமா", "சபாஷ் தம்பி", "நான் யார் தெரியுமா?", "பட்டணத்தில் பூதம்", "பவானி", "பெண்ணே நீ வாழ்க", "பேசும் தெய்வம்", "பொன்னான வாழ்வு", "முகூர்த்த நாள்" ஆகியவை அவை. ஜெய்சங்கருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த "பட்டணத்தில் பூதம்" பெரிய வெற்றி படமாகும்.

ஜாவர் சீதாராமன் இப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் "பூதம்" வேடத்திலும் தோன்றினார். 1968-ம் ஆண்டில் "அன்புவழி", "உயிரா மானமா", "சிரித்த முகம்", "டீச்சரம்மா", "தெய்வீக உறவு", "நீலகிரி எக்ஸ்பிரஸ்", "நேர்வழி", "பால்மனம்", "புத்திசாலிகள்", "பொம்மலாட்டம்", "முத்துசிப்பி", "ஜீவனாம்சம்" ஆகிய 12 படங்கள் ஜெய்சங்கர் நடித்து வெளிவந்தன.

தொடர்ந்து சில ஆண்டுகள் வருடத்துக்கு முக்கால் டஜன் படங்களை தந்த ஜெய்சங்கர் 1972-ம் ஆண்டில் மட்டும் 15 படங்களில் நடித்து சாதனை படைத்தார். குறுகிய காலத்திலேயே நூறு படங்களை கடந்தார். சிவாஜிகணேசனுடன் ஜெய்சங்கர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்.ஜி.ஆருடனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மலர்ந்தது. ஆனால் அந்த படம் வளரவில்லை. நூறு படங்களுக்கும் மேல் தொடர்ந்து கதாநாயகனாகவே நடித்த ஜெய்சங்கர் பிறகு வில்லன் வேடத்தையும் ஏற்று அதனை சிறப்பாக செய்தார்.

அந்த வேடத்தில் தோன்றிய முதல் படம் "முரட்டுக்காளை". குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "முரட்டுக்காளை", "பாயும்புலி", "துடிக்கும் கரங்கள்" போன்ற படங்களில் ஜெய்சங்கர் வில்லன் வேடம் ஏற்றார். ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்றும் நடித்தார். மொத்தத்தில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர். நடிகர் ஜெய்சங்கர் 2000-ம் ஆண்டு மே மாதம் குவைத் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறி ஒரு வாரத்தில் வீடு திரும்பினார்.

மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையவே நினைவு இழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்சங்கர் 3-6-2000 அன்று இரவு மரணம் அடைந்தார். முதல்- அமைச்சர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் மூப்பனார், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், சிவகுமார், நெப்போலியன் உள்பட நடிகர், நடிகைகள், பட அதிபர்கள் ஜெய்சங்கர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெய்சங்கர் உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஜெய்சங்கரின் மனைவி பெயர் கீதா. சஞ்சய், விஜய் என்ற 2 மகன்கள். சங்கீதா என்ற மகள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது

Thanks to Malaimalar.com

அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள்.
 

அன்பை அபகரிப்பதில்



அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!

அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!

முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!

கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!

எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!

நாம் பெரும்பாலான மனிதரை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் அவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்கள் அல்ல. நம்மிடம் உள்ள கெட்ட குணங்கள்தான்.

கோழையும் வீரனாவான் தன் உரிமைகள் பறி போகும்போது.


என்னால் எதையுமே செய்யமுடியுமென்று தன்மீது தளராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கின்றானோ அவனுக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்.