நீங்கள் வீரம் மிகுந்தவர், வரலாறு படைப்பீர்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா
பானர்ஜியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வெகுவாக பாராட்டியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த முடிவு செய்தார்
மமதா பானர்ஜி. இதற்காக தீவிரமாக முயற்சிகளும் எடுத்தார். ஆனால் முலாயம் சிங்
யாதவின் பல்டி, பாஜக கூட்டணியின் மெகா குழப்பம் ஆகியவற்றின் காரணமாக அப்துல் கலாம்
போட்டியிட மறுத்து விட்டார்.
இதுகுறித்து பெரும் வருத்தமும், ஏமாற்றமும் வெளியிட்டிருந்தார் மமதா பானர்ஜி.
இந்த நிலையில் தனக்காக பெரும் சிரத்தை எடுத்து கடுமையாக முயன்ற மமதா பானர்ஜிக்கு
அப்துல் கலாம் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவருக்கு கடிதம் ஒன்றை
அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் மமதா
பானர்ஜி.
அதில் அப்துல் கலாம் கூறுகையில், உங்களோடு மிகக்குறுகிய நேரமே கலந்துரையாட
வாய்ப்பு கிடைத்த போதிலும், நேர்த்தியான அரசியலில் பெரிய அரசியல் தலைமைக்கான பண்பு
நலனை, கொண்ட காரியத்தில் வலிமையான உறுதியை, குறிப்பாக உங்கள் வீரத்தை, அரசியலில்
தங்க சிம்மாசனத்தை தியாகம் செய்யும் மன உறுதியை கண்டேன்.
இந்த பண்பு நலன்கள் நாட்டின் இன்றைய தேவை ஆகும். வீரம் நிறைந்தவர்களால்தான்
வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எனது பெயரை நீங்கள் முன்வைத்ததற்காகவும், இடைவிடாத
(ஆதரவு திரட்டிய) முயற்சிகளுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். (தேர்தலில் போட்டியிட
மறுத்ததால்) என்னால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்துக்காக மிகவும் வருந்துகிறேன்
என்று கலாம் தெரிவித்துள்ளார்.
பதிலுக்கு மமதாவும் கலாமுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
உங்களது கடிதம் கண்டேன். அதில் நீங்கள் வெளிப்படுத்தியிருந்த உணர்வுகள் எனது
நெஞ்சத்தைத் தொட்டது. இந்த நாட்டில், உலகில் உங்களது தனிப்பட்ட சாதனைகளால்
இந்தியர்களாகிய நாங்கள் எப்போதும் பெருமிதம் கொண்டிருக்கிறோம். நீங்கள் எப்போதும்
மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள்.
நான் எப்போதுமே சாமானிய மக்களுக்காக வீரத்துடன் போராடும் குணத்துடன்தான்
வளர்ந்து வந்திருக்கிறேன். அது எப்போதும் என்னிடம் இருக்கும்.
உங்கள் ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் எங்களுக்கு நீங்கள் எப்போதும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார் மமதா.