மொத்தப் பக்கக்காட்சிகள்

6/04/2016

"எங்களுக்கும் காலம் வரும்". customer care

 
 
கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.

தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.

அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில்
சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான
எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே
அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.

"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார்.
பின் குரல் தொடர்ந்தது...

"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது...

என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.

இப்பொழுது

"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும் தெரியாதவர் என்றால்
எண் 2 ஐ அழுத்தவும் கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ
அழுத்தவும் கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்
பேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும் நண்பர் என்றால்
எண் 6 ஐ அழுத்தவும் சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும் பால், பேப்பர்,
தபால்காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும் மீண்டும் முதலில்
இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்" என்ற அறிவிப்பு வந்தது.

ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஸ்டமர் கேரில்
வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.

மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...

"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சிறிது பணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.

"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!"

என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
கஸ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.

பாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.

"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்"

மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக
இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.

"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க
இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால்
திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டு
மென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும்
என அறிவித்தது.

தன்னைத்தானே நொந்து கொண்டவராய்...

"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...

தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி
வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...வேக வேகமாக தள்ளிக்கொண்டு,
அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.

எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது....

"எங்களுக்கும் காலம் வரும்".
(எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது?)



5/31/2016

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்....

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..
 
லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில்
நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.
கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.
  ...

நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் !




"என்ன கற்றுக் கொண்டோம்?...
 
என்ன கற்றுக் கொடுக்கிறோம்?..."

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை...

ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான்.

கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும்.

ஒரு சமயம்,
அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான்.

ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும்.

அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள்.

அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.

ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான்.

ரயில் வருகிற நேரம்...

ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.

பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா... இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன்... அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க... அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது... உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான்.

தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன்.

காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள்.

அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா.

"அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான்.

ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான்.

முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் "இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக் கிறான்... நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே..." என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான்...

செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், "அம்மா...! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான்... நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்...!" என கதறி அழுகிறான்.

ஆகவே நாம், நம் சக மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நல்லதையே கற்றுத் தருவோம்...
அர்த்தமுள்ள வாழ்வுக்கு...🌷
                             Thanks to C.Malathi