மொத்தப் பக்கக்காட்சிகள்

8/09/2014

சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!

இன்றைய இளம் ஹீரோக்களுக்கு தாங்கள் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ, படத்தி வாங்கியவர்கள் லாபம் அடைந்தார்களோ இல்லையோ அது பற்றியெல்லாம் கவலையில்லை. தங்களுக்குள் யார் சூப்பர் ஸ்டார் என்பதில் மறைமுக யுத்தம் நட்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் அந்த பட்டத்திற்கு உரியவரான ரஜினிகாந்த் நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் போது அவர் இடத்திற்கு இன்னொருவரை பட்டம் சூட்ட நினைப்பது கோமாளித் தனமானது. புரட்சித் தலைவர், நடிகர் திலகம், மக்கள் திலகம் போன்ற அடை மொழிகளெல்லாம் மககள் அன்போடு கொடுத்த பாசப் பட்டங்கள். அந்த இடத்திற்கு இன்னொருவரை நினைத்துப் பார்ப்பதென்பது அவர்களின் உழைப்பின் மீது உமிழ்வது போன்றது.
சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம்!
சும்மா வந்ததல்ல சூப்பர் ஸ்டார் பட்டம் என்பதற்கு சான்றுகள் நிறைய உண்டு.
75 ல் ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட் சினிமாவில் நுழையும் காட்சியே தீர்க்க தரிசனமான காட்சி "நான் பைரவி புருஷன் வந்திருக்கேன்" என்று கேட்டை திறக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் திறந்து கொண்டு உள்ளே வந்து உட்கார்ந்து விட்டார். ஆனால் அது துக்கடா கேரக்டர். அப்படிதானே அவர் அறிமுகமாக முடியும். முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்க அவர் அப்பா ஒன்றும் சினிமா டைரக்டர் இல்லையே.
அதன் பிறகு சினிமாவில் ரஜினி காட்டிய ஸ்டைலும் கொட்டிய உழைப்பும் மிருக்கதனமானது என்பதற்கு சில சாட்சிகள்.....
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக கோலோச்சிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மத்தியில் நாம் எப்படி இங்கு நம்மை தக்கவைத்துக் கொள்வது என்கிற பெரும் குழப்பத்துடன் தான் கால வைத்தார் ரஜினி. அதற்காக நடிப்பிலும், உழைப்பிலும் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பு காட்ட வேண்டுமோ அப்படியொரு அர்ப்பணிப்பை காட்டினார் ரஜினி. 75 லிருந்து 78 வரை எத்தனை எத்தனை வேடங்கள். பல படங்களில் வில்லனாக, தப்புத்தாளங்களில் விபச்சாரியின் கணவனாக, புவனா ஒரு கேள்வி குறி படத்தில் கைவிடப்பட்டவளுக்கு வாழ்வு கொடுப்பவனாக, அவர்கள் படத்தில் கொடுமைக்கார கணவனாக, மூன்று முடிச்சு படத்தில் நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனாக இப்படி யாரும் ஏற்கத்தயங்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பில் ஜொலித்தவர்.
பதினாறு வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரம் பரட்டையனாக வரும் ரஜினி முகத்தில் காரி துப்புவதுபோல் வரும் காட்சியில் பாரதிராஜா சோப்பு நுரையை தெளித்து காட்சியை எடுத்து விடலாம் என்றபோது ரஜினிதான் "இல்லை...இல்லை காட்சி தத்துரூபமாக வராது" என்று சொல்ல, ஸ்ரீதேவி அப்படி செய்ய மறுத்திருக்கிறார். வேறு வழியில்லாமல் ரஜினி முகத்தில் நிஜமாக எச்சிலை துப்பவைத்து அந்த காட்சியை படமாக்கினார் இயக்குனர் பாரதிராஜா. இப்போது இருக்கும் ஹீரோக்கள் போல கோட் சூட்டும், சிலிக்கான் லைட்டும், அழகிகள் சூழ ஆடும் பாட்டுமாக நடித்து வந்தவரில்லை. கேரவேன்களுக்குள் புகுந்து கொண்டு தன் கேரக்டரை வளர்த்தவரும் அல்ல. நடிக்க வரும் முதல் படத்திலேயே கேமராவை காலுக்கு கீழே வைத்து ( லோ ஆங்கிள் ) ஸ்கிரீனை பார்த்து பஞ்ச் டயலாக் பேசியவர் கிடையாது ரஜினி.
ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்றுக்கொண்ட கேரக்டர்கள் எல்லாவற்றுக்கும் தன் தனித்த நடிப்பால் அப்ளாஸை வாங்கிக்கொடுத்தார்.. ஒரே வருடத்தில் மட்டும் தயாரிப்பாளர்களின் சிரமத்தை போக்க தொடர்ந்து நடித்து 24 படங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். இரவு பகல் பாரமல் நடித்துக் கொடுத்து தன் ஆரோக்கியம் பாதிக்க அவரே காரணமானார். தூக்கம் வந்து சூட்டிங் பாதிக்கப்படக்கூடாது என்று ரஜினி செய்த காரியங்கள் யாரும் செய்யத்துணியாதவை. அதில் ஒன்று இரவு படப்பிடிப்பு முடிந்து நான்கு மணிக்கு வந்து படுக்கும் அவர் தன் உதவியாளர்களுக்கு சொல்லி வைத்த உத்தரவுபடி ஆறு மணிக்கெல்லாம் அவர் முகத்தில் ஐஸ் வாட்டரை கொட்டி அவரை எழுப்புவார்களாம்.
இப்படி மூன்று வருடங்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகே 77 - 78 ல் தாணுவின் பைரவி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தாணு ரஜினியின் தனித்தன்மையை உணர்ந்து பட போஸ்டரில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினி நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்ய முடிவு செய்கிறார். இது ரஜினிக்கு எப்படியோ தெரிந்து பதறிப்போய் தாணுவின் அலுவலகத்திற்கு வருகிறார். "தாணு சார் பெரியங்க எம்.ஜி.ஆர்., சிவாஜி இவங்கள்லாம் இருக்கும்போது நமக்கு எதுக்கு இந்த பட்டமெல்லாம். அவங்களை நாம் வருத்தப்பட வைக்கூடாது" என்று பெருந்தன்மையோடு மறுத்திருக்கிறார். ஆனால் தாணு அவர்கள் பிடிவாதமாக "மெகா சூப்பர் ஸ்டார் என்று போட்டுவிடவா" என்று கேட்க, "ஐயோ சூப்பர் ஸடாரே பரவாயில்ல" என்று ரஜினி மறுக்க, மறுநாள் ஒரு நாளிதழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு பைரவி பட விளம்பரம் முழு பக்கத்தில் வெளிவருகிறது. தர்ம சங்கடத்தில் தவித்தார் ரஜினி.
அவர் நடித்த பதினெட்டு படங்கள் இருநூறு நாட்கள் ஓடிய படங்கள் 38 படங்கள் நூறு நாள் படங்கள், நான்கு படங்கள் ஒருவருடத்திற்கும் மேல் ஓடிய படங்கள். இப்படி வாங்கிய பட்டத்திற்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டார் ரஜினி. இத்தனை படங்களில் சில படங்களில் தன்னை வைத்து படமெடுத்து நலிந்து போன தயாரிப்பாளர்களை பங்குதாரராக ஆக்கிக்கொண்டு அவர்களுக்கு வாழ்வளித்தார். எந்த தயாரிப்பாளரும் ‘உங்கள் படங்களால் எங்களுக்கு பெரிய நஷ்டம்' என்று அவர் வீட்டின் முன் நின்றதில்லை.
பட்டத்திற்கு ஆசைப்படும் இன்றைய ஹீரோக்கள் இப்படி தொடர் வெற்றி கொடுத்திருக்கிறார்களா என்பதை அவர்களே சொல்லட்டும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பங்கு போட்டுக்கொள்ள அது என்ன 'பாலகாடு பேக்கரி'யில் விற்கும் பன்னா.
ரஜினியின் பலவருட உழைப்பு. இந்த உழைப்பிற்கு நாம் எந்த வகையிலும் தகுதியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். சினிமாவில் மட்டுமல்ல..தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதும் ரஜினியை மக்கள் நேசிப்பதற்கு முக்கிய காரணம். அதோடு தான் நேசிக்கும் சினிமாவை வைத்து எந்த விதமான அரசியல் ஆதாயத்தையும் அடைய அவர் முயன்றதில்லை. ஆனால் இன்று சினிமாவில் உள்ள நடிகர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
ஒரு நடிகர் வீட்டில் நடந்த சம்வத்தை சொன்னால் ரஜினிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணரலாம். அவர் பங்களாவில் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்கள். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள். காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணில் படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார். வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம். சரி இந்த கட்டிட வேலை எதற்காக நடந்தது தெரியுமா... அந்தப் பகுதியில் வசிக்கும் சிலர் தங்களின் அபிமான நடிகர் வீடு இதுதான் என்று பாசத்தோடு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது தெரிந்து தன் வீட்டின் காம்பவுண்ட் சுற்றுச்சுவரை பல அடிகள் உயர்த்திக் கட்ட போட்ட உத்தரவால் நடந்த வேலை!!
ஆனால் ரஜினியின் அசாத்திய பாசம் எவருக்கும் வராது. காமராஜர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி முடிந்து விட்டு காரில் அவர் வெளியேற, தொலைவில் சாலையில் தனியாக நின்றிருந்த இருவர் ரஜினியின் கார் என்பதை பார்த்து விட்டு கண்ணாடிகள் ஏற்றப்பட்டிருப்பது தெரிந்தும் உற்சாகத்தில் கையை ஆட்ட பைக்கில் துரத்துகிறார்கள். உடனே ரஜினியின் கார் வேகம் குறைய, அந்த இரண்டு பேருக்காக கண்ணாடியை இறக்கி புன்னகைத்து கையை அசைத்து, 'இப்படி வேகமா வரவேணாம்... நிதானமா போங்க' என்று சொல்லிச் செல்கிறார். அந்த பாசத்தை யாரும் சொல்லித் தந்து வரவழைக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறியது. அதனாலதான் அவர் சூப்பர் ஸ்டார்.
எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பட்டங்களை கொடுத்தது யார் தெரியுமா சாதாரண ரசிகர் ஒருவர்தான். பத்திரிகைகள் அல்ல. திமுகவிலிருந்து விலக்கப்பட்ட ஒருநாள் சத்யா ஸ்டுடியோவில் அதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எம்.ஜி.ஆர். வெளியே ரசிகர்கள் கூட்டம் உணர்ச்சி பொங்க கூடியிருந்தது. எம்.ஜி.ஆர் வெளியே வந்து தலைகாட்ட அத்தனை பேரும் ஆர்ப்பரித்தனர். அதில் கூட்டத்திலிருந்த வேலூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் பரவசத்தில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க" என்று குரல் கொடுக்க, அன்றிலிருந்து கட்சித் தலைவர் புரட்சித்தலைவர் ஆனார்.
சிவாஜிக்கு அன்று வந்த சினிமா பத்திரிகையான 'பொம்மை'யில் வந்த கேள்வி பதிலில் சிவாஜி ரசிகர் ஒருவர் 'எங்கள் நடிகர் திலகம் எப்படியிருக்கிறார்' என்று ஒரு கேள்வியை வைக்க, சிவாஜியும் அந்த அன்பு பரிசை அப்படியே ஏற்றுக்கொண்டார்.
இதை அப்படியே அடுத்த புரட்சித் தலைவர் யார் என்றோ, அடுத்த நடிகர் திலகம் யார் என்றோ போட்டி வைத்தால் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கும். ஒரே ஒரு இமயமலை, ஒரே ஒரு வங்கக் கடல் ஒரே ஒரு சூரியன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினி காந்த் என்கிற மாமனிதன் தான்.
பட்டம் என்பது மக்கள் பரிசாக கொடுப்பது யாரிடமிருந்தும் பறித்துக் கொடுப்பது இல்லை. இது சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிந்தால் போதும்!
-தேனி கண்ணன்

8/07/2014

பாசம்தந்தையின் பாசம் வளரும் வரை...

தாயின் பாசம் திருமணம் வரை...

நண்பர்கள், சகோதரர்களின் பாசம்


அவர்களுக்கென்று தனியான


வாழ்க்கை வரும் வரை...

பிள்ளைகளின் பாசம் அவர்கள்


உலகை அறியும் வரை...!

ஆனால் கணவன் மனைவியின்


பாசமோ...

''நீங்க


இறப்பதற்கு ஒரு நொடிக்கு முன்


நான் கண் மூடிட வேண்டும்'' என


கூறும்


மனைவியின் பாசமும்,

''நான் இறந்த அடுத்த நொடி நீயும்


என்னுடன் வந்துவிடு'' என கூறும்


கணவனின் பாசமும் வேறு எந்த


பாசத்திற்கும் ஈடாகாது.

வாழ்க்கைப்பய
ணத்தில் என் நிறுத்தம் வரும் போது 

இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...


THANKS TO TAMIL THOKKUPU.COM

8/06/2014

கவிஞர் வாலி கவிதைகளின் பெருங்கடல் |

கவிஞர் வாலி கவிதைகளின் பெருங்கடல் | நினைவேந்தல் சிறப்பு பகிர்வு


உலகமெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன அவருக்கு. கடைசிவரையிலும் பாஸ்போர்ட்டே எடுக்கவில்லை அவர். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் பெரும் தொகையைத் தர தயாராயிருந்தனர் பலர்.
முடிந்தவரை மேடை நிகழ்ச்சிகளைத் தவிர்த்தது மட்டுமல்ல, பங்கு கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்க நினைத்ததே இல்லை அவர். தமிழ் சினிமாவில் அதிகச் சம்பளம் வாங்கிய பாடலாசிரியர் அவர்தான். குடியிருந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்தையும் வாங்க எண்ணியதே இல்லை அவர்.
இரண்டு முதலமைச்சர்களுடன் தொலைபேசியிலேயே பேசுமளவுக்கு அவருக்கு நெருக்கம் இருந்தது. அனேகமாக எந்த உதவியையும் கேட்டு இருவரையும் தொந்தரவு செய்ததே இல்லை அவர்.
அடிப்படைக் காரணம்
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர யாரோடும், எதன் பொருட்டும் தன் நேரத்தைப் பங்கு போடத் தயாராக இருந்ததில்லை அவர். பொருளாதாரத்தைப் பெருக்கவும் அல்லது வேறு வகையில் பொழுதுகளைச் செலவழிக்கவும் விரும்பாமல் பாட்டு… பாட்டு… பாட்டு… என்று இரவும் பகலும் இசைப்பாடல்களோடு இரண்டறக் கலந்திருந்தார்.
அதனால்தான் இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதிக் குவித்தவர் என்ற பெருமையும் 1958-ல் தொடங்கி, மருத்துவமனைக்குச் சென்ற கடைசி நாள்வரை (8.6.2013), ஏறத்தாழ 56 ஆண்டுகள் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பாடல் எழுதித் தொய்வில்லாமல் தொழிலில் ஜெயித்த ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையும் அவருக்கு மட்டுமே அமைந்துவிட்டன.
கையிலிருக்கும் சின்ன அங்குசத்தால் கம்பீரமான யானையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பாகன் மாதிரி, இசையமைப்பாளர்களின் மெட்டுகளைப் பொருத்தமான வார்த்தைகளால் பூட்டும் பாட்டு மொழியைத் தன் சின்ன விரல்களுக்குள் சேமித்து வைத்திருந்தவர் அவர். தமிழ்த் திரைப்பாடல்களில் தனக்கென்று சில உத்திகளை ஆரம்பம் முதலே கையாண்டார்.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…”
“உலகம் பிறந்தது எனக்காக…”
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்…”
என்று எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய ஒரு சில பாடல்களை சிவாஜியும் பாடலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்கு நானெழுதிய…
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”
“நான் ஆணையிட்டால்…”
“நான் செத்து பொழச்சவண்டா…”
“வாங்கய்யா வாத்யாரய்யா…”
போன்ற பாடல்களை எம்.ஜி.ஆர். மட்டுமே பாட முடியும். கண்ணதாசனிலிருந்து வித்தியாசப்பட நான் கையாண்ட பாணி இது’ என்று அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். இலக்கிய நயத்தோடு இருப்பதைவிட எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பதுதான் சினிமா பாடல்களுக்கு வாலி வகுத்து வைத்திருந்த விதி.
“இந்தக் கவிஞன் நெருக்கமானவன், படித்திருந்தாலும் இவன் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகவில்லை, அவனுடைய வார்த்தைகள் நமக்கு அருகில் நிற்பவை என்கிற முடிவுதான் வாலியின் பாட்டைக் கேட்டதும் நம் மனதில் ஏற்படும்” என்று முக்தா சீனிவாசன் சொல்வது முற்றிலும் சரியானது.
போராடிப் பெற்ற வெற்றி
பாட்டுலகில் எளிதாக வெற்றிகளை ஈட்டிவிடவில்லை அவர்.‘‘நான் கவிதை எழுதிக் கிழித்து வீசி எறிந்த குப்பைக் காகிதங்களில் பாடம் படித்தவர் வாலி’’ என்று கோபத்தில் கண்ணதாசன் வசை பொழிந்தாலும், பிறகு ‘‘திரை உலகில் என்னுடைய வாரிசாக நான் யாரையேனும் அங்கீகரிக்கப் போகிறேன் என்றால் அது வாலியாகத்தான் இருக்கும்’’ என்று அவரே சொல்ல நேர்ந்தது.
வாலியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சில நேரங்களிலும், வாலியின் பாடல் தனது படத்திற்கு அவசியம் என்று விநியோகஸ்தர்கள் சொன்னதால் வாலியை எம்.ஜி.ஆர். அழைக்க நேர்ந்தது.
வைரமுத்துவோடு மனத்தாங்கல் ஏற்பட்டபோது எத்தனையோ பாடலாசிரியர்கள் இருந்தாலும் கவிஞர் வாலியோடுதான் கைகோக்க வேண்டுமென்று இளையராஜா விரும்பினார். “சில காட்சிகளுக்கு வாலியைத் தவிர யாருடைய பாடலும் எடுபடாது என்பது ஏ.ஆர். ரஹ்மானின் முடிவென்று இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார். ‘மன்மத அம்பு’ படத்திற்குத் தானெழுதிய பாடல்களை வாலியிடம் காண்பித்து கமல் ஹாசன் கருத்துக் கேட்டார். இந்தச் சம்பவங்கள் யாவும் வாலியின் பாட்டுத் திறனுக்கான சான்றுகள்.
வாலியால் மட்டும் எப்படி?
‘‘அனிருத்துக்கு வயது 21. எனக்கு 81. 60 வருஷ வித்தியாசம் எங்களுக்கு. இந்த வித்தியாசம் வயசுல இருக்கலாம். ஆனா என் வார்த்தையில இருக்கக் கூடாது’’ எதிர் நீச்சல் படத்திற்காக அனிருத்தோடு பணிபுரிந்த வாலி சொன்ன வார்த்தைகள் இவை.
“என் உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியும்” என்று சொன்ன வாலி, தினம் தினம் புத்தகங்களின் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பாடல்களோடு மட்டுமே தன்னைப் பதிப்பித்துக்கொண்டார். அதனால்தான் கடைசிவரையிலும் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகத் தமிழ் சினிமா, வாலியை வலம் வந்தது.
கண்ணதாசனை விடவும், இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரை ஈர்த்தவர் வாலி. ஆனால் திருலோகசந்தருக்கு வாலி எழுதிய பாடல்கள் மட்டும் கண்ணதாசன் பாணியிலேயே இருக்கும். ‘மலரே… குறிஞ்சி மலரே… (டாக்டர் சிவா), மல்லிகை என் மன்னன்… (தீர்க்கசுமங்கலி), இதோ எந்தன் தெய்வம்… (பாபு), கண்ணன் ஒரு கைக்குழந்தை… (பத்ரகாளி)’ இப்படி ஏராளமான உதாரணங்கள்.
எத்தனையோ விமர்சனங்களை எதிர் கொண்டவர் வாலி. ஆனால், இயக்குநரும் இசையமைப்பாளரும் எதிர்பார்ப்பதைக் கொடுப்பதுதான் தன்னுடைய பிரதானமான வேலை என்பதில் தெளிவாக இருந்தவர் அவர். அதனால்தான் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொள்ளாமல் இயக்குநர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தன் பாட்டு மொழியின் வண்ணங்களை மாற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறைதான் அவர் வீட்டு வரவேற்பறையில் இளம் இயக்குநர்களை அழைத்துவந்து அமர்த்தியது.
இயக்குநர் கேட்பதைக் கொடுப்பதே தன் வேலை என்ற கொள்கையால் அவர் சில சமயம் தரக்குறைவான வரிகளை எழுத நேரிட்டது. அதற்காக வசைகளையும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேரிட்டது. ஆனால்,
- உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
- என் மனமென்னும் கடலுக்குக் கரை கண்ட மான்
- மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட
என்பன போன்ற ஆயிரக்கணக்கான வரிகளையும் அவர்தான் எழுதினார்.
படைப்பாளுமை உள்ள இயக்குநர்களின் படங்களுக்கான பாடல்களுக்கும், சராசரியான வணிகப் படங்களில் எழுதுகிற பாடல்களுக்கும் தனித்தனிப் பாட்டு மொழியை வாலி கையாண்டார். தேவைக்கு ஏற்ற படைப்பு என்பதே வாலியின் மந்திரம் என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் தலைமுறை களைத் தாண்டி ஜெயித்த ஒரே பாடலாசிரியரான வாலி, எல்லோருக்கு மான, எல்லாக் காலத்துக்குமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நன்றி | த இந்து பத்திரிகை