கவிஞர் வாலி கவிதைகளின் பெருங்கடல் | நினைவேந்தல் சிறப்பு பகிர்வு
உலகமெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன அவருக்கு. கடைசிவரையிலும் பாஸ்போர்ட்டே எடுக்கவில்லை அவர். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப் பெரும் தொகையைத் தர தயாராயிருந்தனர் பலர்.
முடிந்தவரை மேடை நிகழ்ச்சிகளைத் தவிர்த்தது மட்டுமல்ல, பங்கு கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் பணம் வாங்க நினைத்ததே இல்லை அவர். தமிழ் சினிமாவில் அதிகச் சம்பளம் வாங்கிய பாடலாசிரியர் அவர்தான். குடியிருந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்தையும் வாங்க எண்ணியதே இல்லை அவர்.
இரண்டு முதலமைச்சர்களுடன் தொலைபேசியிலேயே பேசுமளவுக்கு அவருக்கு நெருக்கம் இருந்தது. அனேகமாக எந்த உதவியையும் கேட்டு இருவரையும் தொந்தரவு செய்ததே இல்லை அவர்.
அடிப்படைக் காரணம்
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர யாரோடும், எதன் பொருட்டும் தன் நேரத்தைப் பங்கு போடத் தயாராக இருந்ததில்லை அவர். பொருளாதாரத்தைப் பெருக்கவும் அல்லது வேறு வகையில் பொழுதுகளைச் செலவழிக்கவும் விரும்பாமல் பாட்டு… பாட்டு… பாட்டு… என்று இரவும் பகலும் இசைப்பாடல்களோடு இரண்டறக் கலந்திருந்தார்.
அதனால்தான் இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதிக் குவித்தவர் என்ற பெருமையும் 1958-ல் தொடங்கி, மருத்துவமனைக்குச் சென்ற கடைசி நாள்வரை (8.6.2013), ஏறத்தாழ 56 ஆண்டுகள் நான்கு தலைமுறை நடிகர்களுக்குப் பாடல் எழுதித் தொய்வில்லாமல் தொழிலில் ஜெயித்த ஒரே பாடலாசிரியர் என்ற பெருமையும் அவருக்கு மட்டுமே அமைந்துவிட்டன.
கையிலிருக்கும் சின்ன அங்குசத்தால் கம்பீரமான யானையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பாகன் மாதிரி, இசையமைப்பாளர்களின் மெட்டுகளைப் பொருத்தமான வார்த்தைகளால் பூட்டும் பாட்டு மொழியைத் தன் சின்ன விரல்களுக்குள் சேமித்து வைத்திருந்தவர் அவர். தமிழ்த் திரைப்பாடல்களில் தனக்கென்று சில உத்திகளை ஆரம்பம் முதலே கையாண்டார்.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…”
“உலகம் பிறந்தது எனக்காக…”
“உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்…”
என்று எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய ஒரு சில பாடல்களை சிவாஜியும் பாடலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்கு நானெழுதிய…
“மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…”
“நான் ஆணையிட்டால்…”
“நான் செத்து பொழச்சவண்டா…”
“வாங்கய்யா வாத்யாரய்யா…”
போன்ற பாடல்களை எம்.ஜி.ஆர். மட்டுமே பாட முடியும். கண்ணதாசனிலிருந்து வித்தியாசப்பட நான் கையாண்ட பாணி இது’ என்று அவரே ஒருமுறை சொல்லி இருக்கிறார். இலக்கிய நயத்தோடு இருப்பதைவிட எல்லோருக்கும் புரியும்படி எளிமையான வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்பதுதான் சினிமா பாடல்களுக்கு வாலி வகுத்து வைத்திருந்த விதி.
“இந்தக் கவிஞன் நெருக்கமானவன், படித்திருந்தாலும் இவன் நம்மிடமிருந்து அந்நியப்பட்டுப் போகவில்லை, அவனுடைய வார்த்தைகள் நமக்கு அருகில் நிற்பவை என்கிற முடிவுதான் வாலியின் பாட்டைக் கேட்டதும் நம் மனதில் ஏற்படும்” என்று முக்தா சீனிவாசன் சொல்வது முற்றிலும் சரியானது.
போராடிப் பெற்ற வெற்றி
பாட்டுலகில் எளிதாக வெற்றிகளை ஈட்டிவிடவில்லை அவர்.‘‘நான் கவிதை எழுதிக் கிழித்து வீசி எறிந்த குப்பைக் காகிதங்களில் பாடம் படித்தவர் வாலி’’ என்று கோபத்தில் கண்ணதாசன் வசை பொழிந்தாலும், பிறகு ‘‘திரை உலகில் என்னுடைய வாரிசாக நான் யாரையேனும் அங்கீகரிக்கப் போகிறேன் என்றால் அது வாலியாகத்தான் இருக்கும்’’ என்று அவரே சொல்ல நேர்ந்தது.
வாலியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்ட சில நேரங்களிலும், வாலியின் பாடல் தனது படத்திற்கு அவசியம் என்று விநியோகஸ்தர்கள் சொன்னதால் வாலியை எம்.ஜி.ஆர். அழைக்க நேர்ந்தது.
வைரமுத்துவோடு மனத்தாங்கல் ஏற்பட்டபோது எத்தனையோ பாடலாசிரியர்கள் இருந்தாலும் கவிஞர் வாலியோடுதான் கைகோக்க வேண்டுமென்று இளையராஜா விரும்பினார். “சில காட்சிகளுக்கு வாலியைத் தவிர யாருடைய பாடலும் எடுபடாது என்பது ஏ.ஆர். ரஹ்மானின் முடிவென்று இயக்குநர் ஷங்கர் கூறியிருக்கிறார். ‘மன்மத அம்பு’ படத்திற்குத் தானெழுதிய பாடல்களை வாலியிடம் காண்பித்து கமல் ஹாசன் கருத்துக் கேட்டார். இந்தச் சம்பவங்கள் யாவும் வாலியின் பாட்டுத் திறனுக்கான சான்றுகள்.
வாலியால் மட்டும் எப்படி?
‘‘அனிருத்துக்கு வயது 21. எனக்கு 81. 60 வருஷ வித்தியாசம் எங்களுக்கு. இந்த வித்தியாசம் வயசுல இருக்கலாம். ஆனா என் வார்த்தையில இருக்கக் கூடாது’’ எதிர் நீச்சல் படத்திற்காக அனிருத்தோடு பணிபுரிந்த வாலி சொன்ன வார்த்தைகள் இவை.
“என் உடல் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் உள்ளம் முதுமை அடைவதை என்னால் தடுக்க முடியும்” என்று சொன்ன வாலி, தினம் தினம் புத்தகங்களின் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பாடல்களோடு மட்டுமே தன்னைப் பதிப்பித்துக்கொண்டார். அதனால்தான் கடைசிவரையிலும் தவிர்க்க முடியாத பாடலாசிரியராகத் தமிழ் சினிமா, வாலியை வலம் வந்தது.
கண்ணதாசனை விடவும், இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரை ஈர்த்தவர் வாலி. ஆனால் திருலோகசந்தருக்கு வாலி எழுதிய பாடல்கள் மட்டும் கண்ணதாசன் பாணியிலேயே இருக்கும். ‘மலரே… குறிஞ்சி மலரே… (டாக்டர் சிவா), மல்லிகை என் மன்னன்… (தீர்க்கசுமங்கலி), இதோ எந்தன் தெய்வம்… (பாபு), கண்ணன் ஒரு கைக்குழந்தை… (பத்ரகாளி)’ இப்படி ஏராளமான உதாரணங்கள்.
எத்தனையோ விமர்சனங்களை எதிர் கொண்டவர் வாலி. ஆனால், இயக்குநரும் இசையமைப்பாளரும் எதிர்பார்ப்பதைக் கொடுப்பதுதான் தன்னுடைய பிரதானமான வேலை என்பதில் தெளிவாக இருந்தவர் அவர். அதனால்தான் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொள்ளாமல் இயக்குநர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தன் பாட்டு மொழியின் வண்ணங்களை மாற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறைதான் அவர் வீட்டு வரவேற்பறையில் இளம் இயக்குநர்களை அழைத்துவந்து அமர்த்தியது.
இயக்குநர் கேட்பதைக் கொடுப்பதே தன் வேலை என்ற கொள்கையால் அவர் சில சமயம் தரக்குறைவான வரிகளை எழுத நேரிட்டது. அதற்காக வசைகளையும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேரிட்டது. ஆனால்,
- உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
- என் மனமென்னும் கடலுக்குக் கரை கண்ட மான்
- மண் குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
- யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடுதான் ஆட
என்பன போன்ற ஆயிரக்கணக்கான வரிகளையும் அவர்தான் எழுதினார்.
படைப்பாளுமை உள்ள இயக்குநர்களின் படங்களுக்கான பாடல்களுக்கும், சராசரியான வணிகப் படங்களில் எழுதுகிற பாடல்களுக்கும் தனித்தனிப் பாட்டு மொழியை வாலி கையாண்டார். தேவைக்கு ஏற்ற படைப்பு என்பதே வாலியின் மந்திரம் என்பதை இதிலிருந்து உணர்ந்துகொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் தலைமுறை களைத் தாண்டி ஜெயித்த ஒரே பாடலாசிரியரான வாலி, எல்லோருக்கு மான, எல்லாக் காலத்துக்குமான பாடலாசிரியராகத் திகழ்ந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நன்றி | த இந்து பத்திரிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக