மொத்தப் பக்கக்காட்சிகள்

5/20/2016

சி.பி.ஐ.க்கு பயிற்சி அளிக்கும் மதுரை பெண் ஸ்ரீதேவி!


சி.பி.ஐ.க்கு பயிற்சி அளிக்கும் மதுரை பெண்

இரவு சமையலுக்குத் தோசைக்குத் தொட்டுக்கொள்ள என்ன சமைப்பது என்று யோசிக்கும் இல்லத்தரசிகளில் ஒருவராக இருந்தவர்தான் மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதேவி. ஆனால் இல்லத்தரசி என்ற அடையாளத்தைத் தாண்டி தனக்கெனத் தனி அடையாளம் வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவு, ஸ்ரீதேவி அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

எதிர்காலத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவுடன்தான் பொதுவாக எல்லாப் பெண்களுமே படிப்பார்கள். ஆனால், படிப்பு முடிந்ததும் பெரும்பாலான பெண்களுக்குக் குடும்பச் சூழலால் அந்தக் கனவு கைகூடாமல் போய்விடுகிறது. எம்.பி.ஏ. படித்து முடித்ததும் ஸ்ரீதேவிக்குத் திருமணம் ஆனது. கணவர், காவல்துறை ஆய்வாளர். குடும்பம், குழந்தைகள் என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.

தேடல் தொடங்கியது

எந்தவொரு சிக்கலும் இல்லாத மிக இனிமையான வாழ்க்கை ஸ்ரீதேவிக்கு. இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். வீட்டை விட்டு வேலைக்காக வெளியே செல்லத் தயக்கம். அதனால் வீட்டில் இருந்தபடியே ஏதாவது சிறுதொழில் செய்யலாம் என முடிவெடுத்தார். பட்டு மற்றும் தோல் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். படிப்படியாக டென்மார்க், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தொழில் முனைவோராக உயர்ந்தார். தங்களுக்கும் தொழில்முனைவோர் பயிற்சியளிக்க வேண்டும் என்று பல பெண்கள் ஸ்ரீதேவியைத் தேடி வந்தனர்.

“எதையுமே முறைப்படி கத்துக்கிட்டாதான் அடுத்தவங் களுக்குப் பயிற்சியளிக்க முடியும். அதனால அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரீனோ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றேன். சிறுதொழில் முன்னேற்றம் பற்றி மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பது எப்படின்னு அங்கே கத்துக்கிட்டேன். இந்தப் பயிற்சியில என்னுடன் முப்பது பேர் பயிற்சி எடுத்துக்கிட்டாங்க. அதுல நான் முதலாவதாகத் தேர்ச்சி பெற்று அந்தப் பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றும் விருதும் பெற்றேன்” என்று சொல்லும் ஸ்ரீதேவி, அதன் பிறகு பெண்களுக்குத் தொழில்முனைவோர் பயிற்சியளிக்கத் தொடங்கினார். ஸ்ரீதேவி அளித்த பயிற்சியால் மதுரையைச் சேர்ந்த பல பெண்கள் சுய தொழில் தொடங்கி, வெற்றிகரமாகச் சாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

மென்திறன் பயிற்சி

தொழில் முனைவோர் பயிற்சியில் மட்டுமல்லாமல் மென் திறன் பயிற்சியளிப்பதிலும் இவர் தேர்ந்தவர். அந்தத் திறமை, இவருக்கு கவுரவப் பேராசிரியர் என்ற தகுதியையும் பெற்றுத் தந்திருக்கிறது. டெல்லியில் இருக்கும் சி.பி.ஐ. பயிற்சி அகாடமியில் புதிதாகப் பணியில் சேரும் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு மென்திறன் பயிற்சியளித்துவருகிறார் இவர்.

“அலுவலகத்தில், அதிகாரிகளிடம் பேசும் விதம், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது, குழு மனப்பான்மை, தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியதுதான் இந்த மென் திறன் பயிற்சி. டெல்லியில் உள்ள சிபிஐ அகாடமியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை அளித்துவருகிறேன். பொதுவா ஓய்வு பெற்ற நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள்தான் சி.பி.ஐ.-யில் இந்தப் பயிற்சியை அளிப்பார்கள். அவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இங்கே இடமில்லை. ஆனால் இப்படியொரு வாய்ப்பு முதல் முறையாக எனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது” என்று பூரிப்புடன் சொல்கிறார் ஸ்ரீதேவி.

புற்றுநோய் விழிப்புணர்வு

புற்றுநோயிலிருந்து பெண்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து, ‘சேவ் விமன்’ (Save Women) என்ற இவரது திட்டத்துக்கு வெளி நாட்டில் நிதியுதவி கிடைத்தது.

“அமெரிக்காவில் இருந்து மதுரை வந்ததும் 10 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பெண்களைச் சந்தித்தேன். அவர்களிடம் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் குறித்துப் பேசினேன். அவர்களில் பலருக்குப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த அறிகுறியைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தனர். அப்படியே தெரியவந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற அவர்களுக்கு ஒருவிதத் தயக்கம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதைவிட தங்களுக்கு வந்திருக்கும் நோய் அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்றே பலரும் நினைத்தனர்” என்று மக்களிடம் பரவிக் கிடக்கும் அறியாமையை குறித்து கவலைப்படுகிறார்.

“புற்றுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெற்றால் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளலாம். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஸ்ரீதேவி.

ஒரு புறம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, மறுபுறம் மென் திறன் பயிற்சிகள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஸ்ரீதேவி, எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு சாட்சி.