மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

யாரது, சொல்லாமல் நெஞ்அள்ளி போவது!! சிறுகதை


  
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த காலம் அது.அலுவலகத்தில் 40 % பெண்களே. அவ்வப்போது எதாவது கிறுக்கி (எழுதி ) காட்டுவேன்.
அதில் அனைவருக்கும் ஒரு சந்தோசம். உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது. படைக்க தெரிந்தவர்களை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அந்த அலுவலகத்திலும் ஒருத்தி இருந்தாள் அவள் பெயர் நிலா.... மாநிறம், பூசினார் போல தேகம், அறிவும், திறமையும், பொறுமையும், பரிவும், நிதானமும் கலந்த கலவை அவள். லேசான சுருட்டை முடி. அதில் ஒன்றிடண்டு முன்னால் வந்து நிற்கும். அரிதாரம் பூசாத முகம் அவளின் சிறப்பு. சுற்றி இருக்கும் காட்டன் புடவை அவளை சுமக்கிறதா இல்லை அவள் புடவையை சுமக்கிராளா பாப்பையாவை வைத்து பட்டி மன்றமே நடத்தலாம் . அதிராத பேச்சு, நிதான நடை, பளிச் என்ற ஒரு தூய்மை. யாரையும் புண் படுத்தாத மனம்.நான் தேடிய மணியன் செல்வம் ஓவியம் அவள். அவளை நல்ல அழகு என்று சொன்னால் அது பிழை. அதையும் தாண்டி வார்த்தை தேடுகிறேன்.


ஒருமுறை கதிரவனில் புகைப்பட கவிதை போட்டி.எனக்கும் அவளுக்குமான சம்பவங்களை கோர்த்து எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன்.
 பதட்டம் உடலிலும் மனதிலும். அலுவலக இளசுகள் ட்ரீட் கேட்க அனைவரும் அருண் ஐஸ் கிரீம் பார் சென்றோம். வட்ட மேசை சுற்றி அமர்ந்து இருந்தோம். என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். அவள் தின்ற பாதி இப்பொழுது என் முன்னே. எழுந்து நின்று ஆர்பரிக்க வேண்டும் போல தோன்றியது. முதல் காதல் அது ஏற்று கொண்ட தருணம். வானத்தில் இருந்து என்மேல் மட்டும் மழை பொழிவது போல இருந்தது.காதலித்து பாருங்கள் பட்டென்று பத்து வயது குறைந்து விடும்.


காதல் சுகம் கிடைக்காத மனிதன் உலகில் பாவப்பட்ட ஜீவராசி. காதல் ஒரு அபூர்வ உணர்வு. வரலாற்று ஆசிரியர்கள் போர்களங்களை எவ்வளவு பதிந்தார்களோ அதற்க்கு சமமாய் காதலையும் பதிந்தார்கள். உண்மையான காதல் துணை நினைத்தாலே உடலும் மனதும் பூரிக்கிறது. அலுவலகம் சுகமானது.விடுமுறையை வெறுக்க தோன்றியது. ஆணையும் பெண்ணையும் சேர்த்து படைத்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றி.


மூன்று தங்கைகளுக்கு அக்காள் அவள். தனியார் வேலைக்கு சைக்கிள் ஓட்டிச்செல்லும் தந்தை. . சாலிகிராமத்தில் ஒரு சாதாரண குடும்பம் அவளுடையது. கனவு எல்லோருக்கும் சொந்தம்.காதலும் எல்லோருக்கும் சொந்தம். இதில் ஏழ்மை எங்கிருந்து வந்தது. நாங்களும் வாழ்ந்தோம் சந்தோஷ காதலர்களாய். பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.


காதல் பூத்து ஒரு வருடம் தாண்டி இருக்காது,ஒரு இரவு பொழுதில் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அலுவலக நண்பர்" நிலா தந்தை இறந்துவிட்டார் மருத்துவமனை வா "என்று. பதறினேன்.மருத்துவமனை சென்றேன். என்ன சொல்வேன் அவளிடம். இது காலில் அடிபட்ட புண்ணா சரியாகிவிடும் என்று சொல்ல. தீராத வலி. வீட்டில் ஆண்கள் இல்லாததால் அலுவலக நண்பர்கள் எல்லா வேலையும் செய்தோம். வீடு வெறிச்சோடியது. அழுகை நிரந்தரமானது. சிறிது நாட்கள் வேலைக்கு வரவேண்டாம் என அலுவலகமும் அலுவலக நண்பர்களும் பண உதவி செய்தார்கள். தினமும் வீடு சென்று வந்தேன். என்னால் ஆனவற்றை செய்தேன்.இப்பொழுது புதிதாய் நிறைய உறவினர்கள் முளைதிருந்தார்கள்


வந்தான் எதிரி சித்தப்பா ரூபத்தில்.நல்ல வரன் என்றும், எதுவும் தரவேண்டாம் என்றும், குடும்பத்தை பார்த்து கொள்வான் என்றும் இன்னும் நிறைய என்றும் என்றும் சொல்லி எங்கள் காதலை தீயிட்டு கொளுத்தினான். இப்பொழுது என்ன அவசரம் என்றாள் " ஆம்பிள்ளை இல்லாத வீடு" என்றார். இப்பொழுது அழுகையுடன் வீட்டில் சண்டையும் சேர்ந்தது. அவள் அம்மா நோய்வாய் பட்டாள்.
ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன். வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.


காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

1 கருத்து:

  1. காதல் தோல்வியைப் பற்றி எவ்வளவு படித்தாலும் அலுப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு ஆணுக்கும் அந்த அனுபவம் ஏற்படாமலா இருந்திருக்கும்? (2) அது சரி, 2011 இல் எழுதிய இந்த அற்புதமான பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் அப்போதிலிருந்து வரவில்லையா? என்ன ரசனையற்ற வாசகர்கள் தம்பி!

    பதிலளிநீக்கு