மொத்தப் பக்கக்காட்சிகள்

11/07/2011

சர்க்கரை’: காலணி இல்லாமல் நடக்காதீர்கள்

சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் கால்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வீட்டுக்குள் நடமாடும்போதுகூட வெறுங்காலோடு நடக்காதீர்கள். காலணி அணிவது நல்லது. ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.

பாதங்களில் ஏதேனும் கொப்புளங்கள், வெடிப்புகள், கீறல்கள், தோலுரிவது, நிறம் மாறுவது ஏற்பட்டிருக்கிறதா என்று தினமும் சோதனை செய்து பாருங்கள். குறிப்பாக விரல் இடுக்குகளைக் கவனியுங்கள்.
தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10நிமிஷங்கள் பதிய வையுங்கள். நீரின் வெது வெதுப்பை முழுங்கையால் உணர்ந்து பாருங்கள். ப்யூமிக் ஸ்டோன் கொண்டு கடினமான பாதங்களை மெல்ல தேயுங்கள்.


பின் இரு பாதங்களையும் சோப் கொண்டு கழுவுங்கள். நன்றாக உலர்த்திய பின் குதிகாலைச் சுற்றி எண்ணெய்ப் பசை கொண்ட நல்ல கிரீமைத்தடவுங்கள்.


உடல் முழுவதையும் கால் தாங்குகிறது. எனவே காலில் அழுத்தம் அதிகம். வாகனங்களுக்கு “ஷாக் அப்சார்ஃபர்’ உள்ளதுபோல் அழுத்தத்தைத் தாங்க பாதங்களுக்கு உதவ சிறப்புக் காலணிகளை (எம்சிஆர் காலணிகள்) அணியுங்கள். ஈரமான காலணிகளை அணியாதீர்கள்.
காலில் ஆணியோ தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்டியெறிய முயற்சிக்காதீர்கள்.மருத்துவரிடம் செல்லுங்கள். பாதங்களின் மேல் ஒத்தடம் தருவதற்காக சுடுநீர் பாட்டில்களையோ உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.


புகை பிடிப்பதை விட்டு விடுங்கள். புகையிலை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கி கால்களுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைகிறது.இதனால் இறுதியில் காலையே இழந்துவிடக் கூடிய அபாயம் ஏற்படக்கூடும்.
நகம் வெட்ட கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி, கத்தி போன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. நகத்தை வெட்டாமல் “அரம்’ கொண்டு
தேய்த்துக் குறைப்பது நல்லது.


தரையில் படுத்து உறங்காதீர்கள்.பூச்சிகளும் எலி போன்றவைகளும் காலைக் கடிக்கும் ஆபத்து உண்டு. தரையில் அமரும்போது கால்களைக் குறுக்குவாட்டாக வைத்துக் கொள்ள வேண்டாம்.ஏனெனில் இப்படி அமர்வதின் காரணமாக நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் மீது அழுத்தம் ஏற்படலாம். எப்போதும் நாற்காலியில் உட்காரப் பழகுங்கள்.
வீட்டில் வெறுங்காலில் இருட்டில் நடக்காதீர்கள்.வெளிச்சத்தில் நடக்கலாம்.அதிக சூடு அல்லது கடும் குளிர்ச்சி இரண்டையும் தவிர்க்கவும். சூடான இடங்களில் கால் வைக்காதீர்கள்.இரவில் பாதங்கள் குளிரால் ஜில்லென்று ஆகிவிட்டால் பருத்தி அல்லது கம்பளி காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.


ஷு போடும் போது நூறு சதவீதம் பருத்தியிலான காலுறைகளை அணிவதே நல்லது.அவை பாதங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். எப்போதும் தோல் ஷுக்களையே அணியுங்கள். காலணிகள் சரியான அளவில் இருப்பது அவசியம். கூரான முனையுள்ள ஷுக்களைத் தவிர்த்துவிடுங்கள்.
தினமும் காலணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஷுகள், காலுறை களைச் சோதித்துப் பாருங்கள். உள்ளே தேவையற்ற பொருள்கள் ஏதேனும் இருக்கக் கூடும். அவற்றை அகற்றிவிடுங்கள். அதேபோல கழற்றும் போதும் ஒரு முறை பாதங்களைக் கவனித்துப் பாருங்கள். கால் தோலின் நிறம் மாறுதல், வலி எடுத்தல், எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, மத மதப்பு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக