மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!


எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும்… வளர்ப்பு நட்பு இவற்றால்தான். இன்றைய இளைய தலைமுறைஒரு சில மாற்றங்களைச் செயல்படுத்தினால் உலக அரங்கில் நம் பலம் மேலும் ஓங்கும்.

தமது பெற்றோரின் வருமானத்தை அறிந்து அதற்கேற்ப சிரமம் கொடுக்காதவாறு படிக்கவும் செலவின் சிக்கனமும், பண்பாட்டில் பிடிப்பும் கட்டாயம் வேண்டும். தாய் மொழியில் உரையாடும் துணிச்சல் தேவை. தமிழ்நாட்டில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த இருவர் கூட ஆங்கிலத்தில் உரையாடுவது வருத்தமளிக்கிறது. மொழி என்பது கருத்தொடராக வருவதால் தான், தாய்மொழி எனக் கூறப்படுகிறது. தாய்மொழியில் உரையாடினால் மற்றவர்கட்கு புரியாது என்ற நிலையில் பிறமொழியில் பேசுவதை வழக்கமாய் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழியின் தனிச்சிறப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அம்மாவின் சகோதரனை – மாமா என்றும், சகோதரியை சின்னம்மா என்றும், அப்பாவின் சகோதரனை சித்தப்பா என்றும், சகோதரியை அத்தை என்றும் பல உறவுப் பெயர்களில் அழைக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் ஆண்டி (Aunty) என்றும் அங்கிள் (Uncle) என்றும் எல்லோரையும் அழைக்கின்றோம்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்

மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”

என்ற பாரதி வாக்கு உண்மையே.

தாய் வழி வாழ்க்கை வாழும் நம் இளைஞர்கள் தாய் மொழியிலேயே பேச விரும்ப வேண்டும்.

மழை வெள்ளம் சேதப்படுத்தாமலிருக்க அணை கட்டி தேக்கி வைத்து முறையாகப் பயன் படுத்துவது போல், இளைஞர் பலம் விரையமாகாமல், மேல் நாட்டு பண்பாடற்ற கலாச்சாரத்துக்கு அடிமையாகாமல் இருக்க கல்வி நிறுவனங்கள் பாடங்களைப் போதிப்ப துடன் நல்ல பழக்கங்களையும் ஒழுக்கமான வாழ்க்கை நெறிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

உலக நாடுகளில் நம் நாட்டு இளைஞர் பலம் ஒப்புவகை இல்லாதது. கடந்து வந்த பாதையை அடிக்கடி நினைவுகூர்ந்து, இன்றைய நல்ல நிலையில் மற்றவர்கட்கு இயன்றஅளவு உதவும் அன்பர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெருமைப்பட வேண்டிய செய்தி.

பெற்றோர்களும் தம் வீட்டு இளைஞர்கட்கு நல்ல வழிகாட்டி, சரியான பாதையில் பயணத்தை தொடரச் செய்ய வேண்டும். இன்றைய சிறார்கள் தான் நாளைய இளைஞர்கள் என்பதால் அவர்கட்கு நல்ல பழக்கங்களை கற்பிப்போம். இதற்கு இயற்கை வளமும் துணையாக இருப்பதை இனி பார்ப்போம். வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக