அடுப்பை ஊதி விட்டாள் மேகலை. புகை இன்னும் அதிகமானதே தவிர விறகு எரிவேனா என்று அடம் பிடித்தது. விறகில் பொதிந்திருந்த ஈரம் புகையை மேலும் மேலும் அடர்த்தியாக்கியது.
"ஐந்து ரூபா அதிகமா செலவழிக்க முடிஞ்சிருஞ்சா நல்ல விறகா வாங்கியாந்திருக்கலாம், நல்லா எரிஞ்சிருக்கும்" -- தன் நிலையை நொந்து கொண்டே விறகை சரி செய்தாள்.
ரோடு போடற கூலி வேலைக்குப் போய், கமிஷனை எடுத்துக் கொண்டு மேஸ்திரி தரும் ரூபாயில் அரிசி பருப்புன்னு சகலமும் அவள் வாங்கியாக வேண்டும்.
அவள் புருஷன் மாரியோ ஒரு நாள் வேலைக்குப் போனால் பத்து நாள் போகமாட்டான்.
களைத்து வீடு திரும்பும் மேகலையை வழியிலேயே மடக்கி கூலிப் பணத்தில் பாதியை பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவான். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான்.
அடுப்பு இன்னும் அதிகமாக புகையை கக்க, ஊதி ஊதி அவளின் கண்கள் இரண்டும் சிவந்து மூச்சு முட்ட ஆரம்பித்தது.
இன்னமும் மிச்சம் மீதியிருந்த போதையுடன் குடிசையினுள் படுத்திருந்த மாரி கண்களை கசக்கிக் கொண்டே எரிச்சலுடன் எழுந்தான். நேராக அவளிடம் போய் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.
"சனியனே! என்னடி சமையல் பண்றே? அடுப்பை சரியா எரிய வைக்க துப்பில்லை, வீடு பூரா ஒரே புகை, தூ...!"
அதிர்ச்சியில் உறைந்து போய் மேகலை உட்கார்ந்திருக்க... பாவீ நான் உழைச்ச காசையும் நீ பிடுங்கிக்கிறதால தானே இந்த ஈர விறகைக் கட்டிட்டு மாயறேன். நீயே என்னை அடிக்கிறியே! மனசில் வைதாள்.
குடிசைக்கு வெளியே போய் உட்கார்ந்தான் மாரி. பீடி ஒன்றை பற்ற வைத்து புகையை குப்பென்று இழுத்து சாவகாசமாய் வெளியே விட்டான்.
திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவனின் மகள் மாலா பீடி புகையின் நெடி தாளாமல் இரும்ப ஆரம்பித்தாள்.
" சனியன் பிடிச்ச பீடி புகை நாத்தம். சுவாசிக்கவும் முடியலே, படிக்கவும் முடியலே " -- சொல்லிவிட்டு எழுந்து குடிசைக்குள் போனாள்.
பளாரென்று அறைந்தது மாதிரி இருந்தது மாரிக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக