ஒவ்வொரு முறை பெட்ரோல் மற்றும் டீஸல் விலை ஏறும் போது கவலைப்படுவது உலக மக்களின் வழக்கமாகி விட்டது.
தனிப்பட்ட முறையில் வாகனங்களுக்காக - அது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் ஆனாலும் சரி, காரானாலும் சரி- அதிக பணத்தைச் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறது. லாரி போன்ற வாகனங்கள் கறிகாய் உள்ளிட்ட ஏராளமான பொருள்களை ஏற்றிச் செல்வதால் அந்தப் பொருள்களின் விலையும் அபரிமிதமாக ஏறி விடுகிறது.
வாகனங்கள் கக்கும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மானாக்ஸைடு உள்ளிட்ட நச்சுப் புகையால் நகரின் வளி மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
குளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமாதலுக்கு இந்த வாகனங்களின் நச்சுப்புகையே முக்கிய காரணம். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் நேர் மேலே ஓஸோன் படுகையில் பெரிய துளை இந்த புவிவெப்பமாதலால் ஏற்பட்டு விட்டது.
இதனால் உலக மக்களுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
கடலில் அரை டிகிரி செல்ஸியஸ் வெப்பம் உயர்ந்ததால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் ஆபத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஆகவே பெட்ரோல், டீஸல் போன்ற எரிபொருளுக்கு சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்காத மாற்று ஏற்பாடை ஆராய்வது இன்றைய சூழ்நிலையில் அவசியமாகி விட்டது.
உலகில் 174 கோடி வாகனங்கள் இன்று ஓடுகின்றன. இவற்றிற்கு அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீஸல் போட்டு கட்டுபடியாகவில்லை. உலகில் உள்ள எண்ணெய்க் கிணறுகள் தோண்டித் தோண்டி சுரண்டப்பட்டு வற்றி வருகின்றன. இன்னும் 40 ஆண்டுகளில் ஒரு சொட்டு பெட்ரோல், டீஸல் இல்லாத நிலை உலகில் ஏற்பட்டு விடும்!
இந்த நிலை ஏற்பட்டால் உலகில் உள்ள அனைத்து போக்குவரத்து சாதனங்களும் செயல் இழக்கும்! ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், கார், லாரிகள், டீஸலால் இயக்கப்படும் ரயில்கள், பெட்ரோலால் இயங்கும் விமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் நின்று போனால் உலகின் இயக்கமே ஸ்தம்பித்து விடும்!
பெட்ரோல் மற்றும் டீஸலை அனைவரும் ஏன் நாடுகின்றனர்? இதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவது காரணம்:- அதில் எனர்ஜி டென்ஸிடி எனப்படும் ஆற்றல் அடர்த்தி மிக அதிகம் உள்ளது. பெட்ரோல் ஆற்றலை உடனடியாகத் தருகிறது.
இரண்டாவது காரணம்:- ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அதைக் கொண்டு செல்வது மிகவும் சுலபம். பைப்புகள் மூலமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பெட்ரோல் விரைவாகவும் சுலபமாகவும் எடுத்துச் செல்லப்படுகிறது. லாரிகள், பெட்ரோல் போகிகள் மூலமாகவும் துரிதமாக பெட்ரோல், டீஸலைக் கொண்டு செல்ல முடிகிறது.
மூன்றாவது காரணம்:- மற்ற எரிபொருளை விட எண்ணெயை சுலபமாகவும் அதிகமாகவும் இன்று பெற முடிகிறது.
நிலத்தடியிலும் ஆழ்கடல் அடியிலும் மறைந்திருக்கும் இந்த எண்ணெயை அதி நவீன அறிவியல் உபகரணங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து மேலே எடுத்து வர வழிவகை செய்கின்றன. பின்னர் இது சுத்திகரிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெயை கறுப்புத் தங்கம் என்று சொல்கிறோம். பணத்தை அள்ளித் தரும் கச்சா எண்ணெய் இருக்கும் நாடுகள் எண்ணெய் வள நாடுகள் என அழைக்கப்படுகின்றன. அரபு நாடுகளின் செல்வக் கொழிப்புக்கு இந்த கறுப்புத் தங்கமே காரணம்!
ஆக, இந்த நிலையில் எண்ணெய் இல்லாத சூழ்நிலை ஏற்படப் போவதைக் கருத்தில் கொண்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டுமானால் அப்படிப்பட்ட மாற்று எரிபொருள் அதிக ஆற்றலை உடனடியாகத் தருவதாகவும் அதிக அளவில் கிடைக்கக் கூடியதாகவும் கிடைக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாகவும் விரைவாகவும் கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தோடு விலை குறைவாகவும் இருந்து சுற்றுப்புறச் சூழ்நிலையைக் கெடுக்காத ஒன்றாக இருந்தால் மிகப் பெரிய வரபிரசாதமாகிவிடும்.
இந்த மாற்று எரிபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் ஏராளமானவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். எதினால் என்பது கரும்பிலிருந்து எடுக்கப்படும் மாற்று எரிபொருள். லிக்விபைட் பெட்ரோலியம் கேஸ் (எல்.பி.ஜி), கம்ப்ரெஸ்ட் நேச்சுரல் கேஸ் (சி.என்.ஜி), எலக்ட்ரிக் கார்கள், ஹைப்ரிட் கார்கள், ஹைட்ரஜன் கார்கள், சோலார் பவர் வாகனங்கள் என ஏராளமானவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் அதிசயமாக இருக்கப் போவது ஹைட்ரஜன் கார் தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக