சென்னை: கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி வரும் இமெயில்களை நம்பாதீர்கள் என்று சென்னை புறநகர காவல்துறை ஆணையர் ஜாங்கிட் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சமீப நாட்களாக போலி இ-மெயில் மூலம் பல லட்சம் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. பணத்துக்கு ஆசைப்பட்டு பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். இது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகின்றன.
வங்கிகளில் இருந்து அனுப்பியது போன்ற தோற்றத்துடன் தகவல்களை பெற்று விடுகிறார்கள். வங்கி கணக்கு எண், மற்றும் ரகசிய குறியீட்டு எண் பெற்று விடுகிறார்கள்.
இத்தகைய இ-மெயில்களுக்கு பொது மக்கள் பதில் கொடுக்க வேண்டாம். ரகசிய குறியீடு எண்ணை நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் உங்கள் பணம் அனைத்தையும் எடுத்து விடுவார்கள்.
உங்களுக்கு போலி இ- மெயில் வரும் என்று வங்கிகள் எச்சரிப்பது போல வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.
இ-மெயில் உபயோகிப்பாளர்களில் இருந்து உங்களை தேர்வு செய்து இருப்பதாகவும் உங்களுக்கு கார் பரிசு விழுந்து இருப்பதாகவும், அதை இந்தியாவுக்கு அனுப்ப செலவுத் தொகை கேட்பார்கள். இப்படி வரும் மெயில்கள் நம்பாதீர்கள்.
வெளிநாட்டில் வேலை என்றும் பல லட்சம் ரூபாய் கிடைக் கும் எனவே விசாவுக்கு பணம் அனுப்புங்கள் என்ற கோரிக்கையுடன் வரும் இ-மெயில்களையும் நம்ப வேண்டாம்.
நீங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து, பணம் சம்பாதிக்கலாம். அதற்காக வங்கிகளில் கணக்கு தொடங்கி, அதன் எண்ணை தருமாறு கேட்டு மெயில்கள் வரலாம். 10 சதவீத கமிஷன் நீங்களே எடுத்துக் கொண்டு 90 சத வீதத்தை வெளி நாட்டுக்கு அனுப்பும் படி இ- மெயில்கள் வரும். இது மோசடிக்கு உடந்தையாக இருப்பது போன்ற குற்றமாகும். நீங்களும் கைதாக நேரிடும். எனவே இத்தகைய மெயில்களை நம்பி ஏமாறாதீர்கள்.
நைஜீரியன் கேம்ப் என்றழைக்கப்படும் போலி மெயில் கும்பலிடம் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நூதனமாக மோசடியில் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவது இல்லை. இதில் பொதுமக்கள் தான் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக