சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் மீனா (57) (பெயர் மாற்றம்) இவரது செல்போனுக்கு கடந்த மாதம் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் “உலககோப்பை கால்பந்து போட்டியையொட்டி நடத்தப்பட்ட பரிசு குலுக்கலில் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. பரிசுத் தொகையைப் பெற கீழ்கண்ட இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப் பார்த்ததும் மீனா குஷி அடைந்தார். உடனே அந்த எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டிருந்த இ- மெயிலுக்கு தனது முகவரியை அனுப்பினார். அதன் பிறகு அவருக்கு வந்த இ-மெயிலில், “உங்கள் பரிசுப் பணத்தை ஒப்படைக்க இங்கிலாந்தில் சில சட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
இதே போல் இந்தியாவில் சுங்கத் துறைக்கும் பணம் செவழிக்க வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மீனா மொத்தம் ரூ.57 லட்சம் வரை இ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் பணம் செலுத்தி ஒரு மாதம் ஆகியும் குலுக்கல் பரிசு பணம் வந்து சேர வில்லை.
இதனால் தன்னை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி விட்டதை அறிந்தார். இது பற்றி அவர் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் கொடுத்தார். கமிஷனர் இவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றினார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மீனா ஜல்பிகார், ஜரியார், ஜாவித்கான், இம்ரான் ஜாரி ஆகியோர் பெயரில் உள்ள தனியார் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்த மர்ம நபர்கள் பற்றிய விவரங்களை வங்கி அதிகாரிகளிடம் சேகரித்து வருகிறார்கள்.
ரூ.57 லட்சம் பணத்தை பரிசு குலுக்கல் கும்பல் டெல்லி, மும்பையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் எடுத்துள்ளனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் உள்ள ரகசிய கேமராவில் பதிவான படங்களை பார்க்க போலீசார் திட்ட மிட்டுள்ளனர். இதன் மூலம் எளிதில் மோசடி கும்பலை கண்டுபிடித்து விடலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மோசடி கும்பல் போலி பெயர்களில் கணக்கு தொடங்கி இருந்தால் அவர்களை கண்டு பிடிப்பது கடினம் ஏ.டி.எம். மையங்களில் வேறு நபர்களை வைத்து பணம் எடுத்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.
போலீசாருக்கு கடும் சவாலாக திகழும் இந்த எஸ்.எம்.எஸ். பரிசு குலுக்கல் மோசடி கும்பலை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக