மொத்தப் பக்கக்காட்சிகள்

12/03/2011

இந்தியாவில் அணுமின் உற்பத்தி தேவையா?

 
மனித இனத்தின் வளர்ச்சிக்கு சோஷலிச சிந்தனையின் வழிப்பட்ட அரசும், மின்சக்தியும் அவசியம் என்று மாமேதை லெனின் சோவியத் விடுதலையின்போது குறிப்பிட்டார். அந்நாளில் அவர் அணுமின்சக்தியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. வளர்ச்சி (வீக்கம்) என்ற ஆசையால் உந்தப்படும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், அதில் உறைந்திருக்கும் பேரழிவைக் குறைத்து மதிப்பிடுவது கவலையளிக்கிறது.

 கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தென்கிழக்கே, 104 கி.மீ. தொலைவில், கடலுக்கடியில் ஓர் எரிமலை இன்றும் கனன்று கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.÷உலக எரிமலை ஆய்வு நிறுவனத்தால் "0305-01' என்று குறிப்பிடப்படும் இந்த எரிமலை, 1757-ம் ஆண்டு ஜனவரி 20-ம் நாள் வெடித்துச் சிதறியதாக ஆவணங்கள் உள்ளன. பூம்புகார் நகரம் கடல்கோளால் மூழ்கியது என்ற இலக்கியங்களின் கூற்றும், அகழ்வாய்வில் அதற்கான தடயங்கள் உள்ளதும் நாமறிந்ததுதான்.
 
 அணுமின் நிலையங்களின் கதிர்வீச்சின் விளைவாக, தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளர்ச்சிக் குன்றல், வயிற்றுப்புண் எனப் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
இவ்வனைத்தையும் மறந்துவிட்டு மின்சாரத்தின் தேவையை மட்டுமே முன்னிலைப்படுத்தும் அணுமின்சக்தி ஆதரவாளர்கள், தற்போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைப் பற்றி பேசுவதே இல்லை.
 
 இந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சக்தி நம் மக்களின் தேவைகளுக்கு, வேலை வாய்ப்புக்கு, உள்நாட்டு நுகர்வுக்கான உற்பத்திக்கு என முன்னுரிமை கொடுத்து திட்டமிடுவதை விடுத்து, ""ஏற்றுமதி பொருளாதார நோக்கில்' செலவிடப்படுகிறது என்ற உண்மையை விளக்க மறுக்கின்றனர்.
 
 ÷எடுத்துக்காட்டாக, சென்னை துறைமுகத்திலிருந்து தினமும் 300 மகிழுந்துகள் ஏற்றுமதியாகின்றன. இது 16 லட்சம் யூனிட் மின்சாரச் செலவில் உருவானது.
 
 இதுபோலவே மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் பி.பி.ஒ. பன்னாட்டு நிறுவனங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள், மால்ஸ் எனும் பேரரங்குகள், கேளிக்கை-விற்பனை அரங்குகள் என சென்னை பகுதியில் அமைந்துள்ள 1000-க்கும் மேற்பட்ட குளிரூட்டப்பட்ட கட்டடங்கள் நாளொன்றுக்கு பல லட்சம் யூனிட்டுகள் மின் சக்தியை நுகர்கின்றன.
 
 இந்தியாவில் தனி மனித ஆண்டு மின் நுகர்வு 704 யூனிட்டுகள்.
 மக்கள்தொகையில் 33 சதவிகிதம் பேர் மின் இணைப்பற்றவர்கள். இந்த நுகர்வு ஐரோப்பியர்களின் நுகர்வில் 11 சதவிகிதம் மட்டுமே. எனவே, இந்திய ஆட்சியாளர்கள் உரத்து கூச்சலிடும் மின்சக்தி தேவை என்பது யாருடைய நலன்களுக்காக என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
 
நம் நாட்டில் 65 சதவிகிதம் மக்கள் வேளாண் துறையை சார்ந்துள்ளனர். தற்போது உலகில் உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருக்கும் சூழலில், வேளாண் உற்பத்தித் திறனையும், உற்பத்தியையும் பெருக்கி, வேளாண் பொருள்களின் மதிப்புக் கூட்டும் செயல்பாடுகளில் அரசு முனைந்து செயல்பட்டு, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை (ஜிடிபி) உயர்த்தவும், மக்களின் வறுமையைப் போக்கவும் முன்னுரிமை கொடுத்து மின்சக்தியை வழங்கும் போக்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
 
 ÷இந்தியா உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம். எரிசக்தி பயன்பாடு 4 சதவிகிதம்; அமெரிக்கா உலக மக்கள்தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. ஆனால், எரிசக்தி பயன்பாடு 24 சதவிகிதம்.
 
 உலகின் மிகவும் பணக்கார நாடான, தொழில் நுட்பத்திறனில் முன்னோடியான, அமெரிக்கா, தனது தேவையில் 20 சதவிகிதம் அளவுக்கே அணுமின் சக்தியை உற்பத்தி செய்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக ஓர் அணுமின் நிலையத்தைக்கூடக் கட்டவில்லை. படிப்பறிவால் உலகின் முன்னோடியாக உள்ள அந்நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க அமெரிக்க அரசினால் இயலவில்லை. அப்படி இருக்கும்போது, இங்கே அணுமின் நிலையம் பற்றிய அச்சம் அடிப்படை இல்லாதது என்று எப்படிக் கூற முடியும்?
 
 ÷இந்தியாவில் தற்போது அணுமின்சக்தி 2.70 சதவிகிதம் மட்டுமே. மின் சக்தியைக் கடத்துவதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்பு 25 சதவிகிதம் (உலகத்திறன் 9 சதவிகிதம் மட்டுமே).
 
 இதை மேம்படுத்துவதன் மூலம் 16 சதவிகிதம் இழப்பு மிச்சப்படுத்தலாம். இதுபோல மின் திறன் மேம்பாடுகளின் மூலம் குறைந்தது 15 சதவிகிதம் மிச்சப்படுத்தலாம்.
 
 உற்பத்திக்கான சக்தி பயன்பாட்டில் இந்தியாவின் திறன் ஜப்பானுடன் ஒப்பிடுகையில் 27 சதவிகிதம் மட்டுமே. இதை மேம்படுத்தினால் நாம் இருக்கின்ற மின்சக்தியை வைத்தே இரு மடங்கு உற்பத்தியை எட்ட முடியும்.
 
 ÷நீர்மின் நிலையங்கள் மூலம் 90,780 மெகாவாட் மின் உற்பத்திக்கான வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி 2 லட்சம் சதுர கி.மீ. இங்கு சூரிய மின்சக்தி நிலையங்கள் அமைக்கலாம். நம் நாடு மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் நீண்ட கடற்கரையையும், பல்வேறு நதிகள் நாட்டின் குறுக்கே ஓடுவதால் நீண்ட நீர்வழித்தடத்தையும் கொண்டுள்ளது.
 இது நமக்கு இயற்கையில் கிடைத்துள்ள பெருவாய்ப்பாகும். நாளும் 60 லட்சம் டன் பொருள்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு தரைவழி மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு நீர்வழித்தடத்தைப் பயன்படுத்தினால் 86 சதவிகிதம் எரிசக்தி மிச்சப்படும்.
 
இது நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில், 14 சதவிகிதம் குறைய வழிகாணும். இது 21,000 மெகாவாட் மின்சக்திக்கு சமம். அதாவது, 2.73 லட்சம் கோடி ரூபாய் செலவினைத் தவிர்த்து, அதனை நீர்வழி கட்டமைப்புக்குப் பயன்படுத்தலாம். பசுமைக்குடில் வாயுக்கள் வெளிப்படுவது குறையும்.
 
 ÷உலக மயமாக்கல் போர்வையில் இந்தியா மேலைநாடுகளின் சந்தைக் காடாக மாறிவருவதையும், இதை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சிகள் ஆதரிக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் பலமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது. வரும் 20 ஆண்டுகளில், 40 ஆயிரம் மெகாவாட் அணுமின் நிலையங்களை, 6.4 லட்சம் கோடி ரூபாயில் அமைக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இது வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைக்குத்தான் உதவும் என்பது தெளிவு.
 
 ÷அணுமின் நிலைய விபத்துகளில் சில உங்களது பார்வைக்கு:
 
 4 மே 1987-ல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து
2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர்.
 
 10 செப்டம்பர் 1989-தாராப்பூர் அயோடின் கசிவு - கதிர்வீச்சு பாதுகாப்பு அளவைவிட 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர்.
 
 3 பிப்ரவரி 1995 -கோட்டா ராஜஸ்தான் - ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டுகள் மூடல். செலவு 280 மில்லியன் டாலர்.
 
 22 அக்டோபர் 2002 - கல்பாக்கம்-100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு செலவு 30 மில்லியன் டாலர்.
 
 எல்லா உற்பத்தி நிகழ்வுகளிலும் விபத்து என்பது தாங்கக்கூடிய அழிவு என்பதை உள்ளடக்கியதாக உள்ளதுதான். ஆனால், பேரழிவு என்பது அணுமின் நிலையங்களில் நிகழ வாய்ப்புள்ளது. இது இயற்கை சீற்றங்களினால் மேலும் உயரும் என்பது உண்மை. இம் மின் நிலையங்களில் பெறப்படும் கழிவுப் பொருள்களின் அரை ஆயுள் காலம் என்பது 25,000 ஆண்டுகளாகும். இதைப் பாதுகாப்பது என்பது வருங்கால சமுதாயத்துக்கு நாம் விட்டுச்செல்லும் பேராபத்தல்லவா?
 
 ÷கடந்த 8 மாதங்களுக்கு முன் (மார்ச்-2011) ஜப்பானில் சுனாமி வழி அணுமின்நிலைய விபத்து புகுஷிமாவில் ஏற்பட்டது.
 
 அதைப் பார்வையிட சமீபத்தில் இதழாளர்களை அவ்வரசு அனுமதித்துள்ளது. கதிர்வீச்சைக் குறைத்து, செயலிழக்க வைத்து இந்நிலையத்தை மூட முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது செய்தி.
 அணுமின் நிலையத்தில் உற்பத்தி இலக்கை அடைய பல மணி நேர இயக்கத்துக்குப் பின்னரே இயலும். இதை அவசியத் தேவை எனக் குறிப்பர். இதன் இயக்கத்தை நிறுத்தவும் பல மணி நேரமாகும். எனவேதான் இந்நிலையத்தை அடி ஆதார நிலையம் என்று அழைப்பர்.
 
 சுனாமியின்போது அணுஉலையை குளிர்விப்பது என்பது மிகவும் சிக்கலானது என்பது ஜப்பானில் புகுஷிமா அணுமின்நிலைய விபத்தின்போது தெளிவாகியது. இதன் கதிர்வீச்சு 200-300 கி.மீ. என்பது கல்பாக்கம்/கூடங்குளத்துக்கும் பொருந்தும்.
 
 உலகமயமாக்கல், ஏற்றுமதி பொருளாதாரம் என்ற மாயையிலிருந்து விலகி, நமது மண்ணுக்கேற்ற பொருளாதாரம், பெருவாரியான மக்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி முறைக்கு முன்னுரிமை என்று திட்டமிட்டால்,
 
"அணுமின்சக்தி' இல்லாமலேயே நாம் சிறப்பாக வாழ முடியும்.
 அணுமின் நிலையம் பற்றிய தேவையற்ற பயம்; யாராவது "ரிஸ்க்' எடுக்கத்தானே வேண்டும்; தெருவில் நடந்து போனால் விபத்து ஏற்படும் என்பதால் நடக்காமலா இருக்கிறோம்; அணுமின் சக்தி இல்லாமல் இந்தியா வளர்ச்சியடைய முடியாது - இப்படி எத்தனை எத்தனையோ காரணங்களைக் கூறுபவர்களில் ஒருவர்கூட தங்களையோ, தங்கள் குடும்பத்தினரையோ சின்ன அளவில்கூட "ரிஸ்க்' எடுக்க அனுமதிக்காதவர்கள் என்பதையும் மினரல் வாட்டர் அல்லாமல் சுத்திகரிக்கப்படாத தண்ணீரைக்கூடக் குடிக்காதவர்கள் என்பதையும் மறுக்க முடியுமா?
 
 சின்ன அளவு "ரிஸ்க்' எடுக்கவே பயப்படுபவர்கள் வீட்டு முற்றத்தில் அணு உலையை நிறுவ ஆதரவுக் குரல் எழுப்புகிறார்கள் என்றால், இவர்களது நோக்கம் மக்களை வளப்படுத்துவது அல்ல. வியாபார மற்றும் தொழில் நிறுவனங்களை பலப்படுத்துவதுதான்!
 
 கட்டுரையாளர்: மின் பொறிஞர் - சமூக ஆர்வலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக