மனித சமுதாயம் அன்பையும், அமைதியையுமே விரும்புகிறது; அவையே போரையும், பூசலையும் விரட்டுகிறது; கலகம் இல்லாத உலகத்தைக் காட்டுகிறது; ஞானியரும், மகான்களும், மேதைகளும் விரும்பியதும், போதித்ததும் அதுவே.
காலம் காலமாக அறநூல்களும் அவைபற்றியே பேசுகின்றன; ஜாதி, சமயம், இனம், மொழி என்னும் இந்த எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கவே இவை பாடுபடுகின்றன.
ஆனால், இதற்குத்தான் எத்தனை தடைகள்; எதிர்த்து நிற்கும் இடர்ப்பாடுகளும் ஏராளம். மக்களைப் பிரித்து வைக்கவும், மனங்களைக் கெடுத்து வைக்கவும் இடைவிடாமல் பரப்புரை செய்யப்படுகின்றன. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்தானே!
முல்லைப் பெரியாறு அணை பற்றிய விவகாரம் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு விளையாடும் போக்கு பல காலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அரசாங்கமே காரணமாக அமையலாமா?
தமிழ்நாட்டுக்கும், கேரளத்துக்கும் இடையிலான முல்லைப் பெரியாறு பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 100 ஆண்டுகள் பழைமையான இந்த அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு முனைந்து நிற்கிறது.
இதில் கட்சி வேறுபாடு இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி அரசாங்கமாயினும், காங்கிரஸ் அரசாங்கமாயினும் அங்கு ஒன்றுபட்டுச் செயல்படுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை உடைவதைப்போல "கிராபிக்ஸ்' செய்து குறுந்தகடாக வெளியிட்டார் கேரளத்தின் முந்தைய முதல்வர் அச்சுதானந்தன். இவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்; இப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது; அதன் முதல்வர் உம்மன் சாண்டி ஆட்சிக்காலத்தில் புதிய ஆங்கிலத் திரைப்படம் "டேம் 999' வெளிவந்துள்ளது.
"நூறு ஆண்டுகாலப் பழைமையான முல்லைப் பெரியாறு அணையை முன் எச்சரிக்கையாக இடிக்காவிட்டால் பேரிடர் ஏற்படும்' என்பதை விளக்குவதுபோல இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அணை உடைவது போலவும் அதிலிருந்து வெளிவரும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானவர்கள் இறப்பதுபோலவும் இப்படத்தில் காட்டப்படுகிறது.
கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோஹன்ராய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் நாயகனாக வினய், நாயகியாக விமலாராமன் நடித்துள்ளனர்.
ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயம் கருதி வலுவற்ற அணையைக் கட்டுகிறார்.
இதனால் அணை உடைந்து ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதன் மூலம் பழைய அணைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.
ஏற்கெனவே இவர் முல்லைப் பெரியாறு அணையை மையமாக வைத்து, "டாம்ஸ்' என்ற டாகுமெண்டரி எடுத்துள்ளார். இதற்கு ஹாலிவுட்டில் விருது கிடைத்துள்ளது. இப்போது பழங்கால அணை உடைவதை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையைப்போல உலகில் 100 ஆண்டுகாலப் பழைமை வாய்ந்த 4 ஆயிரம் அணைகள் உள்ளன. இதன் எண்ணிக்கை 2020-ம் ஆண்டுவாக்கில் 20 ஆயிரமாக உயரும் என்றும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. ""அணுவால் வரும் அழிவுக்குக் கவலைப்படுகிறோம். அணையால் வரும் அழிவும் மோசமானது'' என்று இவர் கூறுகிறார்.
1975-ம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த பான்கியோ அணையின் பேரிடரில் சிக்கி இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழந்த சம்பவமே இந்தப் படத்துக்கு அடிப்படையாகும் என்று இயக்குநர் கூறியுள்ளார். இது உலகில் ஒன்பதாவது பேரிடர் நிகழ்வாகும். முல்லைப் பெரியாறு அணையிலும் அதே அபாயம் இருப்பதாக இப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
"முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தாம். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, இந்த அணையை உடைத்துவிட்டுப் புதிய அணையைக் கட்டுவதற்குத் தமிழக அரசே ஒத்துழைக்கும்' என்றும் அதன் இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் முல்லைப் பெரியாறு அணை எரியும் பிரச்னையாக மாறிவிட்ட நிலையில் "டேம் 999' படம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுபற்றித் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரால் தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசனம் கிடைக்கிறது என்றும், அணை உடைவதுபோல காண்பிக்கும் காட்சி தமிழக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தப் படம் திரையிடப்படுவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் தடைவிதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார். தற்போதுள்ள அணை பாதுகாப்பாக இருப்பதாலும், இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக கேரள மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும், பீதியையும் ஏற்படுத்தாமலும், புதிய அணை கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நவம்பர் 23 அன்று முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இதற்கு எதிர்மாறாக உள்ளது. "முல்லைப் பெரியாறு அணையில் தற்போது சேமிக்கப்படும் 136 அடி நீருக்குப் பதிலாக 120 அடி தண்ணீரைச் சேமிக்க வேண்டும். மேலும் இந்த அணைக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட தமிழகம் ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்துவதற்காக கேரள எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திப்பார்கள்' என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணை பற்றிய வரலாற்றை அறிவது மிகவும் அவசியம். பெரியாறு அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது ஆங்கில அரசு ஒதுக்கியிருந்த நிதி அணை கட்டுவதற்குப் போதுமானதாக இல்லை. அந்த அணைகட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் பென்னி குயிக் என்ற ஆங்கிலப் பொறியாளர் இங்கிலாந்து நாட்டில் இருந்த தன் சொத்துகளை விற்று, அந்தப் பணத்தில் இந்த அணையைக் கட்டி முடித்தார்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வரும் நீரை 1895 அக்டோபர் 10 முதல் 999 ஆண்டுகள் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அப்போது ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசாங்கமும், திருவாங்கூர் சமஸ்தானமும் கையொப்பமிட்டுள்ளன.
1979-ம் ஆண்டுவரை ஒப்பந்தப்படி பெரியாறு அணையிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது. ஆனால், கேரளத்தில் உள்ள "இடுக்கி' அணைக்கு நீர் வரத்தைக் கூட்டக் கருதிய கேரள அரசு, பெரியாறு அணையில் கூட்டப்படும் நீரின் அளவைக் குறைத்து, அதை "இடுக்கி' அணைக்குத் திருப்ப நினைத்தது. இதற்கு அணை பலவீனப்பட்டுவிட்டதாகப் பொய்யான காரணங்கள் கூறப்பட்டன. போலியான போராட்டங்கள் நடத்தப்பட்டு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கும் கட்டுப்பட மறுத்து, 2006 மார்ச் மாதத்தில் கேரள அரசு நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி பெரியாறு அணையை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
இதன் மூலம் கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்பையே கேலிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சட்டத்தை எதிர்த்தும் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
இது இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் கேரள அரசு இப்போது தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முடிவெடுத்திருப்பது "நீதிமன்ற அவமதிப்பு' இல்லையா?
இயற்கை நியதி, மனிதநேயம், அரசாங்க ஒப்பந்தம், நீதிமன்றத் தீர்ப்பு என எதைப் பற்றியும் கவலைப்படாமல் மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
நியாயங்களையும், சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு ஓர் அரசாங்கம் மக்களுக்கு முன்மாதிரியாக விளங்க முடியுமா? அண்டை மாநில உறவுகளை அலட்சியம் செய்துவிட்டு ஒருமைப்பாடு பற்றி உபதேசம் செய்வதால் பயன் என்ன?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை இரண்டு மாநில மக்களின் உறவுக்கும், ஒற்றுமைக்கும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல இந்தத் திரைப்படம் "டேம் 999' வெளிவந்திருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்.
""எனக்கு உயிர்களிடம் அன்பு கொள்ளுவது போன்றதுதான் தேசப்பற்றும். நான் மனிதனாகவும், மனிதநேயத்துடனும் இருப்பதினாலேயே தேசப்பற்று கொண்டவனாகவும் இருக்கிறேன்.
இந்தியாவுக்குச் சேவை செய்வதற்காக இங்கிலாந்துக்கோ, ஜெர்மனிக்கோ தீங்கிழைக்க மாட்டேன்'' என்றார் காந்தியார். தம் மாநில மக்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக அடுத்த மாநிலத்தின் உரிமையை மறுக்கலாமா?
இந்திய மக்களுக்காகத் தன் சொத்துகளை விற்று, அணை கட்டிய ஆங்கிலேயனின் மனிதநேயத்தைப் பாராட்டுவதா? அண்டை மாநிலத்துக்கே தண்ணீர் தர மறுக்கும் சொந்த நாட்டுச் சோதரனைப் பாராட்டுவதா? இந்திய தேசிய ஒருமைப்பாடு படும் பாடு இதுதானா?
Thanks to Dinamani News Magazine
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக