மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2011

இந்திய மக்களை பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மருத்துவ ஆய்வின் எலிகளாய் பயன்படுத்தி வருகிறது


பொதுவாக எந்தவொரு புதிய மருந்தை ஆய்வு செய்து கண்டுபிடித்தாலும் அதனை எலிகளுக்கோ அல்லது கினியா பன்றிகளுக்கோ கொடுத்து பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு மனித பயன்பாட்டிற்கு உகந்ததா என்று நிறுவனங்கள் கண்டுபிடிக்கும். ஆனால் இன்றைய புதிய டிரெண்ட் என்னவெனில் ஏழை இந்திய மக்களை பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மருத்துவ ஆய்வின் எலிகளாய் பயன்படுத்தி வருகிறது என்பதே.

2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மனிதர்களை வைத்து மேற்கொண்ட பரிசோதனைகளில் 1,593 பேர் உயிரிழந்துள்ளனர். இது சுகாதாரச் சேவைகள் இயக்ககம் கொடுக்கும் புள்ளி விவரங்கள் ஆகும்.

'கிளினிக்கல் ட்ரையல்' என்று அழைக்கப்படும் இத்தகைய அறமற்ற சோதனைகளுக்கு நம் அரசாங்கம் அனுமதி வழங்கியது ஏன்? எப்படி? எதற்காக?

இந்த மருந்துப் பரிசோதனைகளில் 2008ஆம் ஆண்டு 288 பேரும், 2009ஆம் ஆண்டில் 637 பேரும், 2010ஆம் ஆண்டில் 668 பேரும் பலியாகியுள்ளனர்.

பலியானோருக்கான இழப்பீடு இதுவரை 22 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி உயிரிழப்பு ஏற்படுகிறது என்றால், ஒரு புதிய மருந்தை புற்றுநோய்க்காக ஒரு நிறுவனம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது என்றால் அது மனித உடலில் எவ்வாறு பலனளிக்கிறது என்பதற்கான எந்த ஆதரங்களும் இல்லை. அதனால் மனிதர்களை வைத்தே சோதனை நடத்தி விட்டால்? என்ன ஆகும்? பக்கவிளைவுகளால் மரணம் ஏற்படுகிறது.

உலகில் மரணம் என்ற ஒன்றே இல்லாமல் செய்து விடுவோம் என்று மருத்துவ சகோதரத்துவம் போட்டிபோட்டிக் கொண்டு 'தமாஷ்' சூளுரைகளை முன் வைத்து வரும் அதே வேளையில் மரணத்தை ஒழிக்கும் 'மிருத் சஞ்ஜீவனி'யே ஆட்களைக் கொல்லும் வேதனையை என்ன சொல்வது?

2008ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சயன்சஸ்) மருத்துவமனையில் இதுபோன்ற மருந்துச் சோதனையில் 49 குழந்தைகள் உயிரிழந்தன. குழந்தைகள் நோய்ப்பிரிவிலிருந்து 4,142 குழந்தைகள் இந்த ஆய்வுப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த குழந்தைகள் சாவுக்கு அந்த மருத்துவமனை கூறிய பதில்: 'ஏற்கனவே இந்த குழந்தைகளுக்கு இருந்த வியாதியால் இறந்தன'! ஏற்கனவே நோய் இருந்த குழந்தைகளை ஏன் கிளினிக்க ட்ரையலில் சேர்க்கவேண்டும்? முதலில் குழந்தைகளை வைத்து இது போன்ற மரணப்பரிசோதனை செய்ய யார் அனுமதி வழங்கியது?

ஒருவரை இதுபோன்ற மருத்துவ ஆய்வுக்கு சம்மதிக்க வைத்தும் நடைபெறுகிறது. அதாவது அவரிடம் உண்மைகளைக் கூறாமல் நைச்சியமாக அவரது உடலை பயன்படுத்திக் கொள்வது. அல்லது முக்கால்வாசி சம்மதம் பெறாமலேயே ஆய்வில் உள்ள மாத்திரைகளை, மருந்துகளை கொடுப்பது. பணத்தாசை காட்டியும் இதுபோன்ற செயல்களுக்கு சம்மதம் வாங்குவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைவந்த கலைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக