மொத்தப் பக்கக்காட்சிகள்

1/27/2012

எம்.ஆர்.ராதா: சினிமா உலகையும் கலக்கினார்நாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா. சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர். "நடிகவேள்" என்று பட்டம் பெற்றவர். எம்.ஆர்.ராதாவின் சொந்த ஊர் சென்னைதான்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு- ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் ராதா பிறந்தார். ராதாவின் அண்ணன் பெயர் எம்.ஆர்.ஜானகிராமன். தம்பி பெயர் எம்.ஆர்.பாப்பா. ராதாவின் தந்தை, உலகப்போரில் பணியாற்றியவர். ரஷிய எல்லையில் போர் புரியும்போது மரணம் அடைந்தார்.

நாடக நடிகர்

எம்.ஆர்.ராதா மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார். நாடகத்தில் நடிக்கும் ஆசை சிறு வயதிலேயே வந்துவிட்டதால், மேற்கொண்டு படிக்கவில்லை. "டப்பி" ரங்கசாமி நாயுடு கம்பெனி, சாமண்ணா கம்பெனி, ஜெகந்நாத அய்யர் கம்பெனி என்று பல்வேறு நாடகக் குழுக்களில் ராதா நடித்தார்.

நவாப் ராஜமாணிக்கம், சி.எஸ். ஜெயராமன், கே.சாரங்கபாணி, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, பி.டி.சம்பந்தம் ஆகியோரும், இவருடன் நாடகத்தில் நடித்து வந்தனர். நடிப்புடன், கார் டிரைவர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் ஆகிய வேலைகளையும் ராதா கற்றுக்கொண்டார்.

ரத்தக்கண்ணீர்

பிறகு சொந்தத்தில் நாடகக் கம்பெனி தொடங்கினார். "ரத்தக்கண்ணீர்", "தூக்கு மேடை", "லட்சுமிகாந்தன்", "பம்பாய் மெயில்", "விமலா", "விதவையின் கண்ணீர்", "நியூஸ் பேப்பர்", "தசாவதாரம்", "போர் வாள்" போன்ற நாடகங்களை நடத்தினார். இவற்றில் மிகவும் புகழ் பெற்றது "ரத்தக்கண்ணீர்".

3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. இதில், செய்தித்தாளை ராதா படிக்கும் ஒரு சீன் வரும். அன்றாடம் வரும் செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு, அதில் வரும் செய்திகளைப் படித்து "கமெண்ட்" அடிப்பார்.

இதற்காகவே, ரத்தக்கண்ணீர் நாடகத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். ராதா நாடகங்களில் பிரமாண்டமான காட்சி ஜோடனைகள், சீன்- செட்டிங்குகள் எதுவும் கிடையாது.

ஒரு கறுப்புத்திரை; ஒரு வெள்ளைத்திரை. இதை வைத்துக்கொண்டே, தன் நடிப்பு ஆற்றலைக் கொண்டு, நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விடுவார்.
ராமாயணமா? கீமாயணமா?

ஈ.வெ.ரா.பெரியார் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் மிகுந்த பற்று உடையவர், ராதா. தன் நாடகங்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். "ராமன் ஒரு குடிகாரன். மாமிசம் சாப்பிடுகிறவன்" என்று சித்தரிக்கும் ராமாயணத்தை ராதா நடத்தினார். அதை "கீமாயணம்" என்று பிறர் வர்ணித்தபோது, "நான் நடத்துவதுதான் உண்மையான ராமாயணம். ராமனை நல்லவனாகச் சித்தரிப்பது தான் கீமாயணம்" என்று கூறுவார்,

ராதா.
நாடகத்தில் ராதாதான் ராமர்! ஒரு கையில் மதுக்கலயம், இன்னொரு கையில் மாமிசம்! நையாண்டி வசனங்கள் ஏராளம்.
தடை
ராதாவின் 6 நாடகங்கள் தடை செய்யப்பட்டு இருந்தன. "ஆந்திரகேசரி" பிரகாசம் முதல்- மந்திரியாக இருந்தபோது "போர் வாள்" என்ற நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை மீறி நாடகத்தை நடத்தியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலையான பிறகு நாடகத்தின் பெயரை "மகாத்மா தொண்டன்",

"மலையாள கணபதி" என்று பெயர் மாற்றி நடித்தார். கோவையில் இவருடைய ராமாயண நாடகத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் "லட்சுமிகாந்தன்" என்ற இன்னொரு நாடகத்தை நடத்தினார்.
அதில் ராமாயண நாடகத்தின் ஒரு காட்சியை தந்திரமாக புகுத்தினார். ராமாயணம் நாடகத்தை கீமாயணமாக நடத்தியதற்காக காமராஜர் ஆட்சி காலத்தில் 16 நாட்கள் ஜெயில் தண்டனை அடைந்தார்.

காமராஜர் கரத்தால் பொன்னாடை
விடுதலையான பின்பு எம்.ஆர்.ராதாவுக்கு மக்கள் கமிட்டி சார்பில் பொன்னாடை போர்த்தும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு காமராஜர் தலைமை தாங்க வேண்டும் என்று எம்.ஆர்.ராதா விரும்பினார். காமராஜர் மீது அவர் அதிக மதிப்பு வைத்திருந்தார். அவர் விருப்பப்படி விழாவுக்கு காமராஜர் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தினார்.

தஞ்சையில் "தூக்கு மேடை" நாடகத்தில் எம்.ஆர்.ராதாவுடன் தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியும் பின்னர் "போர்வாள்" நாடகத்தில்

ஈ.வெ.கி.சம்பத்தும் நடித்து இருக்கிறார்கள். ஈரோட்டில் "விதவையின் கண்ணீர்" நாடகம் நடந்தபோது அந்த நாடகத்தை அண்ணா பார்த்து பாராட்டினார்.

திருச்சியில் "போர்வாள்" என்னும் நாடகம் நடத்தியபோது ராதாவுக்கு "நடிகவேள்" என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரி வழங்கினார். 1962-ல் "கலைமாமணி" பட்டம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினரால் வழங்கப்பட்டது.

சினிமா எம்.ஆர்.ராதா,

முதன் முதலாக 1937-ல், "ராஜசேகரன்" என்ற படத்தில் நடித்தார். இதில், மாடியில் இருந்து, கீழே குதிரை மீது குதிக்கும் காட்சியில் நடித்தபோது, கால் எலும்பு முறிந்துவிட்டது. குணம் அடைந்த பிறகு "பம்பாய் மெயில்" என்ற படத்தில் நடித்தார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, நாடகங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

"பராசக்தி" படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார்,

"ரத்தக்கண்ணீர்" நாடகத்தை படமாகத் தயாரித்தார். இதில் எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்தனர். 1954-ல் வெளியான இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றும், பட அதிபர்கள் யாரும் ராதாவை அணுகவில்லை.

"அவரை சமாளிக்க முடியுமா,

ரத்தக்கண்ணீர் போல அவர் வேறு வேடத்தில் சிறப்பாக நடிக்க முடியுமா?" என்றெல்லாம் யோசித்து, அவரை வைத்து படம் தயாரிக்கத் தயங்கினார்கள். இதுபற்றி எல்லாம் ராதா கவலைப்படாமல், நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.

ஏ.பி.நாகராஜன்

மூன்று ஆண்டுகளுக்குப்பின், ஏ.பி.நாகராஜன், வி.கே.ராமசாமி ஆகியோரை பங்குதாரர்களாகக் கொண்ட லட்சுமி பிக்சர்ஸ், எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து "நல்ல இடத்து சம்பந்தம்" என்ற படத்தைத் தயாரித்தது. இதில் ராதாவுக்கு ஜோடியாக சவுகார் ஜானகி நடித்தார்.
படத்தை கே.சோமு டைரக்ட் செய்தார். படம் மூன்றே வாரங்களில் தயாராகி, 16-2-1958-ல் ரிலீஸ் ஆகியது. குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம், வெற்றிகரமாக ஓடியது. "மாறுபட்ட வேடங்களில் ராதா சிறப்பாக நடிப்பார். குறுகிய காலத்தில் படத்தைத் தயாரிக்க ஒத்துழைப்பு தருவார்" என்ற நம்பிக்கை பட அதிபர்களிடையே ஏற்பட்டது. போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்தனர்.

பாகப்பிரிவினை

1959-ல், சிவாஜிகணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த "பாகப்பிரிவினை" வெளிவந்தது. படம் மகத்தான வெற்றி பெற்றதுடன், எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிவாஜியுடனும், எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் ராதா நடித்தார்.

குறுகிய காலத்தில் 150 படங்களில் நடித்து முடித்தார்.

7 ஆண்டு ஜெயில்

1967 தேர்தலுக்கு முன், எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம், தமிழ்நாட்டையே குலுக்கியது. சிகிச்சைக்குப்பின், இருவரும் குணம் அடைந்தனர். எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. 1974-ல் விடுதலையானார்.

மீண்டும் சினிமா

விடுதலையாகி வெளிவந்ததும், மு.க.முத்துவுடன் "சமையல் காரன்" படத்தில் நடித்தார். தொடர்ந்து "டாக்சி டிரைவர்", "பஞ்சாமிர்தம்", "வண்டிக்காரன் மகன்", "ஆடு பாம்பே" ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

1979 செப்டம்பரில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் ராதா தங்கியிருந்தார். அந்த சமயத்தில் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி, 17-9-1979 காலை, 71-வது வயதில் ராதா காலமானார்.
எம்.ஆர்.ராதா இளமைப்பருவம் முதலே தந்தை பெரியாரின் கொள்கையில் ஆழ்ந்த பற்றும், பிடிப்பும் கொண்டவர். அதனால்தான் என்னவோ தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

குடும்பம்

ராதாவின் முதல் மனைவி பெயர் சரஸ்வதி. பின்னர் அவருடைய தங்கை தனலட்சுமியை மணந்தார். மூத்த மகனான எம்.ஆர்.ஆர்.வாசு, சில படங்களில் நடித்தார். இளம் வயதிலேயே காலமானார்.

அடுத்த மகன் ராதாரவி இப்போது திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்குகிறார். ராதாவுக்கு ரஷியா, ராணி, ரதிகலா என்ற மகள்கள் உள்ளனர்.

ராதாவின் மூன்றாவது மனைவி கீதா. இவருடைய மகள் ராதிகா, சினிமாவிலும், சின்னத்திரையிலும் சாதனைகள் புரிந்து வருகிறார்.
ராதிகாவின் தங்கை நிரோஷாவும் நடிகையாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக