மொத்தப் பக்கக்காட்சிகள்

9/28/2024

கிழவனை கட்டினாலும் கட்டுவேன் ஆனால் உழவனை கட்டமாட்டேன் என்று பெண்கள் சொல்லுகிறார்களே, ஏன் இப்படி?

கிழவன், உழவன் கேள்வியே கவிதை மாதிரி இருக்கே சார்!

இக்காலத்தில் நடப்பவற்றை சொல்ல வேண்டும் என்றால், பட்டப்படிப்பு முடித்துவிட்டு மாதம் 50000 சம்பளம் வாங்குகின்ற ஆண்களே ஒரு தலை ராகமாக தான் இருக்கிறார்கள், இந்நிலையில் உழவனால் வெறும் உடுக்கை தான் வாசிக்க முடிகிறது, சூரிய வம்சம் படத்திலாவது படிச்சா நான் எங்க படிக்காத நீங்க எங்க னு நாக்கை பிடிங்குற மாதிரி கேள்வி கேட்க ஒரு பொண்ணு இருந்துச்சு,நிகழ்காலத்தில் அதற்குக்கூட வக்கில்லை உழவனுக்கு

உழவனுக்கு பெண் கொடுக்க விரும்பாத பெற்றோர்கள் பெரும்பாலும் விவசாய குடும்பமாக தான் இருக்கிறார்கள் என்பது வேதனையின் உச்சம், கிராமத்தில் வளர்ந்த பெண் பிள்ளைகள் நகரத்திற்கு படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ சென்ற உடன் Raw Agent போல முகத்தை மூடுவதும், தெருவில் நடக்கும்போது துப்பட்டாவை தலையில் போடுவதும் தான் கிராமத்து இளைஞிகளின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியின் தொடக்கமாக பார்க்க முடிகிறது, இது இப்படியே நீண்டு Cold Coffee ல ஆரம்பித்து KFC அது இது னு நீண்டு கொண்டே செல்கிறது, இப்படி இருக்கையில், 150 ரூபாய் டைரி மில்க் சாக்லேட்டுடன் 5 ரூபாய் கடலை பர்பி போட்டி போட முடியவில்லை

நகரத்தில் உள்ள பெண்களும் பெற்றோரும், விவசாயத்திற்கும் அதை செய்பவர்களுக்கும் நல்ல மரியாதை தருகின்றனர், அதற்காக தாம்பூலம் தட்டை நீட்ட முடியாது, காரணம் நகரத்தில் வாழ்ந்த மக்களுக்கு கிராமத்தை சுற்றி பார்க்க, பொழுதை போக்க, மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் அவர்கள் வாழ்வியல் முறைகளுக்கு கிராமம் மற்றும் விவசாயம் எக்காலமும் ஒத்து வராத ஒன்று, நகரத்தில் வளர்ந்த ஒரு பெண்ணால் கிராமத்தில் வசித்து விவசாய வேலைகளை செய்வது எளிதல்ல, அவர்கள் விரும்பினால் நலம், இல்லையெனில் நாளடைவில் வெறுப்பு உண்டாகும்

இது ஒரு சுழட்சி முறையாக தான் பார்க்க முடிகிறது, முன்னொரு சமயம் வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் என்பது கேள்விக்குறியாக பல பெண்களுக்கு இருந்துள்ளது, அதன் வினை பயன், இப்போது பத்து பைசா வேணாமுங்க உங்க பிள்ளையை கொடுத்தால் மட்டும் போதும் காலில் விழுந்து கதற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், பெண்களின் எதிர்பார்ப்புகளை கூட தாங்கி கொள்ளலாம் போல ஆனால் அவர்களின் பெற்றோர் தொடுக்கும் கேள்வி அம்புகள் தான் காதில் ரத்தம் சொட்ட வெய்க்கின்றது, உழவனுக்கு பெண் கிடைப்பதில்லை என்பது உண்மை தான் இதற்கு முதன்மை காரணம் செய்யும் வேலை இரண்டாவது பொருளாதாரம் மூன்றாவது சாதி கட்டுப்பாடுகள், கிராமம் என்றாலே சாதிப்பிரிவினைகள் நகரத்தை விட சற்று மேலோங்கியே இருக்கும், வேற்று சாதியில் அல்லது மதத்தில் பெண் எடுக்க உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தயாராக இருந்தாலும், ஊர் மக்கள் புறம் பேசுமே என்று அஞ்சி வாழ்க்கை எனும் பயணத்தில் கைவிரல் பிடித்து நடக்க துணை இல்லாமல், கைத்தடி பிடிக்கும் வரை நீண்டு விடுகிறது

உழவனை வேண்டாமென கிழவனை எந்த பெண்ணும் ஏற்று கொண்டதாய் நான் இதுவரை கண்டதில்லை, 27 வயதுக்கு மேல் இருந்தாலே பெண்கள் மற்றும் அவரின் குடும்பத்தார் சற்று யோசிக்க தொடங்குகின்றனர், எல்லா பெண்களும் மற்றும் பெற்றோர்களும் ஒரே மாதிரியான சிந்தனை உடையவர்கள் என்று சொல்ல முடியாது, பணத்தை விட குணத்திற்கு மதிப்பளிக்கும் பெண்களும் பெற்றோரும் உண்டு, அப்படி இல்லையெனில் நானும் செண்பகமே செண்பகமே னு பாட்டு பாடி பால் கறந்திட்டு தான் இருந்திருப்பேன்

ஆணோ, பெண்ணோ பார்த்த உடனே நல்ல இருக்கீங்களா என்று கேட்கலாம் தவறில்லை அதோடு நிற்காமல் அடுத்த கியர் போட்டு என்ன சம்பளம் எப்போது திருமணம், திருமணம் முடிந்துவிட்டது என்று பதில் வந்தவுடன், குழந்தை எப்போது எந்த பள்ளி என்ன மதிப்பெண் இணையவழி கல்வி அவ்வளவு நல்லதல்ல என்று டாப் கியருக்கு போக வேண்டாம், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதை கிளறி வெந்த புண்ணில் அமிலம் ஊற்றி மயில் இறகால் வருடி விட வேண்டாம்

டைரி மில்க்கை விட வேர்க்கடலை மிட்டாய் உடலுக்கு நல்லது அடுத்த முறை கடைக்கு சென்றால் வாங்கி சாப்பிடுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக