நாகேஷ் -நகைச்சுவையில்விசுவரூபம் எடுத்தவர்.
வாலி- கவிதையில் கரை கண்டவர்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் கிளப் ஹவுஸில் அவ்விருவரையும் காப்பாற்றியவர் ஸ்ரீகாந்த்.
வாலியும் நாகேஷும் இணை பிரியா நண்பர்கள்.
ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்.
சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தை இயக்கும்போது, நாகேஷை நாயகனாக்கினார். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.
இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ... ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.
எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.
அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி... ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி... முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக