மொத்தப் பக்கக்காட்சிகள்

4/26/2012

4. திருவெண்காடு புதன் கோவில்

Thiruvenkadu Boothan Temple.
 

கல்விக்கு அதிபதியான புதன் அமைந்துள்ள திருக்கோவிலே திருவெண்காடு.  இக்கோவிலின் மூலவராக சுவேதாரண்யேஸ்வரரும் - பிரம்ம வித்யாம்பிகையும் வீற்றிருக்க புதபகவான் மக்களுக்கு காட்சியளிக்கின்றார்.


சலந்தரன் என்பவனுக்கு ஒரு மகன், மருத்துவன். அவன் இறைவனை நோக்கி தவம் செய்து சூலத்தை பெற்றான். அந்த சூலத்தால் நல்லது செய்யாமல் தேவர்களுக்கு தீங்கு விளைவித்தான் மருத்துவன். இதனால் கோபமுற்ற சிவபெருமான், நந்தியை அனுப்பி அவனை அழிக்கச் செய்தார். ஆனால் மருத்துவனோ நந்தியை சூலத்தால் தாக்க, நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் ஏற்பட்டது. பின்னர் சிவபெருமானே அகோர மூர்த்தியாய் தோன்றி மருத்துவனை அழித்தார் என்பது இக்கோவில் வரலாறு.


இங்கு மூர்த்திகள் மூன்று, தீர்த்தங்கள் மூன்று, தலவிருட்சங்கள் மூன்று. சிவன், நடராசர், வீரபத்திரர் ஆகிய மூன்று மூர்த்திகளும், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்களும், வடவால், கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்களும் உள்ளன. 

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற தலம் இது. காசிக்கு நிகரான திருத்தலம். காவிரி வடகரை கோவில்களில் பதினொன்றாவது கோவில் இது. மூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பிள்ளைப்பேறு நல்கும் தலம். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல், இங்கு வடவால் விருட்சத்திற்கு கீழ் ருத்ர பாதம் உள்ளது. 


திருஞானசம்பந்தர் இக்கோவிலுக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தெரிந்ததாம், அவர் அம்மா என்றழைக்க, அம்பிகை அவரை இடுப்பில் சுமந்து கோவிலின் உள்ளே சென்றதாக வரலாறு உண்டு. இன்றும் இக்கோவிலில் சம்பந்தரை சுமந்திருக்கும் அம்பாளை பிரகாரத்தில் காணலாம். 

நவக்கிரகங்களில் ஒருவரான புதன், கல்விக்கு அதிபதி. இவரை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு கிடைக்கும், பீடை போகும், கவி பாடும் ஆற்றல் அதிகரிக்கும். புதனை வழிபடுவோம் என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்.

புதனுக்கு உகந்தவை:
ராசி : மிதுனம், கன்னி
அதி தேவதை : விஷ்ணு
நிறம் : வெளிர்பச்சை
தானியம் : பச்சைப்பயிறு
உலோகம் : பித்தளை
மலர் : வெண்காந்தள்
ரத்தினம் : மரகதம்
சமித்து:நாயுருவி


காயத்ரி மந்திரம்:
கஜ த்வஜாய வித்மஹே 
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்.

எப்படி செல்வது?
இத்திருக்கோவில் சீர்காழியில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.கும்பகோணம், சீர்காழி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம். ம்யிலாடுதுறையில் இருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகள் இக்கோவில் வழியாகச் செல்லும்.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - கும்பகோணம் 18 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 96 கி.மீ தொலைவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக