மொத்தப் பக்கக்காட்சிகள்

11/05/2011

குற்றாலம் அருவி



குற்றாலம் அருவி தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது.

குற்றாலம் தென்காசியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே (86 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.


தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.
7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது.

படகு குழாம் : குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் தமிழ்நாடு சுற்றுலாதுறை சார்பில் வெண்ணமடை என்ற குளத்தில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.


மீன் காட்சியகம் : குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் ரூ.9.35 லட்சம் செலவில் வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருட்காட்சியகத்தில்வெல்வெட் துணி மீன்கள், நியான் விளக்கு மீன்கள், தேவதை மீன், வெண் விலாங்கு மீன், தலைகீழ் கெழுத்தி மீன்கள், தங்க தகடு மீன்கள் என 25க்கும் மேற்பட்ட மீ்ன்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சித்திர சபை : தமிழகத்தில் சிவபெருமான் நடனமாடிய 5 சபைகள் உள்ளன. அவற்றில் ஒன்று குற்றாலம் சித்தர சபையாகும். இந்த சபையில் மூலிகைகளின் சாறு கொண்டு பலநூறு ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தொல்பொருள் ஆய்வகம் : பேரரூவிக்கும், திருக்குற்றால நாதர் திருதலத்திற்கும் செல்லும் வழியில் தொல்பொருள் ஆய்வகம் உள்ளது. இங்கு பல்வேறு விதமான பழங்கால சுவடிகள், சிலைகள், மண்பானைகள், தாழி, ஆயுதங்கள், பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவில்கள் : குற்றாலத்திற்கு உல்லாசப் பயணம் வரும் பயணிகள் தரிசனம் செய்ய பிரசித்த பெற்ற குற்றால நாதர் கோவில், இலஞ்சிகுமாரர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில், பண்பொழி திருமலை கோவில், புளியரை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவில், செங்கோட்டை ஆஞ்சநேயர் கோவில், ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் கோவில், அச்சன்கோவில், மற்றும் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

விடுதிகள்: அரசு விடுதிகள் 6 (182 அறைகள்) மற்றும் தனியார் விடுதிகள் 120க்கும் மேல் உள்ளது. இது போக குடும்பத்துடன் தங்குவதற்கு வீடுகள், தின வாடகைக்கு இங்கு கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக