மொத்தப் பக்கக்காட்சிகள்

2/19/2013

திருவிழாக்கள் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் மகிழ்ச்சியை கொடுக்கின்றதா அல்லது பத்ற்றத்தை கொடுக்கின்றதா ?




திருவிழாக்கள் என்பது உறவுகளை ஒரே இடத்தில் கூடுவதற்காகத் தான் இருந்து வருகின்றது. அது ஊர் சம்மந்தப்பட்ட விழாவாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட குடும்ப விழாக்களாக இருந்தாலும் தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல மொத்த சமூகத்திலும் இப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது விழாக்களின் முகம் முற்றிலும் மாறிவிட்டது. 

ஊரில் திருவிழா என்றால் அது அன்று உற்சாகம் பெருகெடுத்து ஓடும் நாள்.

ஆன்மீகம் சம்மந்தப்பட்டதாக மட்டுமல்ல அத்தனை உறவுகளையும் இதன் காரணமாக ஒன்று சேர்க்க உதவியது. தமிழர்களின் கலை, பண்பாட்டு, கலாச்சாரத்தையும் வளர்க்க உதவியது. தெருக்கூத்து, நாடகம் என்று தொடங்கி அடித்தட்டு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க உதவியது.

இன்றைய  சூழலில் அமைதியை உருவாக்க வேண்டிய இடங்களில் அவரவர்களின் சுயநலங்கள் கலந்து போக இன்றைய சூழ்நிலையில் மொத்தமாக மாறி வன்முறைகளை வளர்க்க உதவும் ஒரு களமாக மாறியுள்ளது

மதம் என்ற சொல்லில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத காரணத்தால் அதுவே பிரிந்து பிரிந்து இன்று ஜாதியாக மாறியுள்ளது. அதுவும் இன்றும் பிரிந்து கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் யாரோ ஒருவர் இதை தெளிவாக புரிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு மெதுமெதுவாக இறுக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாமலே அவர்களை பின்பற்றி சென்று கொண்டேயிருக்கிறார்கள். 
ஒவ்வொரு  நாளும் கொண்டாடப்பட வேண்டிய நாளாக இருக்க வேண்டியதே என்பதை உணர்ந்து கொள்ள விருப்பமில்லாமல் நாம் குறிப்பிட்ட நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த மாதம் மகளுக்கு பிறந்த நாள், அடுத்த வாரம் மனைவிக்கு பிறந்த நாள் என்று ஒவ்வொரு நாளுக்கும் தவமாய் தவமிருக்கின்றோம். குறிப்பிட்ட நாளில் அதீத அன்பும் தொடர்ந்து வரும் நாட்களில் புரிதல் இல்லாத வாழ்க்கையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் .
நமது நாகரீகம் தான் நல்ல நாகரிகமா ? 
பிறந்த நாள், இறந்த நாள், நினைவு நாள் என்று போய்க் கொண்டிருந்த இந்த கொண்டாட்டங்கள் இன்று அப்பா தினம், அம்மா தினம் என்று மாறி ஒவ்வொன்றுக்கும் ப்ளக்ஸ் போர்டு கலாச்சாரமாக மாறியுள்ளது. இன்று எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேவை என்பதாக கருதிக் கொண்டு நாம் நம்மை அவசரமாக மாற்றிக் கொள்ள ரொம்பவே அவசரப்படுகின்றோம். அடுத்த சந்துததிக்கு அரசியல்வாதிகள் வருவதைக்கூட அலங்காரமாக காட்டிக் கொள்ள விரும்புவதால் தினந்தோறும் கொண்டாட்டங்களின் காலமாக உருமாறியுள்ளது. நாமும் நம் அளவுக்கு அவர்களுடன் போட்டி போடவே விரும்புகின்றோம். 
ஆனால் தங்களுடைய பிறந்த நாளை அரசியல்வாதிகள் வசூலிக்கும் நாளாக மாற்றவிடுவதில் வல்லவர்கள். ஆனால் எந்த அதிகாரி வர்க்கமும் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அதற்குப் பதிலாக குழந்தைகளின் பிறந்த நாள், புதுமனை புகுவிழா என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கு ஒரு காரணத்தைத் தேடி கொண்டாடும் மனநிலைக்கு மாறியள்ளார்கள். 
நகர்புற வாழ்க்கையில் தான் இந்த கொண்டாட்டங்கள் பெரிதாக எண்ணப்படுகின்றதோ என்று நினைத்துக் கொளவ்துண்டு. ஒருவரின் பிறந்த நாள் முக்கியம். அதைவிட அவரின் வயதும் அதற்கேற்ற எண்ண வளர்ச்சியம் அதைவிட முக்கியம். ஆனால் தற்போது இவை முக்கியமல்ல. இந்த நாளை எப்படி எங்கே கொண்டாடுவது? என்பது தான் மிக முக்கியமாக இருக்கிறது. 

கவலைக்கு ஒரு சரக்கு. உற்சாகத்திற்கு மற்றொரு சரக்கு.
 
மொத்தத்தில் நுகர்வு கலாச்சாரத்தில் மனிதனே ஒரு கடைச்சரக்கு தானே. 
குழந்தைகளின் பிறந்த நாளைப் போல வளர்ந்தவர்கள் கொண்டாடப்பட வேண்டிய நாள் திருமண நாள். காரணம் இரு வேறு துருவமாக எங்கங்கோ பிறந்த வளர்ந்து, எண்ணங்களாலும் செயல்களாலும் மாற்றுக் கருத்துக் கொண்டு நாம் இனி இணைந்தே வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சேரும் பந்தம் இந்த திருமணம். சமகாலத்தில் எந்த அளவுக்கு இதற்கு மதிப்பு இருக்கிறது என்பதை விட இந்த உறவுக்கு நாம் எப்படி மதிப்பளிக்கின்றோம் என்பதில் தான் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருக்கின்றோம்.

நம்மால் சிலவற்றை மாற்றிவிட முடியாது என்பது எத்தனை உண்மையோ நாம் பலவிசயங்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்பதும் உண்மைதானே. 
நுகர்வு கலாச்சாரத்தை நமது கலாச்சாரமாக நம்மை மாற்றிக் கொள்ளும் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்முடைய அடிப்படையான கலாச்சாரம் மெதுமெதுவாக செல்லறித்துக் கொண்டிருக்கிறது. மகன் ஒரு பக்கம். மகள் வேறொரு பக்கம். விருப்பத்தை நிறைவேற்றாத கணவன்,. வரவேற்க விரும்பாத மனைவி. 
நான்கு முனை சுவர்களைப் போல யாருக்கு யார் உறவு? என்பதாக மாறியுள்ளது. 
அப்பா,கணவன் என்ற பாத்திரத்திற்குள் தேங்கிய தண்ணீராக கண்ணீருடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குடித்தே அழிப்பவனை அன்றாடம் சமாளித்து ஜெயித்தாலே இன்றைய சூழ்நிலையில் பல பெண்களுக்கு தினந்தோறும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. 
நினைத்து அடைந்தால் சமூக அங்கீகாரம். இல்லாவிட்டால் பிழைக்கத் தெரியாதவன் என்கிற மாயவலைக்குள் சிக்கி நமக்கு என்ன தேவை என்பது கூட தெரியாத அளவுக்கு மனரீதியான உளைச்சலுடன் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
பரஸ்பரம் வாழ்த்துகளை கூட நம்மால் பரிமாறிக் கொள்ள முடியவில்லையோ என்று நினைத்துக் கொள்வதுண்டு. நீண்ட நேரம் எவருடனும் பேச முடியவில்லை. அவசரமாய் ஓடிக் கொண்டேயிருக்கின்றோம். பல சமயம் பேசுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடுகின்றது. பேசினாலும் அர்த்தம் இல்லாதவைகள் தான் உரையாடலில் வந்து விழுகின்றது. 
தெளிந்த நீராக வெளியே தெரிந்தாலும் கசடுகளை மறைத்துக் கொண்டே வாழ பழகிக் கொண்டிருக்கின்றோம்.

ரஜனிகாந்த் பற்றி பி.வாசு



பெரும் பிரச்சினைக்கு உள்ளான 'உழைப்பாளி' படத்தை இயக்கியவர் பி.வாசு. அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, அவர் கூறியதாவது:-

'விஜயா-வாஹினி பட நிறுவனம் 20 வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் படமெடுக்க முன்வந்தபோது எடுத்த முதல் படம்தான் 'உழைப்பாளி.' படம் எடுப்பது தொடர்பாக அவர்கள் ரஜினி சாரிடம் பேசியபோது, அவர்தான் `பி.வாசு டைரக்ட் செய்யட்டும்' என்று சொல்லியிருக்கிறார். படத்தயாரிப்பு வேலைகள் மளமளவென தொடர்ந்தன.

இந்த சமயத்தில்தான் நடிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ரஜினி படத்தை வாங்கக் கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.

அப்போது 'உழைப்பாளி' படத்துக்கு பூஜை போடப்போகிற நேரம். அடுத்து என்னாகுமோ என்ற அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.

ரஜினி சாரிடம் ஒரு வித்தியாசமான குணாதிசயம் உண்டு. தனது கருத்தில் மற்றவர்களுக்கு மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தால், தான் செய்தது சரிதானா என்பதை மறுபரிசீலனை செய்வார். விநியோகஸ்தர்கள் முடிவு அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் என்னிடம் போனில் பேசினார். 'நான் அந்தக் கூட்டத்தில் பேசியது சரியா, தப்பா? அவசரப்பட்டுட்டேனா?' என்றெல்லாம் கேட்டார்.

நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று ஏற்கனவே என்னிடம் படப்பிடிப்பு தளத்தில் சொல்லியிருக்கிறார். 'வாசு! ஒரு நாள் காலையில் தொடங்கி ராத்திரி நாம் படுக்கைக்கு போகிற வரைக்கும் நம்மோட செயல்களால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்குதான்னு யோசிச்சுப் பார்க்கணும். நான் அப்படித்தான் யோசித்துப் பார்ப்பேன். யாரையாவது என் வார்த்தைகளாலோ, செயல்களாலோ காயப்படுத்தியிருப்பதாகத் தோன்றினால் அப்போதே போன் போட்டு மன்னிப்பு கேட்டுவேன். இதனால் மறுநாள் எந்த உறுத்தலும் இல்லாமல் நம்ம வேலைகளை தொடங்க முடியும்' என்று சொன்னார்.

அவரது இந்த உயர்ந்த சிந்தனை என்னுள் ஆழப்பதிந்தது. அன்று முதல் இன்று வரையிலும் நானும் அவரது இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன்.

'உழைப்பாளி' படம் இப்படி பிரச்சினைகளுடன் தொடங்கியது.

படம் வளரும் போதே பிரச்சினைகள் மறையத் தொடங்கின. சினிமா என்பது ஒரு குடும்பம். அண்ணன், தம்பிகளைக்கொண்ட கூட்டுக்குடும்பம். அதனால் பிரச்சினைகள் சினிமா என்ற எங்கள் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்து வைக்கப்பட்டன.

மொத்தப் படப்பிடிப்பையும் 58 நாட்களில் முடித்தேன்.

படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்தபோது ரஜினியிடம் `விழா எடுக்கலாமே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'விழா வேண்டாம்' என்று கூறிவிட்டார்.

பல பிரச்சினைகளை கடந்து படம் வெளிவந்து வெற்றி பெற்றதை, `கொண்டாட்டம்' என்ற பெயரில் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ரஜினி நினைத்ததே இதற்குக் காரணம்.

எனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளருக்கு, தேவையில்லாத எந்த செலவும் வைக்கக்கூடாது என்பதை நான் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். என்னைப்பற்றி தெரிந்த தயாரிப்பாளர்கள் எவரும், நான் இயக்கும் படங்களின் செட்டுக்குக்கூட வருவதில்லை.

நான் அவர்களிடம், 'உங்க கேஷியரையும், அக்கவுண்டண்டையும் மட்டும் அனுப்புங்க போதும். மற்ற எந்த விஷயமானாலும் எனது படங்களின் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை பார்த்துக்கொள்வார் என்று சொல்லி விடுவேன்.

இந்தப் படத்திலும் அதுதான் தொடர்ந்தது. படப்பிடிப்புக்காக மங்களூரில் இருந்து சிக்மகளூர் போகவேண்டும். பயண நேரம் எவ்வளவு என்று கேட்டதற்கு, 'காரில் போனால் 4 மணி நேரத்தில் போய்விடலாம்' என்றார்கள்.

ரஜினி மாலை 4 மணிக்கு காரில் கிளம்பிப் போனார். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கடைசியாக புறப்படும்போது மாலை 6 1/2 மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணமாகிவிட்டது.

நான் சிக்மகளூரை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. அங்கு நாங்கள் தங்குவதாக இருந்த ஸ்டார் ஓட்டலில் போய் இறங்கி ரூம் கேட்டேன். `ரூம் இல்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதுதான் எனது மானேஜர்களில் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்து ரூம் `புக்' பண்ணாததும், எங்கள் வருகையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக அவர் தனது அறையில் தூங்கிவிட்டதும் தெரியவந்தது.

நான் ரிசப்ஷனில் இருந்தவரிடம், 'நான் டைரக்டர் பி.வாசு. படப்பிடிப்புக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஓட்டலில் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது ரூம் கொடுத்தீர்களானால், காலையில் எங்கள் மானேஜர் பணத்தை கொடுத்து ஒரு வாரத்துக்கு புக் செய்து விடுவார்' என்றேன்.

அவர்கள் கேட்பதாக இல்லை. 'எங்கள் ஓட்டல் நிர்வாகத்தின் விதிப்படி, `அட்வான்ஸ்' செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் ரூம் கொடுப்பதாக இல்லை' என்றார்கள், விடாப்பிடியாக.

அப்போதுதான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி. நாம் 2 மணிக்கு வந்திருக்கிறோம். நமக்கு முந்தி புறப்பட்ட ரஜினி சார் எப்படியும் ராத்திரி 12 மணிக்குள் இங்கே வந்திருப்பார். அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதா?' என்று மனசுக்குள் ஒரு பரபரப்பு கேள்வி எழுந்தது.

உடனே நான் பதட்டமாகி, 'எனக்கு முன்னால் ரஜினி சார் வந்திருப்பாரே. அவருக்காவது ரூம் கொடுத்தீர்களா, இல்லையா?' என்று கேட்டேன்.

அவர்களோ ரொம்ப கூலாக, 'ராத்திரி 11 1/2 மணிக்கு வந்தார். அவருக்கும் ரூம் கொடுக்கவில்லை' என்றார்கள்.

'அடப்பாவிகளா!' என்று அதிர்ச்சி தாங்காமல் அலறியவன், 'அப்படீன்னா ரஜினி சார் எங்கேதான் போயிருப்பார்?' என்று படபடக்கும் இதயத்துடன் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தேன்.

ஓட்டலையொட்டி கொஞ்ச தூரத்தில் ரஜினி வந்த கார் நின்றது. ரஜினிக்கு உதவியாளராக வந்த பையன் வெளியில் நிற்க, உள்ளே காரின் பின்சீட்டில் வெள்ளைத் துணியால் உடம்பை மூடிப்படுத்திருந்தார் ரஜினி.

இதைப் பார்த்ததும் என் கோபம் அதிகமாகிவிட்டது. 'என்னதான் ரூல்ஸ் என்றாலும் வருகிற ஆள் யாரென்று தெரியவேண்டாம்? ஒரு பிரபல நடிகரை, மக்கள் அபிமானம் பெற்றவரை, சூப்பர் ஸ்டாரை இப்படி காருக்குள் படுக்க வைத்திருக்கிறீர்களே. இப்போதாவது ரூம் கொடுங்கள். நான் டைரக்டர் பி.வாசு. ஒரு டைரக்டருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என்று சூடாக குமுறல் வார்த்தைகளை கொட்டியபோது, என் முதுகில் தட்டியது ஒரு கை. திரும்பிப்பார்த்தால் புன்னகை முகத்துடன் நிற்கிறார் ரஜினி!

அப்போது ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? 'வாசு! நாம யாருன்னு அவங்கதான் நமக்கு சொல்லணும். ரூம் கிடைக்காததுக்கு காரணம் நம்மவங்க செய்த தப்புதானே! முன்கூட்டியே நாம் அனுப்பியிருந்தவங்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணாததால், நாம் இவங்களை கோபிச்சுக்கிறதில் நியாயம் இல்லை. நம்ம மேலே தப்பு வெச்சிக்கிட்டு நாம அவர்களை குறை சொல்லக்கூடாது' என்றார்.

இப்படியொரு சம்பவம் வேறு நடிகருக்கு ஏற்பட்டிருந்தால், உடனே கோபித்துக்கொண்டு போயிருப்பார். ஆனால், கவனக்குறைவால் ஏற்பட்ட தடங்கல்களை புரிந்து கொண்டு, காருக்குள் படுத்துக்கொண்டது மட்டுமல்ல, நிதானமாய் அந்தப் பிரச்சினையை அணுகினார்.

மறுநாள் படப்பிடிப்பு எந்த சிரமமுமின்றி நடந்தது.

இதற்குப்பிறகு இன்று வரை நான் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. 'சந்திரமுகி' படத்தின் பெரிய வெற்றிக்குப்பிறகு வெளியில் என்னைப் பார்த்த ஒருவர், 'நீங்க டைரக்டர் பி.வாசுதானே' என்று கேட்டபோதுகூட, எனக்கு ரஜினி சார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

இப்படி தன்னுடன் பழகுபவர்களுக்கும் ஒரு பக்குவ நிலையை ரஜினி சார் தந்துவிடுவார். சந்திரமுகி படம் 700 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போதும், இந்த வெற்றிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் அதே எளிமையும் இனிமையுமான ரஜினியைத்தான் இப்போதும் பார்க்கிறேன்.'

இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.

2/13/2013

மூணார் - பசுமைச்சொர்க்கத்தின் எழில்!

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’ கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.
மூணார் புகைப்படங்கள் - அமைதியான எக்கோ பாயிண்ட் 

மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.

கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.


ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணார் சுற்றுலாப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

புத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி

காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணார் பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது.


எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர்.


அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணார் பிரதேசமானது தனது பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது.

ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன.

கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்!

ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.


வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், தேனிலவுப்பயணம் நாடும் தம்பதிகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.

மலையேறிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம்


மூணார் மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது.


தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம்.


இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய – ஸ்விஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும்.

மூணார் பகுதியில் ரம்மியமான இயற்கைச்சூழலின் பின்னணியில் அமைந்துள்ள நீர்விழ்ச்சிகளும் காணப்படுகின்றன. பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிற சின்னக்கனல் நீர்வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகளாகும்.


ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய ஸ்தலமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் தேயிலைத்தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணி போன்ற இடங்களும் மூணார் பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.


மூணார் மலைப்பகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடன் எந்த நாளிலும் விஜயம் செய்ய ஏற்றவாறு காணப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மிக எளிதாக இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.


எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணார் மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Thanks to One India.com

2/12/2013

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு

"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "சதிலீலாவதி". அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் "பணம்" என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். "சிங்காரி" என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
 
800 படங்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

டூப் மாஸ்டர்

குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

நாடகக்குழு

சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.

தி.மு.க. மாநாட்டில் 

1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 25-9-1994 அன்று சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

தூக்கத்திலேயே மரணம்

தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27-9-1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார். 
அதிகாலையில் (28-ந்தேதி) 6 மணி அளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 77.

கருணாநிதி இரங்கல்

தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று தங்கவேலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவிக்கப்பட்டது. தங்கவேலு மறைவையொட்டி தி.மு.கழக தலைவர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக கலைவாணர் மறைந்த பிறகு அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தராக, கழகத்தின் மீதும், கழக முன்னணியினர் மீதும் எந்த நிலையிலும் நீங்காத பற்றுடையவராகவும் திகழ்ந்த தங்கவேலு அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனேன்.

ஜுலை 29, 30, 31-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்களும் தங்கியிருந்து, மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும் அந்த உரையில் இருந்த உறுதியையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் என்னுடன் கலந்து கொண்டு உணர்ச்சி மேலிட அவர் பேசியதையும் எப்படி மறக்க முடியும். 

அவரது இழப்பால் கலையுலகம் மட்டுமல்ல. கழகமும் பெருந்துயருக்கு உள்ளாகியிருக்கிறது. நானோ மனம் மிகவும் நொந்து போயிருக்கிறேன். மறைந்த தங்கவேல் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கும், குறிப்பாக அவரது துணைவியார் சரோஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.

குடும்பம்

தங்கவேலுவின் முதல் மனைவி பெயர் ராஜாமணி அம்மாள். அவருக்கு 2 மகள்கள். 2-வது மனைவி நடிகை எம்.சரோஜா. அவருக்கு ஒரே மகள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது

Thanks to Malaimalar.com

டி.எஸ்.பாலையா

டி.எஸ்.பாலையா

வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த டி. எஸ். பாலையாவுக்கு எம். ஜி. ஆரின் முதல் திரைப்படமான ‘சதிலீலாவதி’ தான் முதல் படம். 1934 ல் வெளிவந்த இந்தப் படத்தில் வில்லனாக பாலையா அறிமுகமானார். அப்போது பாலையாவுக்கு 20 வயது.

1937 ஆம் ஆண்டு எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில், தளபதியாக (வில்லன்) டி. எஸ். பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. இதில் பாகவதரும், பாலையாவும் கத்திச் சண்டை போடும் கட்சி உண்டு.

உலகப்போரை பின்னணியாக வைத்து மொடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்து ‘சித்ரா’ படத்தில் டி. எஸ். பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி கே. எல். வி. வசந்தா, பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956 ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கெளபோய் வேடம். அவருக்கு ஜோடி பத்மினி!

அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார்.










எம். ஜீ. ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ராஜகுமாரி’ இப்படத்தில் வில்லனாக பாலையா நடித்தார். இப்படத்தில் எம். ஜீ. ஆரும், பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிகப் பிரபலம், தொடர்ந்து எம். ஜி. ஆர். படங்களிலும் சிவாஜிகணேசன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.
இதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டு. இப்படத்தில் ஒரு திகில் கதையை நாகேஷ் கூற அப்போது பாலையா காட்டும் முகபாவம் இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று.

‘திருவிளையாடல்’ படத்தில் வடநாட்டு பாகவதராக நடித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்து வானாக நடித்தார். பாகவதர், சின்னப்பா, எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்க ளுடன் இணைந்து நடித்த பாலையா 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா - பத்மினி சகோதரிகள் முதன் முதலாக ‘பிரசன்னா’ என்ற மலையாள படத்தில் நடித்தனர்.












பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா, டி. எஸ். பாலையாவின் குடும்ப மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள் முதல் மனைவி பெயர் பத்மாவதி, இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள், 2வது மனைவி பெயர் லீலா (இவர் டி. எஸ். பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்) 4 மகள்கள், 2 மகன்கள் 3வது மனைவி பெயர் நவநீதம் இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்கா இவருக்கு மனோகரி என்ற மகள்.

சென்னை தி நகரில் வசித்து வந்த டி. எஸ். பாலையாவுக்கு 61 வயது நிரம்பிய போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 21.12.1972 அன்று காலமானார்.

பாலையாவுக்குப் பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.