மொத்தப் பக்கக்காட்சிகள்

2/19/2013

ரஜனிகாந்த் பற்றி பி.வாசு



பெரும் பிரச்சினைக்கு உள்ளான 'உழைப்பாளி' படத்தை இயக்கியவர் பி.வாசு. அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து, அவர் கூறியதாவது:-

'விஜயா-வாஹினி பட நிறுவனம் 20 வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் படமெடுக்க முன்வந்தபோது எடுத்த முதல் படம்தான் 'உழைப்பாளி.' படம் எடுப்பது தொடர்பாக அவர்கள் ரஜினி சாரிடம் பேசியபோது, அவர்தான் `பி.வாசு டைரக்ட் செய்யட்டும்' என்று சொல்லியிருக்கிறார். படத்தயாரிப்பு வேலைகள் மளமளவென தொடர்ந்தன.

இந்த சமயத்தில்தான் நடிகர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ரஜினி படத்தை வாங்கக் கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.

அப்போது 'உழைப்பாளி' படத்துக்கு பூஜை போடப்போகிற நேரம். அடுத்து என்னாகுமோ என்ற அசாதாரணமான சூழ்நிலை நிலவியது.

ரஜினி சாரிடம் ஒரு வித்தியாசமான குணாதிசயம் உண்டு. தனது கருத்தில் மற்றவர்களுக்கு மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தால், தான் செய்தது சரிதானா என்பதை மறுபரிசீலனை செய்வார். விநியோகஸ்தர்கள் முடிவு அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் என்னிடம் போனில் பேசினார். 'நான் அந்தக் கூட்டத்தில் பேசியது சரியா, தப்பா? அவசரப்பட்டுட்டேனா?' என்றெல்லாம் கேட்டார்.

நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தி விடக்கூடாது என்று ஏற்கனவே என்னிடம் படப்பிடிப்பு தளத்தில் சொல்லியிருக்கிறார். 'வாசு! ஒரு நாள் காலையில் தொடங்கி ராத்திரி நாம் படுக்கைக்கு போகிற வரைக்கும் நம்மோட செயல்களால், யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருக்குதான்னு யோசிச்சுப் பார்க்கணும். நான் அப்படித்தான் யோசித்துப் பார்ப்பேன். யாரையாவது என் வார்த்தைகளாலோ, செயல்களாலோ காயப்படுத்தியிருப்பதாகத் தோன்றினால் அப்போதே போன் போட்டு மன்னிப்பு கேட்டுவேன். இதனால் மறுநாள் எந்த உறுத்தலும் இல்லாமல் நம்ம வேலைகளை தொடங்க முடியும்' என்று சொன்னார்.

அவரது இந்த உயர்ந்த சிந்தனை என்னுள் ஆழப்பதிந்தது. அன்று முதல் இன்று வரையிலும் நானும் அவரது இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன்.

'உழைப்பாளி' படம் இப்படி பிரச்சினைகளுடன் தொடங்கியது.

படம் வளரும் போதே பிரச்சினைகள் மறையத் தொடங்கின. சினிமா என்பது ஒரு குடும்பம். அண்ணன், தம்பிகளைக்கொண்ட கூட்டுக்குடும்பம். அதனால் பிரச்சினைகள் சினிமா என்ற எங்கள் வீட்டுக்குள்ளேயே பேசி தீர்த்து வைக்கப்பட்டன.

மொத்தப் படப்பிடிப்பையும் 58 நாட்களில் முடித்தேன்.

படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்தபோது ரஜினியிடம் `விழா எடுக்கலாமே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'விழா வேண்டாம்' என்று கூறிவிட்டார்.

பல பிரச்சினைகளை கடந்து படம் வெளிவந்து வெற்றி பெற்றதை, `கொண்டாட்டம்' என்ற பெயரில் பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ரஜினி நினைத்ததே இதற்குக் காரணம்.

எனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளருக்கு, தேவையில்லாத எந்த செலவும் வைக்கக்கூடாது என்பதை நான் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். என்னைப்பற்றி தெரிந்த தயாரிப்பாளர்கள் எவரும், நான் இயக்கும் படங்களின் செட்டுக்குக்கூட வருவதில்லை.

நான் அவர்களிடம், 'உங்க கேஷியரையும், அக்கவுண்டண்டையும் மட்டும் அனுப்புங்க போதும். மற்ற எந்த விஷயமானாலும் எனது படங்களின் தயாரிப்பு நிர்வாகி ராமதுரை பார்த்துக்கொள்வார் என்று சொல்லி விடுவேன்.

இந்தப் படத்திலும் அதுதான் தொடர்ந்தது. படப்பிடிப்புக்காக மங்களூரில் இருந்து சிக்மகளூர் போகவேண்டும். பயண நேரம் எவ்வளவு என்று கேட்டதற்கு, 'காரில் போனால் 4 மணி நேரத்தில் போய்விடலாம்' என்றார்கள்.

ரஜினி மாலை 4 மணிக்கு காரில் கிளம்பிப் போனார். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கடைசியாக புறப்படும்போது மாலை 6 1/2 மணி ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 7 மணி நேரம் பயணமாகிவிட்டது.

நான் சிக்மகளூரை அடைந்தபோது நள்ளிரவு 2 மணி. அங்கு நாங்கள் தங்குவதாக இருந்த ஸ்டார் ஓட்டலில் போய் இறங்கி ரூம் கேட்டேன். `ரூம் இல்லை' என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போதுதான் எனது மானேஜர்களில் ஒருவர் அட்வான்ஸ் கொடுத்து ரூம் `புக்' பண்ணாததும், எங்கள் வருகையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக அவர் தனது அறையில் தூங்கிவிட்டதும் தெரியவந்தது.

நான் ரிசப்ஷனில் இருந்தவரிடம், 'நான் டைரக்டர் பி.வாசு. படப்பிடிப்புக்காக வந்திருக்கிறோம். உங்கள் ஓட்டலில் ஒரு வாரம் தங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இப்போது ரூம் கொடுத்தீர்களானால், காலையில் எங்கள் மானேஜர் பணத்தை கொடுத்து ஒரு வாரத்துக்கு புக் செய்து விடுவார்' என்றேன்.

அவர்கள் கேட்பதாக இல்லை. 'எங்கள் ஓட்டல் நிர்வாகத்தின் விதிப்படி, `அட்வான்ஸ்' செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் ரூம் கொடுப்பதாக இல்லை' என்றார்கள், விடாப்பிடியாக.

அப்போதுதான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி. நாம் 2 மணிக்கு வந்திருக்கிறோம். நமக்கு முந்தி புறப்பட்ட ரஜினி சார் எப்படியும் ராத்திரி 12 மணிக்குள் இங்கே வந்திருப்பார். அவருக்கும் இதே நிலைதான் ஏற்பட்டதா?' என்று மனசுக்குள் ஒரு பரபரப்பு கேள்வி எழுந்தது.

உடனே நான் பதட்டமாகி, 'எனக்கு முன்னால் ரஜினி சார் வந்திருப்பாரே. அவருக்காவது ரூம் கொடுத்தீர்களா, இல்லையா?' என்று கேட்டேன்.

அவர்களோ ரொம்ப கூலாக, 'ராத்திரி 11 1/2 மணிக்கு வந்தார். அவருக்கும் ரூம் கொடுக்கவில்லை' என்றார்கள்.

'அடப்பாவிகளா!' என்று அதிர்ச்சி தாங்காமல் அலறியவன், 'அப்படீன்னா ரஜினி சார் எங்கேதான் போயிருப்பார்?' என்று படபடக்கும் இதயத்துடன் ஓட்டலை விட்டு வெளியே ஓடிவந்தேன்.

ஓட்டலையொட்டி கொஞ்ச தூரத்தில் ரஜினி வந்த கார் நின்றது. ரஜினிக்கு உதவியாளராக வந்த பையன் வெளியில் நிற்க, உள்ளே காரின் பின்சீட்டில் வெள்ளைத் துணியால் உடம்பை மூடிப்படுத்திருந்தார் ரஜினி.

இதைப் பார்த்ததும் என் கோபம் அதிகமாகிவிட்டது. 'என்னதான் ரூல்ஸ் என்றாலும் வருகிற ஆள் யாரென்று தெரியவேண்டாம்? ஒரு பிரபல நடிகரை, மக்கள் அபிமானம் பெற்றவரை, சூப்பர் ஸ்டாரை இப்படி காருக்குள் படுக்க வைத்திருக்கிறீர்களே. இப்போதாவது ரூம் கொடுங்கள். நான் டைரக்டர் பி.வாசு. ஒரு டைரக்டருக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? என்று சூடாக குமுறல் வார்த்தைகளை கொட்டியபோது, என் முதுகில் தட்டியது ஒரு கை. திரும்பிப்பார்த்தால் புன்னகை முகத்துடன் நிற்கிறார் ரஜினி!

அப்போது ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? 'வாசு! நாம யாருன்னு அவங்கதான் நமக்கு சொல்லணும். ரூம் கிடைக்காததுக்கு காரணம் நம்மவங்க செய்த தப்புதானே! முன்கூட்டியே நாம் அனுப்பியிருந்தவங்க அட்வான்ஸ் புக்கிங் பண்ணாததால், நாம் இவங்களை கோபிச்சுக்கிறதில் நியாயம் இல்லை. நம்ம மேலே தப்பு வெச்சிக்கிட்டு நாம அவர்களை குறை சொல்லக்கூடாது' என்றார்.

இப்படியொரு சம்பவம் வேறு நடிகருக்கு ஏற்பட்டிருந்தால், உடனே கோபித்துக்கொண்டு போயிருப்பார். ஆனால், கவனக்குறைவால் ஏற்பட்ட தடங்கல்களை புரிந்து கொண்டு, காருக்குள் படுத்துக்கொண்டது மட்டுமல்ல, நிதானமாய் அந்தப் பிரச்சினையை அணுகினார்.

மறுநாள் படப்பிடிப்பு எந்த சிரமமுமின்றி நடந்தது.

இதற்குப்பிறகு இன்று வரை நான் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை. 'சந்திரமுகி' படத்தின் பெரிய வெற்றிக்குப்பிறகு வெளியில் என்னைப் பார்த்த ஒருவர், 'நீங்க டைரக்டர் பி.வாசுதானே' என்று கேட்டபோதுகூட, எனக்கு ரஜினி சார் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

இப்படி தன்னுடன் பழகுபவர்களுக்கும் ஒரு பக்குவ நிலையை ரஜினி சார் தந்துவிடுவார். சந்திரமுகி படம் 700 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போதும், இந்த வெற்றிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் அதே எளிமையும் இனிமையுமான ரஜினியைத்தான் இப்போதும் பார்க்கிறேன்.'

இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக