வல்லரசாக வளர்ந்து வரும் பெரிய நாடு. 110 கோடி பேரைக் கொண்ட மனித வளம். அதிலும் பெரும்பான்மையோர் இளைஞர்கள். ஆனாலும் தகுதியில்லை ஏன்?
ஆம்! உலக கால்பந்து திருவிழாவில் பங்கேற்கக் கூட இந்தியா தகுதி பெற வில்லை என்பது வேதனைக்குரியது.
அரசியல்- எல்லாவற்றிலும் அரசியல், விளையாட்டிலும் அரசியல்- ஆதிக்க சக்திகளின் பிடியில் விளையாட்டுத் துறையும் சிக்கி,சீரழிந்து கொண்டிருக்கிறது
.
இந்த சக்திகளிடமிருந்து விளையாட்டை விடுவிக்க வேண்டுமானால் இளம் பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வம் காட்டாற்று வெள்ளம் போல் பொங்கிப் பெருக வேண்டும்.திறமையானவர்கள் ஏராளமாக வரும்போது தடைகள் தானாக விலகும்.
பள்ளிப் பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதற்கு மாறாக வாரிசுகளை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும், என்ஜினீயர் ஆக்கிவிட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். விளையாட்டு வீரராக்கிவிட வேண்டும் என்று எத்தனை பேர் விரும்புகிறார்கள்?விளையாட்டுகளில் ஆர்வத்தைத் தூண்டிவிட பெற்றோர் மனது வைக்க வேண்டும்.பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
விளையாட்டில் ஆர்வமுள்ள சிறார்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய விளையாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை,விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) செயல்பட்டு வருகிறது.
வளரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு என, சென்னை மட்டு மல்லாமல் மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பள்ளிகள், விடுதிகளை நடத்தி வருகிறது இந்த ஆணையம் இந்த விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகளில் 7, 8, 9, 11-ம் வகுப்புகளில் சேர மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
சேர்வதற்கான தகுதிகள்: 7-ம் வகுப்பில் சேர 6-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 13 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 8-ம் வகுப்பில் சேர 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 14 வயதுக்குள் இருத்தல்வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 15 வயதுக்குள் இருத்தல் வேண்டும். 11-ம் வகுப்பில் சேர 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வுப் போட்டி: ஊராட்சி ஒன்றிய அளவு, மாவட்ட அளவு, மாநில அளவு என 3 கட்டமாக தேர்வுப் போட்டிகள் நடத்தப்படும். உயரமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உணவு, தங்குமிடம், விளையாட்டு சீருடை, விளையாட்டுப் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.கல்விக் கட்டணங்களை மாணாக்கரின் பெற்றோர் ஏற்கவேண்டும்.
மாணவர்களுக்கு விளையாட்டு விடுதி,பள்ளி அமைந்துள்ள இடங்கள்: திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சென்னை புதூர், கிருஷ்ணகிரி, சென்னை ரெட்ஹில்ஸ், நந்தன், நெய்வேலி.
மாணவிகளுக்கு...: ஈரோட்டில் விளையாட்டு விடுதி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு திண்டலில் பள்ளி.
அளிக்கப்படும் பயிற்சி: ஆண்களுக்கு தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டுகளுக்கு சர்வதேச தரத்துடன் பயிற்சி அளிக்க ப்படுகிறது.
மாணவிகளுக்கு தட களம், வாலிபால், கால்பந்து, ஹேண்ட்பால், நீச்சல், வாள் சண்டை,கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறப்பான பயிற்சியை எஸ்.டி.ஏ.டி. பயிற்சியாளர்கள் அளித்து வருகின்றனர்.
தற்போது எஸ்.டி.ஏ.டி.யின் உறுப்பினர் செயலராக சத்யவிரத சாஹு ஐ.ஏ.எஸ். உள்ளார். எஸ்.டி.ஏ.டி. மூலம் மேலும் பலப்பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் பல புதுப்புது திட்டங்களையும் அவர் அறிவித்து வருகிறார்.
ஏழ்மை நிலையிலுள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச அளவில் சாதனை படைப்பதற்காக பல்வேறு வசதிகளை செய்து தருகிறது எஸ்.டி.ஏ.டி.இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களை பட்டை தீட்டிக் கொண்டால்நீங்கள் சாதிக்கலாம் என்கிறார் உறுப்பினர்-செயலர் சத்யவிரத சாஹு.