மொத்தப் பக்கக்காட்சிகள்

11/27/2012

திருவண்ணாமலை மகா தீபம்

அகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு !

தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.

அங்காரகன் மகிமை

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.

கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

லட்சுமி அம்சம்

திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டி எனப்படும் களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்ண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, "சிவசக்தி' சொரூப மாகிறது.

விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் கிரகலட்சுமியாகவும் இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

கற்பக தருவான பனை

பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

பொறி உருண்டை

கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்

திருவண்ணாமலையில் மகா தீபம் 21 தலைமுறைக்கும் புண்ணியம் தரும் கார்த்திகை தீபம்

திருவண்ணாமலையில் தீபத்தை பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கின்றது அருணாசல புராணம். இதன்படி திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களுக்கு உணவுத்தட்டுப்பாடு வராது, பார்த்தவர்களுக்கு மட்டுமின்றி சிந்தித்தவர்களுக்கும் கூட இடையூறு நீங்கி விடும் என்று கூறப்பட்டுள்ளது.

பத்துநாட்கள் திருவிழா

இந்த ஆண்டிற்கான விழா நவம்பர் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய அம்சமான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளையும் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கடந்த 4ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், பெண்களே வடம் பிடித்து இழுத்த பராசக்தி அம்மன் தேரோட்டம் கடந்த திங்களன்று நடைபெற்றது.

பரணி தீபமும் மகாதீபமும்

கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான மகாதீபம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் வைகுந்த வாயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மகாதீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர்.

இதன்பின்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள வீடுகளில் மக்கள் விளக்கேற்றி வழிபடுவர்

அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு

பார்வதி தேவியை சிவபெருமான் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராய் ஆனதைக் குறிக்கும் வகையில், கார்த்திகையன்று மாலையில் திருவண்ணாமலை கோவிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கிறது. இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனம் கிடைக்கும்.

தெப்பத் திருவிழா

உற்சவத்தின் தொடர்ச்சியாக 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களும் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 12ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

Thanks to One India.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக