மொத்தப் பக்கக்காட்சிகள்

8/31/2012

செல்வி ஜெ.ஜெயலலிதா - வாழ்க்கைக் குறிப்பு

செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.

அம்மா என்ற அன்பான வார்த்தையை அரசியல் அஸ்திரமாக மாற்றிகொண்டவர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக் இருந்தாலும், தலைமைக் கழகம் வந்தாலும், பட்டாடோப ஆர்ப்பாட்டங்களால் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் தலைவி

    கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவிக்குச் சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால் சில காலத்தில் `ஜெயலலிதா’ ஆனார். ஜெயா,ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர்.அவரது அம்மாவுக்கு `அம்மு’. அ.தி.மு.க –வினர் அனைவருக்கும் `அம்மா’!

    சர்ச் பார்க் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார்.`எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்’ என்பதைத் தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

    போயஸ் கார்டன், சிறுதாவூர் பங்களா, ஊட்டி கொடநாடு எஸ்டேட், ஹைதரபாத் திரட்சைத் தோட்டம் ஆகிய நான்கும் ஜெயலலிதா மாறி மாறித் தங்கும் இடங்கள். ஹைதரபாத் செல்வதைச் சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர் மாதக்கணக்கில் தங்க வேண்டுமானால்..கொடநாடு!

    சினிமா காலத்தில் இருந்து அவரை `வாயாடி’ என்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். இது பற்றி ஜெயலலிதாவிடம் ஒரு நிருபர் கேட்ட போது, சிரித்தபடி சொன்னார்...``அவர் கலகல... நான் லொடலொட!”

    உடம்பை ஸ்லிம்மாகவைத்துக் கொள்வதில் ஆரம்ப காலத்தில் அதிக அக்கறையுடன் இருந்தார். தினமும் வெந்நீரில் எலுமிச்சம்பழச்சாறும் தேனும் கலந்து குடித்தார்.இப்போது தினமும் 35 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 13 கிலோ எடை குறைத்துள்ளார்!

    ஜெயலலிதா நடித்த மொத்தப்படங்கள் 115. இதில் எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த் முதல் படம் `ஆயிரத்தில் ஒருவன்’.

    'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்ற `அரசிளங்குமரி’ படப் பாடல் தான் தனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாட்டு என்பார். அந்தப் பாடலை எழுதிய பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவியிடம் 10 லட்சம் பணம் கொடுத்து, அவரது எழுத்துக்களை நாட்டுடைமை ஆக்கினார்.

    `அரசியலில் நான் என்றுமே குதிக்க மாட்டேன்’ என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. `நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆகிவிடுவார்போல’ என்று அவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலி மாறன்.

    ஜெயலலிதா முதலில் குடியிருந்தது சென்னை தியாகராயர் நகர் சிவஞானம் தெருவில் பிறகு, அடையாறு பகுதியில் குடி இருந்தார். படங்கள் குவிந்து,நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான், போயஸ் கார்டன் வீடு கட்டப்பட்டது அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்துக் கட்டியவர், அவரது அம்மா சந்தியா. ``வீட்டுக்குள்ளே என்ன மாற்றமும் செய்யலாம், ஆனா,எங்க அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக் கூடாது” என்று சொல்லி இருக்கிறாராம் ஜெயலலிதா.

    எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயது இருக்கும்போதே அப்பர் இறந்துபோனதால், அந்த நினைவுகள் இல்லை. போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் சந்தியா, எம்.ஜி.ஆர். ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

    எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற விழாவில் ஆறு அடி உயரமுள்ள வெள்ளிச் செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் அதுதான்.

    பெருமாளை விரும்பி வணங்குகிறார். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும்,கும்பகோணம் ஐயாவாசி ரத்தியங்கராதேவியையும் சமீப காலமாக வணங்கி வருகிறார்.
   
தினமும் காலையில் நிஷாகந்தி எனப்படும் இருவாட்சி மலரைப் பறித்து பூஜைக் கூடையில் தயாராக வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள்.அதை எடுத்தபடியே பூஜை அறைக்குள் நுழைவார்.சமீபமாக பூஜையில் தவறாமல் இடம்பெறும் துளசி.

    யாகம் வளர்ப்பது, ஹோமத்தில் உட்காருவதில் ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் ஆறு மணி நேரம் கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாகச் சொன்னாலோ, கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேத ஞானம் உண்டு.

    இயற்கை உணவுக்குப் பழகி வருகிறார். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி பசலை ஆகிய கீரை வகைகள் கொண்ட சூப் தினமும் இவருக்காகத் தயாராகின்றன கொடநாடு எஸ்டேட்டில் இந்த வகைக் கீரைகள் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன.

    சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் 116 ஏக்கர். அங்கு புறா,கிளி,காடை,கெளதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா,சந்திரா என்ற இரண்டு ஈமுக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட... ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

    `நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால், எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன்” என்று தனது கேரக்டருக்கு விளக்கம் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

    பரதநாட்டியம், ஓரியன்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதலமைச்சராக இருந்தபோது ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதும், கடந்த ஆண்டு படுகர்களுடன் இணைந்து ஆடியதும் அடக்க முடியாத நாட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுகள்!.

    ஜெயலலிதாவின் 100 –வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் `நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்று பாராட்டபட்டவர்!.

    பழைய பாடல்களை மணிக்கணக்கில் கேட்டு லயிக்கிறார். ஜெயா டிவி-யில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் அம்மாவின் விருப்பங்கள்தான்.

    ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

    போயஸ் வீட்டில் எப்போதும் ஏழு நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால், சில குட்டிகள் சிறுதாவூர், கொடநாடு எனப் பிரித்து அனுப்பிவைக்கப்படுகின்றன.

    இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது வாக் அண்ட் டாக் பேட்டிக்கு வரவழைத்து விட்ட என்.டி.டி.வி-யால், ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்ற முடியவில்லை. கடைசி வரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்!.

    ஓஷோவின் புத்தகங்களை மொத்தமாக வாங்கி ரசித்து வந்தார். ஜெயலலிதா இப்போது ரமணர் பற்றியே அதிகம் படிக்கிறார். ரமணர் தொடர்பான முக்கியப் புத்தகங்கள் அத்தனையும் கடந்த நான் கைந்து மாதங்களாக அவர் மேஜையில் உள்ளன.

    ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில் தான்.அங்கு சசிகலா மற்றும் முக்கியப் பணியாளர்கள் தவிர, யாருக்கும் அனுமதி இல்லை!.

தொகுத்து வழங்குபவர்

திருமதி ஆனந்திராம்குமார்     நன்றி

ஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக