இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு
வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின்
கீழ்வருகின்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின்
கீழ் வருவார்கள். ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும்
சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார்.
இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி! இதை மத்திய
அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?
இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய
அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக
வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அரசியல் சட்டப்படி விற்பனை
வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில்
மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு
பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை
வரிச் சட்டம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து
கொள்வோம்.
தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில்
இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில்
விற்பனை வரிச் சட்டத்தின் அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்து கொண்டவர் Registered Dealer என்றழைக்கப் படுவார்.
பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக்
கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு
பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர்
தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம். அவர் செய்யும் விற்பனைகள் தமிழ்
நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும்.
அதாவது Sale within Tamilnadu என்றழைப்பார்கள். விற்பனை செய்யும்
பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப்
பட்டு இருக்கும். அதன்படி வரியை பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து
அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க
வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு
தலையிடமுடியாது. இது மாநில அரசின் நிதி அல்லவா! ஆகவே இதில் மத்திய அரசு
தலையிட முடியாது. இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம்
வேறுபடும். உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ்
நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக்
கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம். இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன்
வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான
விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.
தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி
செய்கிறார். அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு
(Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை
விற்பனையாளருக்கு ( Retail seller) விற்பனை செய்கிறார். இந்த விற்பனைக்கு
10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற
வேண்டும். இது Second Sale என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1%
வசூலித்தால் போதுமானது. இதற்கு re-sale tax என்று பெயர். சில்லரை
விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer) விற்பனை
செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு ஒவ்வொரு
விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை “Multi-point Tax”
என்றழைப்பார்கள். இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில
பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்;
இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும். அதன்படி வரிவிதித்து
அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.
இதைத் தவிர Surcharge, Turnover-tax என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு
விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு. இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச்
சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து
தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.
இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது. இந்த ஆண்டுமுதல் தமிழ்
நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற
V.A.T. நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை
வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை
வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.
அதைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள பதிவு பெற்ற வியாபாரி பெங்களூரில் இருந்து ஒரு பொருளை வாங்கினால் 4% வரி செலுத்தினால் போதுமானது. உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள் களை மற்ற மாநிலங்களிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்வோம். அவர் எந்த மூலப் பொருளாக இருந்தாலும் 4% வரி விகிதத்தில் அவர் பொருள்களை வாங்கி உற்பத்தியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் எந்த மாநிலத்திலிருந்து பொருள்கள் விற்கப் படுகின்றதோ அந்த மாநிலத்திற்குத்தான் விற்பனை வரி போய்ச் சேருகிறது. இந்த மத்திய விற்பனைவரிச் சட்டம் இன்னும் அமுலில்தான் இருக்கிறது. மாறவில்லை.
சரி! இப்போது மதிப்புக் கூட்டு வரியைப் பற்றிப் பார்ப்போம். இது தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு மாற்றாக வந்திருக்கிறது என ஏற்கனவே கூறி இருக்கிறோம். இதன் ஷரத்துக்கள் என்ன வென்று பார்ப்போம். இந்த மதிப்புக் கூட்டு வரி ஏற்கனவே சுமார் 130 நாடுகளில் அமுலில் இருக்கிறது. இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தையும், பாண்டிச்சேரியையும் தவிர மற்ற மாநிலங்கள் ஏற்கனவே அமுல் செய்து விட்டன. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் இன்னும் அமுல் செய்ய வில்லை.
இதில் வரி விகிதங்கள் நான்கு மட்டுமே.
1. சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. அவைகளுக்கு விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது.
2. மற்ற பொருள்களுக்கு 1%, 4%, 12.5% வரிவிகிதம்தான்.
இந்த மதிப்புக் கூட்டு வரியில் தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டத்திலிருந்தது போல் Surcharge, Additional Tax ஆகியவைகள் எல்லம் கிடையாது. சரி! வரி விதிப்பு எவ்வாறு இருக்கிறது எனப் பார்ப்போம்.
உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் ஒரு பொருளை, மொத்த விற்பனையாளருக்கு விற்பனை செய்கிறார் எனக் கொள்ளுங்கள். அந்தப் பொருளின் விலை ரூபாய் 10,000/- எனவும், அதன் விற்பனை வரி 4% எனவும் கொள்ளுங்கள். உற்பத்தியாளர் பொருளின் விலை ரூ. 10,000+ விற்பனை வரி ரூ.400/- ஆக மொத்தம் ரூ. 10,400/-க்கு விற்று விடுகிறார். ரூ.400/-ஐ அரசாங்கத்திடம் விற்பனை வரியாகக் கட்டி விடுகிறார்.
மொத்த விற்பனையாளைர் அதைப் ரூ. 12,000/- க்கு சில்லரை விற்பனையாளருக்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அவர் ரூ.12,000/-க்கு 4% விற்பனை வரி எனக் கணக்கிட்டு மொத்தம் ரூ. 12480/- விற்கிறார். விற்பனை வரியான ரூ. 480/- ல் தான் கொடுத்த விற்பனை வரியான ரூ.400/- க் கழித்துக்கொண்டு மீதித் தொகையான ரூ.80/- அரசாங்கத்திற்குக் கொடுத்து விடுகிறார்.
சில்லரை விற்பனையாளர் பொருள் நுகர்வோருக்கு ரூ. 15,000/- க்கு விற்பனை செய்கிறார் எனக்கொள்ளுங்கள். அவர் ரூ. 15,000/- + விற்பனை வரி 4% ரூ. 600/- ஐ நுகர்வோரிடமிருந்து வாங்கி தான் வரி செலுத்திய ரூ.480/- க் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ. 120/- அராசாங்கத்திற்குச் செலுத்தி விடுகிறார்.
One important aspect in V.A.T is, the material suffers tax at the same rate at every point of sale whereas under T.N.G.S.T, Act the material suffers @1% resale tax at every point of sale other than the first sale.
சரி ! உற்பத்தியாளருக்கு இது எவ்விதத்தில் பயனளிக்கிறது? தற்போது உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் மூலப் பொருள்களுக்கு 4% வரிகொடுத்து எல்லா மூலப் பொருள்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். அயல் மாநிலத்திலிருந்து வாங்கும் மூலப் பொருள்களுகளையும் 4% வரி விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் விற்கும் போது தமிழ் நாட்டிலிருந்து வாங்கிய மூலப்பொருள்களுக்குக் கட்டிய வரி மட்டுமே விற்பனை செய்யும் வரியிலிருந்து கழித்துக் கொண்டு மீதத்தை அரசாங்கத்திற்குக் கட்டமுடியும். உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் மூலப் பொருள்களை ரூ. 1000/-க்கு வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு 4% வரி கட்டுகிறார். ரூ. 40/- வரித் தொகையா கின்றது. மொத்த அடக்க விலை 1000+40 = 1040. அதை ரூ.1200/-க்கு விற்கிறார் எனக் கொள்ளுங்கள். அதற்கு வரித்தொகையாக ரூ. 48/- வசூல் செய்கிறார். அரசிற்குக் கட்டும்போது ரூ. 48/-ல் இருந்து ரூ. 40/- ஐக் கழித்துக் கொண்டு ரூ. 8/- மட்டும் செலுத்தினால் போதும். அதாவது அவர் வாங்கிய பொருள்களின் மீது செலுத்திய வரித் தொகை அவருக்குத் திருப்பி அளிக்கப் படுகிறது. இது தமிழ்நாட்டிலிருந்து வாங்கிய பொருள்களின் வரித் தொகையையே இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியும். அயல் மாநிலத்திலிருந்து வாங்கிய பொருள்களுக்குக் கட்டிய வரியினை இவ்விதமாகத் திரும்பிப் பெறமுடியாது.
இந்த மதிப்புக் கூட்டு வரியின் கீழ், தமிழ் நாடு வணிக வரிச் சட்டத்தின் கீழ் இருப்பதைப்போல் ஆண்டுதோறும் அதிகாரிகளால் Assessment Order பெற வேண்டிய அவசியம் இல்லை. வணிகர்களே தாங்களாகவே சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டால் போதும்.மொத்த வணிகர்களில் சுமார் 20% பேர்களைத் தேர்வு செய்து Assessment செய்வோம் எனக் கூறுகிறது வணிக வரித்துறை.
இந்த மதிப்புக் கூட்டு வரியை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது நாம் பார்ப்போம்.
உற்பத்தியாளர்கள் எந்தப் பொருளாக இருந்தாலும் உற்பத்திசெய்வதற்காக 4%
வரி விகிதத்தில் அவைகளை வாங்கி உபயோகப் படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக
ஒருவர் உற்பத்திக்காக ரூ. 1000/-க்குப் மூலப்பொருள்களை வாங்கினால் 4%
வரியையும் சேர்த்து ரூ. 1040/-க்கு வாங்குகிறார். உற்பத்தி செய்த பொருளை
ரூ.1200/-க்கு அதே 4% வரி விகிதத்தில் விற்றால் அவர் ரூ. 1248/-க்கு
விற்பனை செய்து விடுகிறார். அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரியைக்
கட்டும்போது அவர் வசூல் செய்த ரூ. 48/-ல் இருந்து அவர் கொடுத்த வரித்
தொகையான ரூ.40/- ஐக் கழித்துக் கொண்டு மீதித் தொகையான ரூ.8/-ஐக் கட்டி
விடுவார். அவர் கொடுத்த ரூ. 40/- "Input Credit" என்றழைக்கப் படுகிறது.
இந்த V.A.T. சட்டத்தில் அவர் வாங்கிய மூலப் பொருள்களின் மதிப்பு ரூ.
1000/- ஆகவே இருந்து வருகிறது. ஆனால் இதற்கு முந்தைய சட்டத்தில் இவ்வாறு
கொடுத்த வரிப் பணத்தை திரும்பிப் பெறும் வாய்ப்பு இல்லாததால் அவர் விற்கும்
பொருளை ரூ. 1200/- விற்றிருக்க மாட்டார். அதற்கு மேலாக ரூ. 1240/- க்காவது
விற்றிருப்பார். ஆக பொருள்களின் விலை இதில் குறைய வாய்ப்பிருக்கிறது
என்பது இவர்களின் வாதம்.
"Input Credit" என்பது அந்த மாநிலத்திற்குள்ளேயே வாங்கும்
பொருள்களுக்கு மட்டுமே கிடைக்குமென்பதால் உற்பத்தியாளர்கள் அந்த
மாநிலத்திற்குள்ளேயே மூலப் பொருள்ளை வாங்க முயற்சி செய்வார்கள். உதாரணமாக
ஒரு உற்பத்தியாளர் தன் உற்பத்திக்கு Electric Motor - ஐ
பெங்களூரிலிருந்து 4% வரி விகிதத்தில் வாங்குகிறார் எனக்கொள்ளுங்கள். இது
வெளி மாநிலத்திலிருந்து வாங்கப் படுவதால் இந்தப் பொருளுக்கு அவர்
கொடுக்கும் வரியை Input Credit ஆக எடுத்துக் கொள்ள முடியாது. அதே
Elecatric Motor- ஐ கோயம்புத்தூரிலிருந்து வாங்குகிறார் எனக் கொள்ளுங்கள்;
அந்த வரிப் பணத்தை Input Credit ஆக எடுத்துக் கொண்டு அந்த மாதம் அவர்
செலுத்தும் வரியிலிருந்து கழித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால்
உற்பத்தியாளர்கள் அந்த மாநிலத்திலேயே மூலப் பொருள்களை வாங்க
முயற்சிப்பார்கள். அதனால் அந்த மாநிலத்தின் வர்த்தகம் பெருகும். அதனால்
அரசுக்கு அதிக வரி கிடைக்கும்.
உள் மாநிலத்திலேயே பொருள்களை வாங்கி உள் மாநிலத்திலேயே அவற்றை
வியாபாரிகள் ரூ. 10,00,000/- வரை விற்றால் அவர்கள் அரசாங்கத்தில் தங்களைப்
பதிவு செய்து கொள்ள வேண்டாம். அவர்கள் சிறு வியாபாரிகள் எனக் கருதப்
படுவர். அவர்கள் மாதம் விற்பனை வரி செலுத்துவது, Assessmentக்குச் செல்வது
போன்றவைகள் கடையாது. V.A.T. வருவதற்கு முன்பு இந்தச் சலுகை ரூ.
3,00,000/- வரை வியாபாரம் செய்பவர்களுக்கே இருந்து வந்தது. இப்போது அது
கணிசமாக உயர்த்தப் பட்டு விட்டது.
இதில் Resale Tax, Surcharge, Turn-over- tax போன்றவைகள் கிடையாது.
இதுபோன்ற சலுகைகள் இருப்பதாக ஒரு தரப்புக் கூறுகின்றது. சரி! அடுத்த தரப்பின் வாதம் என்ன?
இந்த "Input Credit"ஐ கழித்துக் கொள்ளும் வியாபாரிகள் அதற்குண்டான,
பில்கள், ரிஜிஸ்டர்கள் ஆகியவற்றை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் Assessment கிடையாது என்று அறிவித்திருந்தாலும், 20%
வணிகர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அவர்கள் கணக்குகள் அதிகாரிகளால்
சரிபார்க்கப்படும். ஆகவே எல்லா வணிகர்களும் சரியான முறையில் கணக்கு
வைத்திருக்க வேண்டும்.
மாதந்தோரும் வரி கட்டும் போது மாதாந்திரக் கணக்குகளையும் சேர்த்துச்
சமர்ப்பிக்க வேண்டும். கணக்குகளை வைத்துக் கொள்ள கம்ப்யூட்டர் தேவைப்படும்.
அதை இயக்கத் தெரிந்தவரும் தேவைப்படும். இதெற்கெல்லாம் அதிகச் செலவாகும்.
வணிகர்கள் இந்தச் செலவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
உள் மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குத்தான் வரியைக் கழித்துக் கொள்ள
இயலும். வெளி மாநிலத்தில் வாங்கும் பொருள்களுக்குக் கழிக்க முடியாது. ஆகவே
பொருள்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.
மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தபோது இந்தியாவெங்கும் ஒரே சீரான
வரி என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் நடை முறையில் வரி சீராக இல்லை; வட
மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி விதிக்கப்
படுகிறது. அறிவிக்கப் பட்டபோது "எந்தப் பொருளுக்கும் 12.5%க்கு மேல் வரி
விதிக்கப்படமாடடாது" எனக் கூறப்பட்டது. ஆனால் கேரளாவில் பல பொருள்களுக்கு
16%, 20% என விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒரே சீரான வரியாக விதிக்கப் பட
வில்லை.
அடுத்தது இதில் உள்ள தண்டனைச் சட்டங்கள். விதி எண் 71, 72-ல்
கூறப்பட்டுள் ளவை வணிகர்களுக்குக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
மாதந்தோறும் கணக்குகளைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அல்லது வியாபாரத்தைச்
சட்டப்படிப் பதிவு செய்யா விட்டாலோ கோர்ட் நடவடிக்கைகளுக்கு
உட்படுத்தப்படும்.. முதல் தடவை செய்த தவற்றிற்கு அபராதத்துடன் போய்விடும்.
இரண்டாம் முறை அதே தவற்றைச் செய்தால் சிறைத் தண்டனைக்கும் சட்டத்தில்
இடமுண்டு. இதற்கு முந்தைய T.N.G.S.T. Act-ல் சிறைத் தண்டனைக்கு இடமில்லை.
இப்போது அப்படி இல்லை. இது வணிகர்களுக்கு சிறிது கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக