ஒரு
பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல
இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ
அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.
* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக