மொத்தப் பக்கக்காட்சிகள்

3/14/2012

மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது
கேள்வி: செய்யத்தகாத காரியம் எது?
பதில்: பலராலும் நிந்திக்கத் தக்க செயல்.

கேள்வி: குரு என்பவர் யார்?
பதில்: தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார்.

கேள்வி: உலகில் ஆத்மாவுக்கு மிகவும் நல்லது எது?
பதில்: தர்மம்.

கேள்வி: இவ்வுலகில் புனிதமானவன் யார்?
பதில்: மனம் தூய்மையாக உள்ளவன்.

கேள்வி: எவன் உண்மையான (புலவன்) பண்டிதன்?
பதில்: நல்லது, கெட்டது என்று பிரித்தறியும் விவேகம் உடையவன்.

கேள்வி: எது விஷம் போன்றது?
பதில்: தனது குருவினிடத்தில் காட்டும் அவமரியாதை.

கேள்வி: இவ்வுலகில் சாரமானது எது? மனிதர் அனைவராலும் விரும்பத்தக்கது எது?
பதில்: தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம் கொண்ட பிறவியே.

கேள்வி: கள்ளைப்போல் மனத்துக்கு ஆசையை உண்டாக்குவது எது?
பதில்: நட்பு.

கேள்வி: திருடர்கள் யார்?
பதில்: சிற்றின்ப சுகங்கள்.

கேள்வி: சம்சாரத்தில் நம்மை சிக்க வைக்கும் கொடி எது?
பதில்: ஆசை.

கேள்வி: நம்முடைய உண்மையான பகைவன் யார்?
பதில்: முயற்சியின்மை.

கேள்வி: நமக்கு பயத்தை அளிக்கக் கூடியது எது?
பதில்: மரணம்.

கேள்வி: குருடனுக்குச் சமமானவன் யார்?
பதில்: ஆசை அதிகம் கொண்டவன்.

கேள்வி: எவன் உண்மை வீரன்?
பதில்: பெண்களின் கடைக்கண் பார்வைகளால் தாக்கப்படாதவன்.

கேள்வி: அமுதம்போல், காதுகளால் விரும்பிப் பருகக் கூடியது எது?
பதில்: சாதுக்களுடைய உபதேசம்.கேள்வி: கௌரவம் பெற வழி எது?
பதில்: பிறரிடம் சென்று உதவி கோராமல் இருத்தலே.

கேள்வி: புரிந்துகொள்ள முடியாதது எது?
பதில்: பெண் மனம்.

கேள்வி: எவன் புத்திசாலி?
பதில்: பெண்களின் நடத்தையினால் பாதிக்கப்படாதவன்.

கேள்வி: எது மிக்க துயரத்தைத் தரும்?
பதில்: போதுமென்ற மனம் இல்லாமை.

கேள்வி: எது அற்பமான செயல்?
பதில்: கீழ்குணமுடையவனிடம் உதவி கோருதல்.

கேள்வி: எது உண்மையான வாழ்வு?
தில்: குற்றமற்ற வாழ்க்கை.

கேள்வி: ஜடப்பொருளின் தன்மை எது?
பதில்: படித்துவிட்டு, அதைப் பயிற்சி செய்யாமல் இருத்தல்.

கேள்வி: விழிப்புடன் இருப்பவன் யார்?
பதில்: விவேகம் உடையவன்.

கேள்வி: மனிதர்களுக்குத் தூக்கம் என்பது எது?
பதில்: மடமை, மூடத்தனம்.

கேள்வி: தாமரை இலைமேல் நீர்போல் நிலையற்றது எது?
பதில்: இளமை, செல்வம், ஆயுள் ஆகிய மூன்றும்.

கேள்வி: நரகம் என்பது எது?
பதில்: அடிமைத்தனம்.

கேள்வி: எது உண்மையான சுகத்தைத் தரவல்லது?
பதில்: எல்லாவிதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளுதல்.

கேள்வி: எது சத்யம், உண்மை?
பதில்: உயிர்களிடத்து அன்பு.

கேள்வி: உலகில் உயிரினங்களுக்கு மிகப் பிரியமானது எது?
பதில்: அவ்வவற்றின் உயிரே.


கேள்வி: துன்பத்தை விளைவிக்கக் கூடியது எது?
பதில்: சினம் (கோபம்).

கேள்வி: இன்பத்தைத் தரவல்லது எது?
பதில்: சான்றோர் நட்பு.

கேள்வி: எல்லா துன்பங்களையும் போக்க வல்லவன் யார்?
தில்: அனைத்தையும் துறந்தவன்.

கேள்வி: விலைமதிக்க முடியாதது எது?
பதில்: காலத்தாற் செய்த உதவி.

கேள்வி: இறக்கும்வரை ஓயாமல் துன்பம் தரவல்லது எது?
பதில்: நாம் செய்துவிட்டு மறைத்து வைத்திருக்கும் பாவச் செயல்.

கேள்வி: எந்தச் செயல்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?
பதில்: கல்வி கற்பதிலும், மருந்து உண்பதிலும், தானம் கொடுப்பதிலும்.

கேள்வி: எவற்றில் நாம் கவனம் செலுத்தாமல் இருக்க வேண்டும்?
பதில்: தீயவர், அயல் பெண்கள், பிறர் சொத்து ஆகியவற்றில்.

கேள்வி: இரவும் பகலும் நாம் சிந்திக்க வேண்டியது எதை?
பதில்: உலகின் நிலையற்ற தன்மையை.

கேள்வி: நாம் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை?
பதில்: ஏழை எளியவர்களிடம் கருணை, சாதுக்களின் நட்பு.

கேள்வி: யார் யாருடைய ஆத்மாக்களை இறக்குந் தருணத்திலும் தூய்மைப்படுத்த முடியாது?
பதில்: மூடன், சந்தேகப் பிராணி, நிம்மதியற்றவன், செய்நன்றி கொன்றவன் ஆகியோருடைய ஆத்மாக்களை.

கேள்வி: சாது என்பவன் யார்?
பதில்: நன்னடத்தை உடையவன்.

கேள்வி: எவனைத் தாழ்ந்தவன் என்கிறோம்?
பதில்: கெட்ட நடத்தை கொண்டவனை.

கேள்வி: இவ்வுலகை வென்றவன் யார்?
பதில்: சத்யமும் பொறுமையும் கொண்டவன்.

கேள்வி: தேவர்களும் வணங்கும் தகுதி பெற்றவன் யார்?
பதில்: கருணை உள்ளம் படைத்தவன்.

கேள்வி: உயிரினங்களை எவன் எளிதாகத் தன் வசப்படுத்த முடியும்?
பதில்: உண்மை பேசுபவனாகவும், அன்பும், நல்லடக்கமும் உடையவனாகவும் இருப்பவன்
.
கேள்வி: எவ்வழியை நாம் பின்பற்ற வேண்டும்?
பதில்: இம்மை_மறுமை இரண்டிலும் நீடித்த சுகத்தை அளிக்கும் நேர்மை வழியை.

கேள்வி: குருடன் யார்?
பதில்: தகாத செயல்களில் ஈடுபடுபவன்.

கேள்வி: செவிடன் யார்?
பதில்: நல்லவற்றைக் கேளாதவன்.

கேள்வி: ஊமை யார்?
பதில்: தக்க தருணத்தில் இனிமையாகப் பேசத் தெரியாதவன்.

கேள்வி: தானம் என்பது எது?
பதில்: பெற்றுக்கொள்பவன் கேளாமலும், பிரதிபலன் எதிர்பாராமலும் கொடுப்பது.

கேள்வி: உண்மையான நண்பன் யார்?
பதில்: பாவச் செயல்களிலிருந்து நம்மை விலக்குபவன்.

கேள்வி: மனிதனுக்கு அணிகலன் யாது?
பதில்: அவனுடைய குணம்.

கேள்வி: சொல்லுக்கு அணி செய்வது எது?
பதில்: வாய்மை.

கேள்வி: மின்னல் ஒளிபோல் தோன்றி கணத்தில் மறைவது எது?
பதில்: தீயோர் நட்பு.

கேள்வி: குலத்தையும் குணத்தையும் காப்பவர் யார்?
பதில்: சாதுக்களே.

கேள்வி: இவ்வுலகில் சிந்தாமணியைப்போல் கிடைத்தற்கரியது எது?
பதில்: ஞானிகள் நான்கு பொருட்களைச் சிந்தாமணி போன்றவை என்பர்.

கேள்வி: அவை யாவை?
பதில்: அன்புடன் அளிக்கப்பட்ட தானம், ஆணவம் இல்லாத அறிவு, அமைதி பொருந்திய வீரம், தியாக உள்ளம் படைத்தோர் செல்வம்.

கேள்வி: வருந்தத்தக்க குணம் எது?
பதில்: செல்வம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாமை.

கேள்வி: சிறந்த குணம் எது?
பதில்: வள்ளல் தன்மை.

கேள்வி: நல்ல புலவர்களால் எவன் மதிக்கப்படுவான்?
பதில்: இயற்கையாகவே தன்னடக்கம் உடையவன்.

கேள்வி: குலத்தின் பெருமையை உயர்த்துபவன் யார்?
பதில்: எல்லா நற்குணங்களும் நிறைந்திருந்தும், தன்னடக்கத்துடன் திகழ்பவன்.

கேள்வி: இவ்வுலகம் யாருக்கு வயப்படுகிறது?
பதில்: இனிய, நன்மை பயக்கக்கூடிய சொற்களை உடையவனாய், எப்போதும் அறவழியில் செல்பவனுக்கு.

கேள்வி: நல்ல புலவரின் மனத்தைக் கவர்பவை எவை?
பதில்: நல்ல கவிதையும், அறிவு நிரம்பிய பெண்ணும்.

கேள்வி: விபத்துகள் யாரை நெருங்குவதில்லை?
பதில்: முதியோர் சொற்படி நடக்கும் அறிவாளியை.


கேள்வி: செல்வத்தின் கடவுளான லட்சுமி யாரை விரும்புகிறாள்?
பதில்: சோம்பலின்றி உழைப்பவனையும், நேர்மையான நெறியில் நடப்பவனையும்.

கேள்வி: லட்சுமி யாரை விட்டு திடீரென்று விலகுகிறாள்?
தில்: குரு, தேவர்கள் ஆகியோரை நிந்திப்பவனையும், சோம்பல் குணம் உள்ளவனையும்.

கேள்வி: எந்த இடங்களை நாம் விலக்க வேண்டும்?
பதில்: கஞ்சர்கள் வாழும் இடத்தையும், பேராசை கொண்ட அரசனின் நாட்டையும்.

கேள்வி: துன்பத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றக் கூடியவை எவை?
பதில்: கடமையுணர்ச்சி கொண்ட மனைவியும், தைரியமும்.

கேள்வி: பரிதாபத்துக்கு உரியவன் யார்?
பதில்: வசதி இருந்தும் பிறருக்குக் கொடுக்க மனம் இல்லாதவன்.

கேள்வி: ஒருவன் அற்பனாக ஆவதற்குக் காரணம் என்ன?
பதில்: தகுதி அற்றவர்களிடம் யாசிப்பதுதான்.

கேள்வி: ராமபிரானைவிட சூரன் யார்?
பதில்: காமனுடைய அம்புக்கு இலக்கு ஆகாதவன்.

கேள்வி: இரவும் பகலும் நம் சிந்தனைக்கு உரியது எது?
பதில்: இறைவனின் திருவடி.

கேள்வி: கண்கள் இருந்தும் குருடர்கள் யார்?
பதில்: நாஸ்திகர்கள்.

கேள்வி: எவனை நாம் முடவன் என்று கூறலாம்?
பதில்: முதுமையில் தீர்த்த யாத்திரை செல்பவனை.

கேள்வி: எந்தத் தீர்த்தத்தை முக்கியமானதாகக் கருதலாம்?
பதில்: மனத்து அழுக்கை நீக்கி அதைத் தூய்மைப்படுத்துவதே சிறந்த தீர்த்தம்.

கேள்வி: மக்கள் எப்போதும் நினைக்க வேண்டியது எதை?
பதில்: விஷ்ணுவின் நாமாவை.

கேள்வி: புத்திசாலியான ஒருவன் எவற்றைச் சொல்லக்கூடாது?
பதில்: பிறர் குற்றங்களையும் பொய்யையும்.

கேள்வி: மனிதர்கள் தேடிப் பெறவேண்டியவை யாவை?
பதில்: கல்வி, பணம், வலிமை, புகழ், புண்ணியம்.

கேள்வி: மனிதனின் நல்ல குணங்கள் யாவற்றையும் அழிக்க வல்லது து?
பதில்: பேராசை.

கேள்வி: நமது பலமான பகை எது?
பதில்: காமம், ஆசை.

கேள்வி: எந்த அரச சபையை நாம் விலக்க வேண்டும்?
பதில்: அனுபவமும் முதிர்ந்த வயதுமுடைய அமைச்சர்கள் இல்லாத சபையை.

கேள்வி: இவ்வுலகில் மனிதன் எந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்?
பதில்: அரசாங்க ஊழியத்தில்.

கேள்வி: உயிரைக்காட்டிலும் அதிகமாக விரும்பத்தக்கவை எவை?
பதில்: குலதர்மமும், சாதுக்களின் சகவாசமும்.

கேள்வி: கவனமாக காப்பாற்றப்பட வேண்டியவை யாவை?
பதில்: புகழ், பதிவிரதையான மனைவி, சுய புத்தி.

கேள்வி: கற்பகத் தரு போன்றது எது?
பதில்: நல்ல மாணவனுக்குக் கற்பிக்கப்படுகிற கல்வி.

கேள்வி: அழியாத ஆலமரம் போன்றது எது?
பதில்: முறைப்படி, பாத்திரம் அறிந்து, அளிக்கப்பட்ட உதவி.

கேள்வி: அனைவருக்கும் ஆயுதம் போன்றது எது?
பதில்: யுக்தி, சமயோசித புத்தி.

கேள்வி: தாய் எனக் கருதத்தக்கது எது?
பதில்: பசு.

கேள்வி: மனிதனுக்கு வலிமை எது?
பதில்: தைரியம்.

கேள்வி: மரணம் என்பது எது?
பதில்: கவனக்குறைவு.


கேள்வி: விஷம் எங்கு உள்ளது?
பதில்: தீயவர்களிடத்தில்.

கேள்வி: தீண்டத்தகாதது அல்லது தவிர்க்க வேண்டியது எது?
பதில்: கடன்.

கேள்வி: மனிதன் எப்பாடுபட்டேனும் பெற வேண்டியது எது?
பதில்: ஹரிபக்தி.

கேள்வி: மகாபாதகச் செயல் எது?
பதில்: மற்றவர்களைத் துன்புறுத்துதல்.

கேள்வி: எவன் கடவுளுக்குப் பிரியமானவன்?
பதில்: தானும் கோபப்படாமல், பிறருக்கும் கோபம் ஊட்டாமல் இருப்பவன்.

கேள்வி: காரிய சித்தி எதனால் உண்டாகும்?
தில்: தவத்தினால்.

கேள்வி: புத்தி எவரிடத்தில் உள்ளது?
பதில்: அறவோர் இடத்தில்.

கேள்வி: புத்தி எப்படிக் கிடைக்கும்?
பதில்: முதியோர்களை உபசரித்துப் பணிவிடை செய்வதால்.

கேள்வி: முதியவர் யார்?
பதில்: தர்மத்தின் தத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள்.

கேள்வி: மரணத்தைக் காட்டிலும் துயரம் தருவது எது?
பதில்: கெட்ட பெயர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக