மொத்தப் பக்கக்காட்சிகள்

2/13/2013

மூணார் - பசுமைச்சொர்க்கத்தின் எழில்!

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த ‘மூணார் மலைவாசஸ்தலம்’ கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.
மூணார் புகைப்படங்கள் - அமைதியான எக்கோ பாயிண்ட் 

மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். மதுரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி எனும் மூன்று ஆறுகள் கூடும் ஒரு வித்தியாசமான புவியியல் அமைப்பில் இந்த மலைப்பிரதேசம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்துள்ளது.

கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.


ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணார் சுற்றுலாப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

புத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி

காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணார் பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது.


எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர்.


அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணார் பிரதேசமானது தனது பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது.

ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன.

கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்!

ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.


வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், தேனிலவுப்பயணம் நாடும் தம்பதிகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.

மலையேறிகள், சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம்


மூணார் மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது.


தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம்.


இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய – ஸ்விஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும்.

மூணார் பகுதியில் ரம்மியமான இயற்கைச்சூழலின் பின்னணியில் அமைந்துள்ள நீர்விழ்ச்சிகளும் காணப்படுகின்றன. பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிற சின்னக்கனல் நீர்வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகளாகும்.


ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய ஸ்தலமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் தேயிலைத்தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணி போன்ற இடங்களும் மூணார் பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.


மூணார் மலைப்பகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடன் எந்த நாளிலும் விஜயம் செய்ய ஏற்றவாறு காணப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மிக எளிதாக இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.


எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணார் மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Thanks to One India.com

2/12/2013

நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு

"கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த "சதிலீலாவதி". அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் "பணம்" என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். "சிங்காரி" என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "அமரகவி"யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
 
800 படங்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் நடித்த பல படங்களில் நடித்தவர். "சக்ரவர்த்தி திருமகள்", "உத்தமபுத்திரன்", "குலேபகாவலி", "அலிபாபாவும் 40 திருடர்களும்", "கற்புக்கரசி", "மங்கையர் திலகம்", "அமரதீபம்", "கல்யாண பரிசு", "எங்கவீட்டு பிள்ளை" உள்பட 800 படங்களுக்கு அதிகமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

டூப் மாஸ்டர்

குறிப்பாக, "கல்யாணப்பரிசு" படத்தில் எதற்கெடுத்தாலும் பொய் சொல்லும் டூப் மாஸ்டராகத் தோன்றி ரசிகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார். தமிழ்ப்படங்களில் வந்த 10 சிறந்த நகைச்சுவைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்தால், அதில் "கல்யாணப்பரிசு" தங்கவேலுவின் நகைச்சுவை நிச்சயம் இடம்பெறும்.

நாடகக்குழு

சொந்த நாடகக்குழுவின் மூலம் "மனைவியின் மாங்கல்யம்", "விமலா", "பம்பாய் மெயில்", "லட்சுமிகாந்தன்" உள்பட பல நாடகங்களில் நடித்தார். இவர் கடைசியாக நடித்த நாடகம் கோவை ஒண்டிப்புதூரில் நடைபெற்ற "சத்தசுவரங்கள்" என்ற நாடகம்.

தி.மு.க. மாநாட்டில் 

1994-ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பிறகு 25-9-1994 அன்று சிறந்த நாடக நடிகர்-நடிகைகளுக்கு மைலாப்பூர் அகாடமி சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

தூக்கத்திலேயே மரணம்

தங்கவேலு சென்னை தியாகராயநகரில் உள்ள ராஜாபாதர் தெருவில் வசித்து வந்தார். 27-9-1994 அன்று இரவு 8 மணி வரை குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கைக்கு சென்றார். நள்ளிரவு 2 மணிக்கு எழுந்து சிறிது நேரம் விழித்திருந்து விட்டு மீண்டும் உறங்கச் சென்றார். 
அதிகாலையில் (28-ந்தேதி) 6 மணி அளவில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மரணம் அடைந்தபோது அவருக்கு வயது 77.

கருணாநிதி இரங்கல்

தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரில் சென்று தங்கவேலு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அறிவிக்கப்பட்டது. தங்கவேலு மறைவையொட்டி தி.மு.கழக தலைவர் கருணாநிதி விடுத்த அனுதாப செய்தியில் கூறி இருந்ததாவது:-

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவராக கலைவாணர் மறைந்த பிறகு அவர் வகித்த கலை உலகின் இடத்தை நிறைவு செய்து கொண்டிருந்த நகைச்சுவை வேந்தராக, கழகத்தின் மீதும், கழக முன்னணியினர் மீதும் எந்த நிலையிலும் நீங்காத பற்றுடையவராகவும் திகழ்ந்த தங்கவேலு அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு திடுக்கிட்டு அதிர்ந்து போனேன்.

ஜுலை 29, 30, 31-ல் மதுரையில் நடைபெற்ற கழக மாநாட்டில் கலந்து கொண்டு இரு நாட்களும் தங்கியிருந்து, மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும் அந்த உரையில் இருந்த உறுதியையும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில் என்னுடன் கலந்து கொண்டு உணர்ச்சி மேலிட அவர் பேசியதையும் எப்படி மறக்க முடியும். 

அவரது இழப்பால் கலையுலகம் மட்டுமல்ல. கழகமும் பெருந்துயருக்கு உள்ளாகியிருக்கிறது. நானோ மனம் மிகவும் நொந்து போயிருக்கிறேன். மறைந்த தங்கவேல் அவர்களின் குடும்பத்தாருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும், நண்பர்கள், உற்றார் உறவினர்களுக்கும், குறிப்பாக அவரது துணைவியார் சரோஜாவுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறி இருந்தார்.

குடும்பம்

தங்கவேலுவின் முதல் மனைவி பெயர் ராஜாமணி அம்மாள். அவருக்கு 2 மகள்கள். 2-வது மனைவி நடிகை எம்.சரோஜா. அவருக்கு ஒரே மகள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது

Thanks to Malaimalar.com

டி.எஸ்.பாலையா

டி.எஸ்.பாலையா

வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 40 ஆண்டுகள் கொடி கட்டிப் பறந்த டி. எஸ். பாலையாவுக்கு எம். ஜி. ஆரின் முதல் திரைப்படமான ‘சதிலீலாவதி’ தான் முதல் படம். 1934 ல் வெளிவந்த இந்தப் படத்தில் வில்லனாக பாலையா அறிமுகமானார். அப்போது பாலையாவுக்கு 20 வயது.

1937 ஆம் ஆண்டு எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’ படத்தில், தளபதியாக (வில்லன்) டி. எஸ். பாலையா நடித்தார். ஆரம்ப காலத்தில் பாலையாவுக்கு புகழ் தேடித்தந்த படம் இது. இதில் பாகவதரும், பாலையாவும் கத்திச் சண்டை போடும் கட்சி உண்டு.

உலகப்போரை பின்னணியாக வைத்து மொடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்து ‘சித்ரா’ படத்தில் டி. எஸ். பாலையா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி கே. எல். வி. வசந்தா, பாலையா கதாநாயகனாக நடித்த மற்றொரு படம் ‘வெறும் பேச்சல்ல’ 1956 ல் வெளியான இப்படத்தில் பாலையாவுக்கு கெளபோய் வேடம். அவருக்கு ஜோடி பத்மினி!

அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் கதாநாயகன் கே. ஆர். ராசாமியின் நண்பனாக, முக்கிய வேடத்தில் பாலையா நடித்தார். அண்ணாவின் ‘ஓர் இரவு’ படத்தில் வில்லனாக நடித்தார்.










எம். ஜீ. ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘ராஜகுமாரி’ இப்படத்தில் வில்லனாக பாலையா நடித்தார். இப்படத்தில் எம். ஜீ. ஆரும், பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிகப் பிரபலம், தொடர்ந்து எம். ஜி. ஆர். படங்களிலும் சிவாஜிகணேசன் படங்களிலும் வில்லனாக நடித்தார்.
இதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஸ்ரீதர் தயாரித்த முழு நீள நகைச்சுவை படமான ‘காதலிக்க நேரமில்லை’ பாலையாவின் சிறந்த நகைச்சுவை நடிப்புக்கு எடுத்துக்காட்டு. இப்படத்தில் ஒரு திகில் கதையை நாகேஷ் கூற அப்போது பாலையா காட்டும் முகபாவம் இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று.

‘திருவிளையாடல்’ படத்தில் வடநாட்டு பாகவதராக நடித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் தவில் வித்து வானாக நடித்தார். பாகவதர், சின்னப்பா, எம். ஜி. ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் ஆகிய சூப்பர் ஸ்டார்க ளுடன் இணைந்து நடித்த பாலையா 40 ஆண்டுகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடனம் மட்டுமே ஆடிவந்த லலிதா - பத்மினி சகோதரிகள் முதன் முதலாக ‘பிரசன்னா’ என்ற மலையாள படத்தில் நடித்தனர்.












பட்சிராஜா தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் பாலையா, டி. எஸ். பாலையாவின் குடும்ப மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள் முதல் மனைவி பெயர் பத்மாவதி, இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள், 2வது மனைவி பெயர் லீலா (இவர் டி. எஸ். பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்) 4 மகள்கள், 2 மகன்கள் 3வது மனைவி பெயர் நவநீதம் இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்கா இவருக்கு மனோகரி என்ற மகள்.

சென்னை தி நகரில் வசித்து வந்த டி. எஸ். பாலையாவுக்கு 61 வயது நிரம்பிய போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 21.12.1972 அன்று காலமானார்.

பாலையாவுக்குப் பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார்.

பாக்யராஜ் பற்றி சுவையான சிறு குறிப்புகள்

பாக்யராஜ் 

இந்திய சினிமாவின் 'திரைக்கதை ஜித்தன்’ கே.பாக்யராஜ். பாக்ஸ் ஆபீஸ் வசூல், ரசிகர்களின் விசில் இரண்டும் சம்பாதிக்கும் திரைக்கதைகள் புனையும் கலைஞன். 'மிடாஸ் டச்’ இயக்குநரின் வாழ்க்கையில் இருந்து...
ஈரோட்டில் கோஷா ஆஸ்பத்திரியில் பிறந்த தேதி – ஜனவரி 7. இரண்டு அண்ணன்களுக்குப் பிறகு கடைசித் தம்பி!
முதல் வகுப்பையே அவரது தாத்தா கட்டாயத்தின் பேரில் இரண்டு தடவை படித்தார். பி.யூ.சி ஃபெயில் ஆன பிறகு, சென்னைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார்!
இதுவரை இயக்குநராகவும், நடிகராகவும், கதாசிரியராகவும் 57 படங்களில் பணியாற்றி இருக்கிறார். 'மெளன கீதங்கள்’, 'தூறல் நின்னு போச்சு’, 'முந்தானை முடிச்சு’, 'அந்த 7 நாட்கள்’ போன்ற படங்களின் திரைக்கதைகள் அபாரமானவை!
'16 வயதினிலே’, 'கிழக்கே போகும் ரயில்’, 'சிகப்பு ரோஜாக்கள்’ படங்களில் சிறு வேடங்களில் நடித்த பாக்யராஜை, 'புதிய வார்ப்புகள்’ ஹீரோவாக அறிமுகம் செய்தவர் அவரது குரு பாரதி ராஜா!
'புதிய வார்ப்புகள்’ படத்தில் 'உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா’ என ஒரு பெண் கேட்பார். 'நான் அநாதைங்க, அப்பா-அம்மா உயிரோடு இல்லை!’ என வசனம் பேசுவார் பாக்யராஜ். அந்தப் படம் வெளியாவதற்கு 10 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் பாக்யராஜின் அம்மா. இன்னும் அந்தப் படத்தின் அந்தக் காட்சியைக் கடக்க நேர்ந்தால், கண்ணீர் கட்டும் பாக்யராஜீக்கு!
ஏவி.எம்.நிறுவனத்தினர், அவர்களது ஆஸ்தான இயக்குநர்களான ஏ.சி.திருலோக சந்தர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரை வைத்து தான் அப்போது படங்கள் தயாரித்துக் கொண்டு இருந்தனர். முதன்முதலாக அந்தப் பழக்கத்தை விடுத்து, 'முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்தது!
இயக்குநர் ஆவதற்கான முயற்சிகளின்போது அறிமுகமான நடிகை பிரவீணா. அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தபோது, இருவருக்கும் இடையே பூத்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆனால், அடுத்த சில வருடங்களில் நோயுற்று இறந்துவிட்டார் பிரவீணா!
'ராஜா’ எனச் செல்லமாக அழைக்கும் பிரவீணா அளித்த 'ஆர்’ எழுத்து பதித்த மோதிரம் எப்போதும் பாக்யராஜ் விரலில் மின்னும் இடையில் அந்த மோதிரம் தொலைந்துபோக அதே டிசைனில் மோதிரம் அளித்த பூரிணிமா!
பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்.மூத்த மகன் சாந்தனு தமிழ், மலையாள சினிமாக்களின் அங்கீகாரத்துக்கு உழைத்துக்கொண்டு இருக்கிறார் 'பாரிஜாதம்’ படத்தில் அறிமுகமான மகள் சரண்யா, தற்போது நகைகள் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறார்!
பாக்யராஜ்-பூர்ணிமா திருமணத்தை கருமாரி அம்மன் கோயிலில் நடத்திவைத்தவர் எம்.ஜி.ஆர். கூடவே இருந்து ஆசீர்வதித்தவர் சிவாஜி. இரண்டு திலகங்களுக்கு சேர்ந்து அபூர்வமாக நடத்திய திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்!
தேனிலவு செல்லக்கூட நேரம் இல்லாமல் பரபரப்பாக இருந்தவர். வருடங்கள் கழித்து தன் குழந்தை, மைத்துனரோடு பெரிய பட்டாளமாகச் சென்று தேனிலவு கொண்டாடியதை இன்றும் சிலாகித்து ரசிப்பார்!
தமிழகத்தின் மிகப் பெரிய தியேட்டர் மதுரை தங்கம். அங்கு 100 நாட்கள் ஓடிய படம் எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்’ அதற்குப் பிறகு, 100 நாட்கள் ஓடிய படம் பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு’!
'ஆக்ரி ராஸ்தா’, 'பாபா தி கிரேட்’, 'மிஸ்டர் பச்சாரா’ என மூன்று இந்திப் படங்கள் இயக்கி உள்ளார். இவருடைய பல திரைக்கதைகளை இந்திப் படங்களில் நடித்து ஸ்டார் அந்தஸ்து எட்டியவர் அனில்கபூர்!
திருமணப் பரிசாக எம்.ஜி.ஆர் வழங்கிய ஆள் உயரக் குத்துவிளக்குகள் இரண்டு பாக்யராஜ் வீட்டு பூஜை அறையை அலங்கரிக்கின்றன. அதை எம்.ஜி.ஆரே பாக்யராஜ் வீட்டில் இறக்கிவிட்டு, வரவேற்புக்கு வந்தாராம்!
”நான் 'சுட்டு’ எடுத்த படம் 'வீட்ல விசேஷங்க’ மட்டும்தான், மற்றபடி எல்லா படங்களும் என் சொந்தக் கற்பனை!’’ என்பார் துணிச்சலாக!
'மன்ற முரசு’ இதழின் ஆண்டு விழாவில், பாக்யராஜ்தான் என்னுடைய கலை வாரிசு!’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தது, அரசியல் அரங்கில் பெரும் அதிரிச்சி அலைகளை உண்டாக்கின!
சினிமாவின் நெருங்கிய நண்பர், ரஜினி! திடீரென்று கிளம்பி எங்கேனும் நல்ல ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருப்பார்கள்!
பிரவீணா, ரதி, ஊர்வசி, ராதிகா, சுமதி, பூர்ணிமா, சரிதா,அஸ்வினி, ஷோபனா, சுலக்‌ஷணா, பிரகதி, ராதா, பானுப்ரியா,ரோகிணி,ஜஸ்வர்யா,நக்மா என ஏராளமான நடிகைகளோடு ஜோடியாக நடித்த இயக்குநர்- நடிகர் இவராகத்தான் இருப்பார்!
கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் வழக்கம் இல்லை. திருமண நாள் அன்று மட்டும் தவறாமல் கருமாரி அம்மன் கோயிலுக்குச் செல்வார்!
பாக்யராஜ் படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தது 'தூறல் நின்னு போச்சு’, 'டார்லிங் டார்லிங்’ படத்தில் வில்லனை நீ அடிச்சிருக்கணும்!’’ என்று அவரிடம் குறைபட்டாராம் எம்.ஜி.ஆர்!
நடிக்க ஆசைப்பட்டு வந்த பார்த்திபனை இயக்குநர் ஆக்கி அழகு பார்த்தார் பாக்யராஜ். அவரது புகழ் பெற்ற சிஷ்யர்களில் பாண்டியராஜன், லிவிங்ஸ்டனும் உண்டு!
ஒரு முறை ராஜ்கபூரிடம், பாக்யராஜை அறிமுகம் செய்து இருக்கிறார் போனிகபூர், 'உன்னைத் தெரியுமே, 'டார்லிங் டார்லிங்’ பார்த்திருக்கேன். சூப்பர்!’ என்று ராஜ்கபூர் சொன்னபோது, நெகிழ்ந்து இருக்கிறார் பாக்யராஜ்!
பாக்யராஜ் இசையமைப்பாளராகவும் ஆறு படங்கள் பணியாற்றியிருக்கிறார். 'ஆராரோ ஆரிரரோ’ படத்தில் இவர் இசையில் உருவான 'என் கண்ணுக்கொரு நிலவா உன்னைப் படைச்சான்’ பாடல் ஜானகியின் மனம் கவர்ந்த பாடல், அதற்காக ஜானகி பரிசளித்த பேனாவை ஞாபக அடுக்கிலும், அலமாரி அடுக்கிலும் பாதுகாத்துவைத்திருக்கிறார் பாக்யராஜ்!
பாக்யராஜீக்கு மிகவும் இஷ்டமான வகுப்பு ஆசிரியர் பெயர் சண்முகமணி, அவரை நினைவு கூரும் விதமாகத்தான் 'புதிய வார்ப்புகள்’, 'சுந்தர காண்டம்’ எனத் தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஆசிரியருக்கு 'சண்முகமணி’ என்று பெயர் சூட்டுகிறார். அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட அந்த ஆசிரிருடன் இன்னமும் தொடர்பில் இருக்கிறார் பாக்யராஜ்!
சிவாஜியை வைத்து 'தாவணிக்கனவுகள்’ இயக்கித் தன் தாகத்தைத் தணித்துக்கொண்டார். ஆனாலும், நண்பர் ரஜினிகாந்த்தை வைத்து முழு திரைப்படம் இயக்கியது இல்லை என்ற ஆதங்கம் இப்போதும் உண்டு. இன்னும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் பாக்யராஜ்!
தொகுத்து வழங்குபவர் 
திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி
ஆனந்த விகடன்

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்பதன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க்கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம் 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய்யர்தான்' என்பார்!
ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937), கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979), சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!
'உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப் பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போக முடியும்?' என்று கேட்டார்!
நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். 'நேற்று பேடிகள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதிவைப்பார்!
எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளாகத்துக்குப் போய் விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. 'நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?' என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந்தது!
'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்.... நான் சென்ஸ்' - இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்!
'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது. 'எதிர்ப்பில்தான், மக்கள் எதை விரும்புகிறார்களோ... அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் 'என்றார்!
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பிவை!
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி' என்று அழைத்துப்பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!
''திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!
தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். ''போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா'' என்பது அவரது அழுத்தமான கருத்து!
விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!
'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
''சுட்டாள்.... சுட்டான்..  சுட்டேன்'' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!
''தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்'' என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்!
தொகுத்து வழங்குபவர் 
திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி
ஆனந்த விகடன்