நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
சாதி, மத, இன, மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.
நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.
விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.
இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.