மொத்தப் பக்கக்காட்சிகள்

11/08/2011

தீபாவளி : இப்படியும் கொண்டாடலாம் !



ஊரெங்கும் வெடிக்கும் பட்டாசுகள், சாலைகளெங்கும் பறந்து திரியும் காகிதக் குப்பைகள், காற்றுடன் கைபிடித்துத் திரியும் கரிய புகை, வீட்டுக்கு வந்து சேரும் பலகாரங்கள், விடியல் முதல் இரவு வரை தொலைக்காட்சியில் சிரிக்கும் அரிதார முகங்கள்,  புத்தம் புதிதாய் காத்திருக்கும் பட்டாடை இவற்றைத் தவிர தீபாவளி என்றவுடன் என்னென்ன நினைவுக்கு வருகின்றன ?
இதைத் தவிர தீபாவளிக்கு வேறென்ன நினைவுக்கு வரவேண்டும் என நினைக்கிறீர்களா ?
 இந்த தீபாவளியை எப்படி வித்தியாசமாகக் கொண்டாடவேண்டும் என யோசிக்கிறீர்களா ? இதை முயன்று பாருங்களேன்.
 சில நிமிடங்களில் வெடித்தும், எரித்தும் கரைக்கும் பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ, இல்லாத ஏழைகளுக்கோ வழங்கிவிடுங்கள். ஏழையின் சிரிப்பில் நரகாசுரன் அழிவான்.
• பலகாரங்களை இந்த முறை உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களை கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஏழைகளின் குடிசைக் கதவைத் தட்டி பலகாரம் கொடுத்து மனிதத்தின் ஆழத்தை அறிவியுங்கள்.
• விழா நாட்கள் உறவுகளைப் பலப்படுத்தும் நாட்களாக இருக்கட்டும். உங்கள் குடும்பத்தில் யாரோடேனும் மனத் தாங்கல் இருந்தால் இந்த விழா நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று உறவை மீண்டெடுத்துக் கொள்ளுங்கள்.
• குடும்பத்தினரோடு இந்த தீபாவளிக்கு ஒரு அனாதை இல்லத்தைச் சென்று சந்தியுங்கள். உங்கள் நேரத்தைச் செலவழியுங்கள்.
• தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அருகில் இருக்கும் குடும்பத்தினரும் முழு நேரமும் பேசுங்கள். நீங்கள் இழந்து கொண்டிருப்பது என்ன என்பது புரிய வரும்.
• நீண்ட நாட்களாக பேசாத நண்பர்கள் உறவினர்களை அழையுங்கள்.  யாரிடமேனும் சண்டையிட்டுப் பிரிந்திருக்கிறீர்களெனில் அவர்களை முதலில் அழைத்து வாழ்த்துச் சொல்லி நட்பைப் புதுப்பியுங்கள்.
• விழாக்கள் உறவுகளை வளர்க்க வேண்டும். பிறரைப் புண்படுத்துவதற்காக விழாக்களை எப்போதுமே பயன்படுத்தாதீர்கள்.
• விழா நாட்கள் என்றாலே சுற்றுப் புறத்தை மாசுபடுத்துவதற்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கருதாதீர்கள். சுற்றுப் புறத்தைத் தூய்மையாய் வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
• விழா நாளில் உங்களுக்குத் தெரிந்த ஏதேனும் முதியவர் தனிமையில் இருந்தால் குடும்பத்துடன் அங்கே சென்று அவர்களுடன் உங்கள் நாளைச் செலவிடுங்கள்.
• ஏற்கனவே இருளில் தடவி நடக்கும் சூழல் நமது. மின்சாரத்தைச் சிக்கனமாய்ச் செலவழியுங்கள்.
• நீங்கள் வெடிக்க நினைக்கும் பட்டாசுகளை எதிர் சேரியிலிருந்து ஆவலுடன் எட்டிப்பார்க்கும் குழந்தைகளின் கைகளில் கொடுத்துவிடுங்கள். அவர்கள் புன்னகை மத்தாப்புக்களில் விழா கொண்டாடுங்கள்.
விழா நாட்கள் மனிதம் விழா நாட்களாக அமைவதே எந்த ஒரு விழாவுக்கும் சிறப்பானதாய் இருக்க முடியும்.  இந்த விழா நாள் அதற்கான முதல் சுவடை உங்கள் இல்லங்களில் எடுத்து வைக்கட்டும்.
அனைவருக்கும் இதயம் நிறை தீபாவளி நல்வாழ்த்துக்கள்

யாரது, சொல்லாமல் நெஞ்அள்ளி போவது!! சிறுகதை


  
சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த காலம் அது.அலுவலகத்தில் 40 % பெண்களே. அவ்வப்போது எதாவது கிறுக்கி (எழுதி ) காட்டுவேன்.
அதில் அனைவருக்கும் ஒரு சந்தோசம். உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது. படைக்க தெரிந்தவர்களை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அந்த அலுவலகத்திலும் ஒருத்தி இருந்தாள் அவள் பெயர் நிலா.... மாநிறம், பூசினார் போல தேகம், அறிவும், திறமையும், பொறுமையும், பரிவும், நிதானமும் கலந்த கலவை அவள். லேசான சுருட்டை முடி. அதில் ஒன்றிடண்டு முன்னால் வந்து நிற்கும். அரிதாரம் பூசாத முகம் அவளின் சிறப்பு. சுற்றி இருக்கும் காட்டன் புடவை அவளை சுமக்கிறதா இல்லை அவள் புடவையை சுமக்கிராளா பாப்பையாவை வைத்து பட்டி மன்றமே நடத்தலாம் . அதிராத பேச்சு, நிதான நடை, பளிச் என்ற ஒரு தூய்மை. யாரையும் புண் படுத்தாத மனம்.நான் தேடிய மணியன் செல்வம் ஓவியம் அவள். அவளை நல்ல அழகு என்று சொன்னால் அது பிழை. அதையும் தாண்டி வார்த்தை தேடுகிறேன்.


ஒருமுறை கதிரவனில் புகைப்பட கவிதை போட்டி.எனக்கும் அவளுக்குமான சம்பவங்களை கோர்த்து எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன்.
 பதட்டம் உடலிலும் மனதிலும். அலுவலக இளசுகள் ட்ரீட் கேட்க அனைவரும் அருண் ஐஸ் கிரீம் பார் சென்றோம். வட்ட மேசை சுற்றி அமர்ந்து இருந்தோம். என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். அவள் தின்ற பாதி இப்பொழுது என் முன்னே. எழுந்து நின்று ஆர்பரிக்க வேண்டும் போல தோன்றியது. முதல் காதல் அது ஏற்று கொண்ட தருணம். வானத்தில் இருந்து என்மேல் மட்டும் மழை பொழிவது போல இருந்தது.காதலித்து பாருங்கள் பட்டென்று பத்து வயது குறைந்து விடும்.


காதல் சுகம் கிடைக்காத மனிதன் உலகில் பாவப்பட்ட ஜீவராசி. காதல் ஒரு அபூர்வ உணர்வு. வரலாற்று ஆசிரியர்கள் போர்களங்களை எவ்வளவு பதிந்தார்களோ அதற்க்கு சமமாய் காதலையும் பதிந்தார்கள். உண்மையான காதல் துணை நினைத்தாலே உடலும் மனதும் பூரிக்கிறது. அலுவலகம் சுகமானது.விடுமுறையை வெறுக்க தோன்றியது. ஆணையும் பெண்ணையும் சேர்த்து படைத்த இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றி.


மூன்று தங்கைகளுக்கு அக்காள் அவள். தனியார் வேலைக்கு சைக்கிள் ஓட்டிச்செல்லும் தந்தை. . சாலிகிராமத்தில் ஒரு சாதாரண குடும்பம் அவளுடையது. கனவு எல்லோருக்கும் சொந்தம்.காதலும் எல்லோருக்கும் சொந்தம். இதில் ஏழ்மை எங்கிருந்து வந்தது. நாங்களும் வாழ்ந்தோம் சந்தோஷ காதலர்களாய். பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.


காதல் பூத்து ஒரு வருடம் தாண்டி இருக்காது,ஒரு இரவு பொழுதில் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அலுவலக நண்பர்" நிலா தந்தை இறந்துவிட்டார் மருத்துவமனை வா "என்று. பதறினேன்.மருத்துவமனை சென்றேன். என்ன சொல்வேன் அவளிடம். இது காலில் அடிபட்ட புண்ணா சரியாகிவிடும் என்று சொல்ல. தீராத வலி. வீட்டில் ஆண்கள் இல்லாததால் அலுவலக நண்பர்கள் எல்லா வேலையும் செய்தோம். வீடு வெறிச்சோடியது. அழுகை நிரந்தரமானது. சிறிது நாட்கள் வேலைக்கு வரவேண்டாம் என அலுவலகமும் அலுவலக நண்பர்களும் பண உதவி செய்தார்கள். தினமும் வீடு சென்று வந்தேன். என்னால் ஆனவற்றை செய்தேன்.இப்பொழுது புதிதாய் நிறைய உறவினர்கள் முளைதிருந்தார்கள்


வந்தான் எதிரி சித்தப்பா ரூபத்தில்.நல்ல வரன் என்றும், எதுவும் தரவேண்டாம் என்றும், குடும்பத்தை பார்த்து கொள்வான் என்றும் இன்னும் நிறைய என்றும் என்றும் சொல்லி எங்கள் காதலை தீயிட்டு கொளுத்தினான். இப்பொழுது என்ன அவசரம் என்றாள் " ஆம்பிள்ளை இல்லாத வீடு" என்றார். இப்பொழுது அழுகையுடன் வீட்டில் சண்டையும் சேர்ந்தது. அவள் அம்மா நோய்வாய் பட்டாள்.
ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன். வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.


காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

செல்லமே! சிறுகதை




கிணற்றடியில் துணிகளைத் துவைத்துக்கொண்டு இருந்தாள் திலகா, அந்த வீட்டுச் சின்ன மருமகள். பக்கத்தில், தேய்க்க வேண்டிய பாத்திரங்கள் நிறைய!

கைக்கெட்டுகிற தூரத்தில் வாஷிங் மிஷின்! அது மட்டுமா? ஃபிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், கலர் டி.வி-னு எல்லாம்தான் இருக்கு. ஆனால் எல்லாம் பணக்காரப் பெரிய மருமகள் பானு கொண்டு வந்ததாச்சே! எப்படி உரிமையோடு எடுத்து உபயோகிக்கமுடியும்?

அதுதான், இந்த ஒண்ணரை வருஷமாகத் துணி துவைக்கற கல்லோடும் அம்மிக்கல்லோடும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள் திலகா.

மறுநாள் காலை... விடாமல் தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, குளித்துக் கொண்டிருந்த திலகா அவசர அவசரமாகத் துணிகளைச் சுற்றிக்கொண்டு ஓடிவந்தாள்.

குழந்தை அலறிக்கொண்டிருக்க, பக்கத்தில் சாவகாசமாக அமர்ந்து டி.வி. பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"இப்படிப் பச்சைக் குழந்தையை யாராவது அலற விடுவாங்களா? கொஞ்சம் குழந்தையைத் தூக்கிச் சமாதானப்படுத்தக்கூடாதா?" ..பொருமலுடன் கேட்டாள் திலகா.

"எடுத்துக் கொஞ்சி, சமாதானப்படுத்தி இருப்பேன் திலகா. ஆனா, குழந்தை இல்லாத நான், உன் குழந்தையைத் தொட்டுத் தூக்கினா உனக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ! நீதான், நான் கொண்டு வந்த எதையுமே தொடுறது இல்லையே!, சரி, இப்ப நீயே சொல்லிட்ட இல்ல... இனிமே எனக்கென்ன தயக்கம்!" என்ற பானு, "என் செல்லமே! அழாதடி! பெரியம்மா இருக்கேன்டி உனக்கு!" என்றபடி குழந்தையை வாரியணைத்து முத்த மழையால் குளிப்பாட்டினாள்.

கை மேல் பலன் சிறுகதை


கண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.


தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.


அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.


பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"


நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.


அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.


ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?


நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

உபதேசம் (சிறுகதை)


மனைவியிடம் கோபமாய் மறுத்தார் வாத்தியார் வேதாசலம்.

வாஷிங்மெஷினா? திடீர்னு பத்தாயிரத்துக்கு எங்கே போறது? உன் புருஷன் ஒண்ணும் கை நிறைய சம்பளம் வாங்கற கவர்ன்மெண்ட் ஸ்கூல் வாத்தியார் இல்லை. அதெல்லாம் இப்ப வாங்க முடியாது."


"வர வர என்னால துணியே தோய்க்க முடியலைங்க...கையெல்லாம் வலிக்குது. வாசுகி வீட்ல கூட தவணை முறையில் வாங்கிட்டாங்க. அதுக்குக்கூடவா உங்களால முடியாது? எப்பப் பார்த்தாலும் பஞ்சப்பாட்டு பாடறீங்களே"...கோபமாய் பொரிந்தாள் மனைவி அகிலா.


"இதோ பார்... எப்பவும் மேலே இருக்கிறவங்களைப் பார்த்து பொருமிக்கிட்டிருக்காதே! நம்மளை விட கீழே இருக்கிறவங்களை கொஞ்சம் நினைச்சுப் பாரு! குடிசையிலும் பிளாட்பாரத்திலும் ஒரு வேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாம எத்தனை பேர் வாழறாங்க. நமக்காவது சொந்தத்தில் ஒட்டு வீடு இருக்கு. அதை நினைச்சு ஆறுதல் பட்டுக்கோ. வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ்ன்னு வீணா ஆசையை வளர்த்துக்காதே!" என்று மனைவியின் வாயை அடைக்கவும் வாசலில் "சார்" என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது.


டியூசனுக்கு வந்த இரண்டு பையன்களையும் முன் அறையில் உட்கார வைத்தார் வேதாசலம்.


"என்னடா பாலு ...டெஸ்ட் பேப்பர் தந்துட்டாங்களா? கணக்கில் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கே?"


தயக்கத்துடன் பேப்பரை நீட்டினான் பாபு. " அறுபத்தோரு மார்க் சார்."


"என்னடா இவ்வளவு குறைச்சலா வாங்கியிருக்கே! தொண்டைத் தண்ணீர் வறண்டு போற அளவுக்கு தினமும் உங்களுக்கெல்லாம் சொல்லித் தர்றேன். அட்லீஸ்ட் தொண்ணூறு மார்க்காவது வாங்க வேண்டாமா?"


"கிளாஸ்ல நிறையைப் பேர் நாற்பதை தாண்டலை சார்."


"எப்பவும் கீழே பார்க்காதேடா, மேலேதான் பார்க்கணும். உனக்கு மேலே எத்தனை பேர் அதிகமா மார்க் வாங்கியிருக்காங்க. அவர்களை விட அதிகமா மார்க் வாங்கிக்காட்டணும்னு மனசுல ஒரு வெறி இருக்கணும். அப்போதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். புரிஞ்சுதா?"


நிமிர்ந்த வேதாசலத்தின் பார்வை கதவுக்கருகில் சென்றது . அங்கே உஷ்ணப் பார்வையை வீசியபடி நின்றிருந்த அகிலாவைப் பார்த்ததும் நெஞ்சுக்குள் கத்தி இறங்கியது மாதிரி சட்டென்று ஒரு குற்ற உணர்ச்சி.


"எப்பாடு பட்டாவது அடுத்த மாதத்திற்குள் அகிலாவுக்கு வாஷிங் மெஷின் வாங்கித் தந்துடணும்" ... தீர்மானித்தார் வேதாசலம்.