மொத்தப் பக்கக்காட்சிகள்

11/07/2011

சர்க்கரை’: காலணி இல்லாமல் நடக்காதீர்கள்

சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் கால்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வீட்டுக்குள் நடமாடும்போதுகூட வெறுங்காலோடு நடக்காதீர்கள். காலணி அணிவது நல்லது. ஏனெனில் பாதங்களில் உணர்ச்சி குறைந்தாலோ எங்காவது இடறி காயம் பட்டாலோ உணர முடியாது.

பாதங்களில் ஏதேனும் கொப்புளங்கள், வெடிப்புகள், கீறல்கள், தோலுரிவது, நிறம் மாறுவது ஏற்பட்டிருக்கிறதா என்று தினமும் சோதனை செய்து பாருங்கள். குறிப்பாக விரல் இடுக்குகளைக் கவனியுங்கள்.
தினமும் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10நிமிஷங்கள் பதிய வையுங்கள். நீரின் வெது வெதுப்பை முழுங்கையால் உணர்ந்து பாருங்கள். ப்யூமிக் ஸ்டோன் கொண்டு கடினமான பாதங்களை மெல்ல தேயுங்கள்.


பின் இரு பாதங்களையும் சோப் கொண்டு கழுவுங்கள். நன்றாக உலர்த்திய பின் குதிகாலைச் சுற்றி எண்ணெய்ப் பசை கொண்ட நல்ல கிரீமைத்தடவுங்கள்.


உடல் முழுவதையும் கால் தாங்குகிறது. எனவே காலில் அழுத்தம் அதிகம். வாகனங்களுக்கு “ஷாக் அப்சார்ஃபர்’ உள்ளதுபோல் அழுத்தத்தைத் தாங்க பாதங்களுக்கு உதவ சிறப்புக் காலணிகளை (எம்சிஆர் காலணிகள்) அணியுங்கள். ஈரமான காலணிகளை அணியாதீர்கள்.
காலில் ஆணியோ தடிப்பான தோலோ வளர்ந்தால் நீங்களே அதை வெட்டியெறிய முயற்சிக்காதீர்கள்.மருத்துவரிடம் செல்லுங்கள். பாதங்களின் மேல் ஒத்தடம் தருவதற்காக சுடுநீர் பாட்டில்களையோ உஷ்ணப் பைகளையோ வைக்காதீர்கள்.


புகை பிடிப்பதை விட்டு விடுங்கள். புகையிலை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கி கால்களுக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைகிறது.இதனால் இறுதியில் காலையே இழந்துவிடக் கூடிய அபாயம் ஏற்படக்கூடும்.
நகம் வெட்ட கத்தரிக்கோல், பிளேடு, நகம் வெட்டி, கத்தி போன்றவற்றை அறவே பயன்படுத்தக் கூடாது. நகத்தை வெட்டாமல் “அரம்’ கொண்டு
தேய்த்துக் குறைப்பது நல்லது.


தரையில் படுத்து உறங்காதீர்கள்.பூச்சிகளும் எலி போன்றவைகளும் காலைக் கடிக்கும் ஆபத்து உண்டு. தரையில் அமரும்போது கால்களைக் குறுக்குவாட்டாக வைத்துக் கொள்ள வேண்டாம்.ஏனெனில் இப்படி அமர்வதின் காரணமாக நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்களின் மீது அழுத்தம் ஏற்படலாம். எப்போதும் நாற்காலியில் உட்காரப் பழகுங்கள்.
வீட்டில் வெறுங்காலில் இருட்டில் நடக்காதீர்கள்.வெளிச்சத்தில் நடக்கலாம்.அதிக சூடு அல்லது கடும் குளிர்ச்சி இரண்டையும் தவிர்க்கவும். சூடான இடங்களில் கால் வைக்காதீர்கள்.இரவில் பாதங்கள் குளிரால் ஜில்லென்று ஆகிவிட்டால் பருத்தி அல்லது கம்பளி காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.


ஷு போடும் போது நூறு சதவீதம் பருத்தியிலான காலுறைகளை அணிவதே நல்லது.அவை பாதங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். எப்போதும் தோல் ஷுக்களையே அணியுங்கள். காலணிகள் சரியான அளவில் இருப்பது அவசியம். கூரான முனையுள்ள ஷுக்களைத் தவிர்த்துவிடுங்கள்.
தினமும் காலணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஷுகள், காலுறை களைச் சோதித்துப் பாருங்கள். உள்ளே தேவையற்ற பொருள்கள் ஏதேனும் இருக்கக் கூடும். அவற்றை அகற்றிவிடுங்கள். அதேபோல கழற்றும் போதும் ஒரு முறை பாதங்களைக் கவனித்துப் பாருங்கள். கால் தோலின் நிறம் மாறுதல், வலி எடுத்தல், எரிச்சல், ஊசி குத்துவது போன்ற உணர்வு, மத மதப்பு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.

தோள் மூட்டு தேய்மானம்…! புது சிகிச்சை முறை வந்தாச்சு

மூட்டு வலி என்பது,முழங்கால் மூட்டு வலி மட்டும் தான் என்று நினைக்கக்கூடாது; உடலில் ஒவ்வொரு எலும்பு இணைப்பிலும் ஏற்படும் தேய்மானங்களும் மூட்டு பாதிப்பு தான். முழங்கால், முழங் கை, கணுக்கால், இடுப்பு மட்டுமில்லாமல்,தோள் பட்டையிலும் மூட்டு தேய்மானம் ஏற்படும். வயதானவர்களுக்கு,சில நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு இது நிச்சயம் ஏற்படும். விபத்து பாதிப்பாலும் ஏற்படும்.
தோள் பட்டை பாதிப்பு பல வகையில், பல வயதினருக்கு ஏற்படுவதுண்டு. இதில் முக்கியமானது உறைந்த தோள் பட்டை மற்றும் தோள் பட்டை தேய்மானம்.


தோள்பட்டை தேய்மானத்துக்கு நவீன சிகிச்சை முறையில், “மெட்டல் கப்’ பொருத்தி செய்துள் ளார் எலும்பியல் நிபுணர் ஏ.கே. வெங்கடாச்சலம்.


“தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை; சுலபமாக , ரத்தமின்றி, கத்தியின்றி சிகிச்சை செய்யலாம்’ என்கிறார் இவர்.
வயதானவர்களுக்குதோள்பட்டை மூட்டு தேய்மானம்,பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால், முழங்கால் மூட்டு, இடுப்பு மூட்டு தேய்மானம் போல,இதுவும் அவர்களுக்கு சாதாரணமாக வரக்கூடியது தான். விபத்து போன்ற சூழ்நிலையால் இளம் வயதினருக்கு ஏற்படும். இதை சரி செய்ய, தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை செய் வது தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.


வழக்கமாக செய்யப்படும் தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையில் பாதிப்பு இருக்கும். தோள் குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்வதை புதிய முறை மூலம் எளிதில் செய்யலாம்.


இது இளம் தலைமுறையினருக்கு பெரிதும் பயனளிக்கக்கூடியது. வெளிநாடுகளில் செய்யப்படும் இந்த நவீன அறுவை சிகிச்சை இப்போது இந்தியாவில் அறிமுகமாகி வருகிறது.


 வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை செய்து திரும்புகின்றனர். சமீபத்தில், தென் ஆப்ரிக்காவில் இருந்து சலேகா காடூம் என்ற பெண், நாலைந்து ஆண்டு பாதிப்புக்கு பின், சென்னை வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்.


குருத்தெலும்பு வளரும்


தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது. தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள் வளர்ந்து தோள் பட்டை பழைய படி ஆகி விட்டால், “மெட்டல் கப்’பை நீக்கி விடலாம்.


இந்த “மெட்டல் கப்’ எந்தவகையில் பக்க விளைவுகளை ஏற்படுத் தாது. மாறாக, எலும்புகளையும், தசைநார்களையும் வளர அனுமதிக்கிறது. இதன் மூலம், சில மாதங்களுக்கு பின், இயல்பான தோள் பட்டை மீண்டும் உயிர் பெற்று விடுகிறது’ என்றார் டாக்டர் வெங்கடாசலம்.


உறைந்த தோள்


தோள் பாதிப்பு என் றாலே, பல பேருக்கு “உறைந்த தோள்பட்டை’ பாதிப்பு தான் வரும். தோள்பட்டை உறைவது என்றால், ஏதோ உறைந்து போய்விடும் என்று எண்ண வேண் டாம். தோள்பட்டை இறுக்கமாகி, எந்த வகையிலும் தூக்க முடியாமல், பயன்படுத்த முடியாமல் போகும். அதற்கு பெயர் தான் “உறைந்த தோள் பட்டை’ என்பது.


விபத்து போன்ற காரணங்களாலும் ஏற்படும்; சிலருக்கு ஓசைப்படாமல் படிப்படியாக கூட ஏற்படும்.நாற்பது வயதில் இருந்து 65 வயதுள்ளவர்களுக்கு வரும். வீக்கத்தில் ஆரம்பித்து, கையை தூக்க முடியாமல் போகும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு


சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பார்வை பாதிப்பு போன்றவை தான் ஏற்படும் என் றில்லை. தோள்பட்டை உறைவதும் ஏற்படும். எனினும், மிகவும் மோசமாக உள்ள நோயாளிகளில் 20 சதவீதம் பேருக்கு இந்த நிலை ஏற்படும்.


மாதக்கணக்கில் “உறைந்த தோள்’ பாதிப்பு இருக்கும். வலியில் ஆரம்பித்து, போகப் போக தோளை நகர்த்த முடியாமல் போகும். எக்ஸ்ரேயில் தெரிந்துவிடும் என்றாலும், பலருக்கும் முற்றிய நிலையில் தான் அது உணர முடிகிறது.


இந்த பாதிப்பு எட்டு மாதம் வரை தொடரும். அப்போது அதிக வலி தெரியும். சாதாரண பாதிப்பு தான் என்று நினைத்து, அதையும் உணராமல் இருந்து விட்டால், பாதிப்பு அதிகமாக இருக்கும்.


சிகிச்சை எப்படி


சாதாரணமாக பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து சாப்பிட்டு வந்தால் போதும். அத்துடன், பிசியோதெரபி செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால், நிச்சயமாக பாதிப்பு நீங்கும். பல மாதங்களுக்கு இப் படி சிகிச்சை முறை தொடர வேண்டும். இல்லாவிட்டால், மீண் டும் மீண்டும் பாதிப்பு வரத்தான் செய்யும். அதிக பாதிப்பு இருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வெண்டி வரும். அப்போது, பாதிக்கப்பட்ட குருத்தெலும்பு பகுதி நீக்கப்பட்டு சரி செய்யப்படும். இதற்கு “ஆர்த்ரோஸ்கோபிக்’ அறுவை சிகிச்சை முறையில் ஆப்பரேஷன் செய்யப்படும். சிறிய துளையிட்டு, குழாய் செருகப்படும் அதில் பொருத்தப்பட்ட கேமராவில் பார்த்தபடி சிகிச்சை செய்யப்படும்.

கலோரியைக் குறைக்க...

 

How to burn Calories? - Food Habits and Nutrition Guide in Tamil
அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும். அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை "எரிக்க எரிக்க"த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் "ஸ்லிம்"மாக இருக்க முடியும்.
ரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், "சீட்"டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.
"டீன் ஏஜ்" வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், "அடடா, கொழுப்பு கூடிவிட்டதே" என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.
ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை "ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா"படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர்.
உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.
* உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.
* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது,
ஒன்பது கலோரி உள்ளது.
* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.
* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை "எரிக்க" வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் "கொழுப்பாக தேங்கிய" கலோரியை எரிக்க முடியும்.
* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.
அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.
அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த
அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.
எந்த ஜூசில் அதிக கலோரி?
காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.
ஆப்பிள் ஜூஸ் - 55
திராட்சை ஜூஸ் - 55
மாம்பழ ஜூஸ் - 58
ஆரஞ்சு ஜூஸ் - 44
பைனாப்பிள் ஜூஸ் - 52
கரும்பு ஜூஸ் - 36
தக்காளி ஜூஸ் - 17
தேங்காய் பால் - 76
இளநீர் - 24
காபி (ஒரு கப்) - 98
டீ (ஒரு கப்) - 79
கோக்கோ (ஒரு கப்) - 213
பசும்பால் - 65
ஸ்கிம் மில்க் - 35
தயிர் - 51
"ப்ரைடு" உணவுகளா? "டீன்" பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி "ப்ரைடு" அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா?
ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் "வேலையை" காட்டிவிடுமாம்.
இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:
* சில "ப்ரைடு" உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.
* இதை "டிரான்ஸ் ஃபேட்" என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.
* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த "ப்ரைடு" உணவுகளால் ஏற்படும் "டிரான்ஸ் பேட்" எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.
* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

தவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்!

Is Brown Rice Healthier Than White Rice? - Food Habits and Nutrition Guide in Tamil
அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடு களில் மக்களின் அன்றாட உணவாக அரிசிஇருக்கிறது.அரிசி உற்பத்தி யில்மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது.

 அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.


ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.


நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு.ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.


இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும்.


 ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..


எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.


இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.
அதாவது,மாம் பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின் விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம் பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.
தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.


இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர்.தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன் படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.


முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.
இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.


முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.


உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:


உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி,புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர்.நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது
பச்சரிசி.


கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:


* எளிதில் சீரணமடையும்


* மலச்சிக்கலைப் போக்கும்


* சிறுநீரை நன்கு பிரிக்கும்


* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.


* பித்த அதிகரிப்பை குறைக்கும்


* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது


* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.


* சருமத்தைப் பாதுகாக்கும்.


* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.


கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.

சர்க்கரை நோயை வெற்றிகரமாக குணப்படுத்துவதற்கான முன்னோட்டம்

பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள் Type-2 சர்க்கரை நோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.Type-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலீன் பற்றா க்குறையால் வருவதில்லை.மாறாக சுரக்கின்ற இன்சுலீனை செயல்பட விடாமல் உடம்பிலுள்ள செல்கள் அதை எதிர்ப்பதனால் இந்த சர்க்கரை நோய் வருகிறது.நகரவாசிகள் பெரும்பாலும் இப்பொழுது அமர்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்காமல் போய்விடுகிறது.


இது மட்டுமின்றி அளவுக் கதிகமாக செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்றது.ஒரு வரம்பின்றி நாள்தோறும் மக்கள் இத்தகைய உணவுப் பண்டங்களை உண்பதால் ரத்த ஓட்டத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சேர்ந்து விடுகிறது. இதை ஜீரணிப்பதற்காக நம்முடைய உடம்பும் ஏராளமான இன்சுலீனை சுரந்து கொண்டிருக்கிறது. இன்சுலீன் குறைந்தால் செல்கள் பாதிக்கப் படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு இன்சுலீன் அதிகமானாலும் செல்கள் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆகவே இன்சுலீன் அளவு அதிகரிக்கும் பொழுது அதை உள்ளே விடாமல் செல்கள் தடுக்கின்றன. இப்படி குறைவான உடற்பயிற்சி மற்றும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் செல்களைப் பாதிக்க கூடிய அளவிற்கு இன்சுலீன் சுரந்து போதல் அதற்கு உடம்பில் வருகின்ற எதிர்ப்பு என்று இவையெல்லாம் சேர்ந்து Type-2 சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடுகிறது.


இம்மாதிரியான சர்க்கரை நோய் நகரவாசிகளிடையே வேகமாக பரவியும் வருகிறது.இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்ற மாத்திரைகளை உட்கொள்கின்றனர். மருந்தின் விளைவாக சர்க்கரை லெவல் குறையும் பொழுதோ நார்மலுக்கு வரும் பொழுதோ இப்படியே ஆயுள் பூராவும் சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.இனிமேல் உடல் நலத்தை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நோயாளிகள் எண்ணுகிறார்கள்.


ஆனால் இப்படி நம்புவது தவறான நம்பிக்கையாகும். மருந்து, மாத்திரைகள் நோயின் சின்னங்களையும், அறிகுறிகளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அடிப்படைக் காரணங்களான உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை தொடரும் வகையிலும் நோயின் பாதிப்பு தொடரத்தான் செய்யும்.


 இந்த அடிப்படைக் குறைபாடுகளை தீர்க்காத பட்சத்தில் நோயாளி மேலும் மேலும் அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை வரும். இரத்த ஓட்டம், அடர்த்தியாகி வேகமும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இதயம், ஈரல், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் அவைகளுடைய செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் நீண்டகாலம் இருக்கும் பொழுது நோயாளியின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகளுக்கு குறைவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
Dewayne Mcculley என்ற அமெரிக்க என்ஜீனியர் ஒருவருக்கு திடீரென்று Type-2 சர்க்கரை நோய் உருவாகி அவருடைய சர்க்கரை லெவல் கிடுகிடுவென 1300 mg/dl புள்ளிகளுக்கு உயர்ந்து விட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர் பிழைப்பாரென்று யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. இருந்தாலும் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன் உடம்புக்கு திடீரென்று இந்தப் பாதிப்பு எப்படி வந்தது?இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார்
.சர்க்கரை வியாதியைப் பற்றி கிடைத்த தகவல்களையெல்லாம் படித்து அந்த வியாதியைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு வந்துள்ள இந்தக் குறைபாடு தவறான உணவுப் பழக்கங்களாலும், போதிய உடற்பயிற்சியின்மையாலும்தான் வந்திருக்கிறது என்று நம்பினார்.
ஆகவே தன் உணவுப் பழக்கங்களை மாற்ற ஆரம்பித்து தான் சாப்பிடும் கார்போஹைட்ரேட் அளவை பெரும் அளவு குறைத்தார். மாவுச்சத்து மிக்க நன்கு பதப்படுத்தப்பட்ட செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைக் குறைத்தார். இதற்குப் பதிலாக supermeal என்ற ஒரு புது உணவுத் திட்டத்தைத் தயாரித்தார். இந்த உணவுத் திட்டத்தில் 50% கார்போஹைட்ரேட் 25% புரோட்டீன், 25% கொழுப்புச்சத்து கிடைக்குமளவிற்கு உணவுப் பண்டங்களைச் சேர்த்தார். இவற்றோடு கூட கால்சீயம் மற்றும் விட்டமின்கள் ஆகிய கூடுதல் சத்துப் பொருள்களையும் சேர்த்தார். இந்த supermeal திட்டத்தில் நிறைய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.
பப்பாளி, பம்பளிமாஸ், என்ற பழவகை களையும், முட்டைகோஸ் மற்றும் ஆணூணிஞிஞிணிடூடி ஆகியவற்றை சேர்க்கிறார்.அரிசியானாலும், கோதுமையானாலும், பழுப்பு நிற அரிசியினால் செய்யப்பட்ட சாதம் மற்றும் பழுப்பு நிற கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் சாப்பிடச் சொல்கிறார்.இந்த முறையான உணவுத் திட்டம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகிய இரண்டின் காரணமாக நாலே மாதங்களில் தனக்கு வந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டார்.இப்பொழுது மருந்து மாத்திரைகளின் உதவியில்லாமலேயே வெறும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.
அவர் தாயாரித்த supermealஅமெரிக்கர்களுக்காக தயார் செய்யப்பட்டது என்றாலும் நம் நாட்டில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நமக்கேற்ற மாதிரி உணவு தயார் செய்து கொள்ளலாம்.ஒரு பக்கம் அவர் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்றாலும் அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மணிலா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வறுவலுக்கு பயன் படுத்தச் சொல்கிறார்.
அவர் தவிர்க்க வேண்டுமென்று சொல்வதில் சர்க்கரை சத்து மிகுந்த பழங்களான வாழைப்பழம், திராட்சை, அன்னாசி போன்றவைகளும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளும் அடங்கும்.
 நம்முடைய அன்றாட உணவில் 25%ஆவது கறி, மீன் வகைகள் இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்றாலும் சைவ சாப்பாடு சாப்பிடும் பல இந்தியர்களுக்குப் பொருந்தாது.
 ஆகவே அவர்கள் புரதச்சத்து பெறுவதற்காக நிறைய தயிர் மற்றும் சோயா, முந்திரி, மணிலா கொட்டைகளைச் சாப்பிடலாம்.
உடற்ப்பயிற்சியை மிக முக்கியமாக‌  எடுத்துக் கொண்டிருக்கிறார்.


அவர் கருத்துப்படி தினசரி காலையிலும்,மாலையிலும் ஒரு மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும் என்கிறார். எடை கூடுதலாக இருப்பது மற்றும் தொப்பை போட்டிருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கூடுதல் எடைக்கும் உடம்பின் உடைய இன்சுலீன் எதிர்ப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் கூடுதல் எடையை குறைத்தவர்களுக்கு சர்க்கரை அளவும் நன்றாக குறைந்துள்ளதாகச் சொல்கிறார்.
Dewayne Mcculley தான் சாதித்ததை மற்ற சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்.


 அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய அனுபவங்களையும், தன்னுடைய supermeal திட்டங்களையும், தான் இந்த சர்க்கரை நோயி லிருந்து மீண்ட விவரங்களையும், தான் எழுதியுள்ள Death to Diabetes என்ற புத்தகத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய ஆலோசனைகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றுபவர்கள் எவரும் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது உறுதி.