மொத்தப் பக்கக்காட்சிகள்

4/14/2017

மதுரை


மதுரை













தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. 


சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம். மதுரையின் மையத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கம்பீரமான கோபுரங்களும் அதைச் சுற்றிச் சுற்றி பிரகாகரமாகவே விரியும் மாடவீதி மாசி வீதி சித்திரை வீதிகளும் கட்டுமான கலை நுட்பத்தில் தழிழர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு காலத்தின் சாட்சியாய் இன்றும் நிலைத்திருக்கும் எழில்நகர். தழிழர்களின் வீரம் எத்தகையது என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்துகாட்டிய பாண்டிய மன்னர்களின் தலைநகரம் இதுதான்.


அழகர் கோயில்


மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. பழமுதிர் சோலை ஆலயத்தின் தொலைபேசி எண்; 0452-2470375
காந்தி அருங்காட்சியகம்
மதுரையில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களில் ராணி மங்கம்மாள் சத்திரமும் ஒன்று. இங்குதான் இந்திய விடுதலைப் போரின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. மகாத்மாகாந்தி பற்றிய புகைப்படக் காட்சியும் தென்னிந்தியக் கைத்தொழில் கதர் மற்றும் கிராமியத் தொழில் பிரிவுக் கண்காட்சிகளும் உள்ளன. நேரம் காலை 10 - 1 மணி வரை. பிற்பகல் 2-5.45 மணி வரை.

கோச்சடை அய்யனார் கோயில்
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் கோச்சடை அய்யனார் மதுரை மாவட்ட மக்களால் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருகிறார். வட்டாரப் பண்பாட்டின் அடையாளமாக இந்தக்கோயில் எழுந்து நிற்கிறது. 

கூடல் அழகர் கோயில் 
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான வைணவக் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள பெருமாள் நின்ற கோலத்திலும் அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தொலைபேசி - 0452-2338542.

குட்லாம்பட்டி அருவி
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. குட்லாம்பட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறுமலைக் குன்றில் 87 அடி உயரத்திலிருந்து கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பது குதூகலமான அனுபவம். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்தப் பகுதி மக்கள் இங்கு வந்து குளித்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த அருவியின் அருகில் 500 ஆண்டு பழமையான தாடகை நாச்சியம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்


மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சிதான். சுந்தரேஸ்வரருடன் மீனாட்சி மணக்கோலத்தில் கொலுவிருக்கும் உலகப் புகழ்பெற்ற இந்தக் கோயிலின் மூலக் கட்டட அமைப்பை குலசேகர பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். பின்பு 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை மதுரையை ஆண்டு வந்த நாயக்க மன்னர்கள் இதை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். இந்தப் பிரமாண்டமான கோயிலின் 12 கோபுரங்களும் தமிழகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தொலைபேசி-0452-2344360.

திருமலை நாயக்கர் அரண்மனை


மதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனை இது. தற்போது எஞ்சி இருப்பதைப்போல 4 மடங்கு பெரியதாகக் கட்டப்பட்டது இது. இப்போது இருக்கும் பிரதான மாளிகையில்தான் அந்த மாமன்னன் வாழ்ந்திருக்கிறான. இம்மாளிகையில் இசையும் நாட்டியமும் அன்றாடம் மன்னர் முன்னிலையில் அரங்கேறியுள்ளன. நேரம் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை. தொலைபேசி - 0452 - 2332945.

திருப்பரங்குன்றம்
மதுரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று. இதன் உட்புறம், வைரம் பாய்ந்த பாறையில் இருந்து செதுக்கி சீர் செய்யப்பட்டது. தொலைபேசி - 0452-2482248.

இராஜாஜி பூங்கா
மதுரை மாநகராட்சி கட்டடமான அண்ணா மாளிகைக்கு அருகில் உள்ளது அழகிய ராஜாஜி பூங்கா. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான இந்தப் பூங்காவை மாநகராட்சியே பராமரித்து வருகிறது. குடும்பத்துடன் பொழுது போக்கச் சிறந்த இடம். நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. விடுமுறை இல்லை. நுழைவுக் கட்டணம் 1 ரூபாய். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணம் இல்லை. தொலைபேசி - 0452-2531012.

இராமகிருஷ்ண மடம்

பேலூர் மற்றும் ஹவுராவில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட ராமகிருஷ்ண மடத்தின் மதுரைக் கிளை. தொலைபேசி - 0452-2680224-2683900.
ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம்
மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து 10 கி .மீ தொலைவில் 6 ஆவது நிறுத்தத்தில் திருநகரில் இந்தத் தியான மண்டபம் உள்ளது. ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மிகப்பழமையான தியான மண்டபங்களில் இதுவும் ஒன்று.
பார்வை / தியான நேரம் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி - 0452-2484341.

திருமோகூர் கோயில்
மதுரையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும் ஒத்தக்கடையில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள விஷ்ணு கோயில் இது. காளமேகப் பெருமாள் செண்பக வள்ளி சுதர்சனா சமேதராய் இங்குக் காட்சியளிக்கிறார். தொலைபேசி - 0452-2423227.

திருவாதவூர் கோயில்


மதுரையிலிருந்து 25 கி.மீ. ஒத்தக்கடையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இது. சைவ சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த இந்த ஊரில் சிவபெருமானும் பார்வதியும் எழுந்தருளி உள்ளனர்.
வண்டியூர் மாரியம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தெப்பக் குளக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் இது. திருமலை நாயக்கர் மகால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இடத்தை அப்படியே தெப்பக்குளமாக்கிவிட்டார் மன்னர். மிகப்பெரிய தெப்பக் குளத்தின் மையத்தில் ஒரு பிள்ளையார் கோயிலும் உள்ளது.
அரசு அருங்காட்சியகம்


காந்தி அருங்காட்சியக வளாகத்துக்குள்ளே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1981 ஆம் ஆண்டு மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடந்தபோது திறந்து வைக்கப்பட்டது. 
சித்திரைத் திருவிழா:-

தமிழகத்தின் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மனுக்காக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாவாகும். சித்திரை மாதம் முதல் நாள் தொடங்கும் இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

 Thanks to Tamilnadutoursim.org

1 கருத்து: