மொத்தப் பக்கக்காட்சிகள்

3/13/2014

சந்திரபாபு வாழ்க்கை வரலாறு!



சிரிப்பு வருது, சிரிப்பு வருது என பாடி சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு

சிரிப்பு வருது, சிரிப்பு வருது என்றும் இன்னும் பல பாடல்களைப் பாடியும் நகைச்சுவையாக நடித்தும் மக்களை ரசிக்க வைத்தவர் பழம்பெரும் நடிகர் சந்திரபாபு. நகைச்சுவை மன்னனாக கொடி கட்டிப் பறந்த நடிகர் சந்திரபாபு மேல் நாட்டு பாணியில் ஆடுவார், பாடுவார்.

பல சோதனைகளை அனுபவித்து 42வது வயதிலேயே மரணம் அடைந்தார்.

சந்திரபாபுவின் சொந்த ஊர் தூத்துக்குடி. சந்திரபாபுவுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள்.

சந்திரபாபுவின் தந்தை சிறிது காலம் இலங்கையில் அச்சகம் நடத்தி வந்தார். அதனால் சந்திரபாபு இலங்கையில் வளர்ந்தவர். கொழும்பில் ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்தார். தமிழ்நாட்டுக்கு திரும்பியதும், கலை ஆர்வத்தின் காரணமாக சினிமா உலகில் நுழைந்தார். முதலில் ஜெமினி படப்பிடிப்பு நிலையத்திற்கு சென்று சினிமா சான்ஸ் கேட்டார். கிடைக்கவில்லை. வேலை தேடினார். அதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரே குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நடித்த முதல் படம் 'தன அமராவதி', கடைசி படம் 'பிள்ளைச் செல்வம்' மொத்தம் 100க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 'கவலை இல்லாத மனிதன்', குமார ராஜா', 'தட்டுங்கள் திறக்கப்படும்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். 'தட்டுங்கள் திறக்கப்படும்' படத்தை அவரே தயாரித்து இயக்கினார்.

நகைச்சுவை நடிப்பில், சிறந்த நடிகராக திகழ்ந்த அவர் 'படத்திற்கு ஒரு இலட்சம் ரூபா கொடுத்தால்தான் நடிப்பேன்' என்ற அளவுக்கு மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.

பல படங்களில் பாடி நடித்து இருக்கிறார். மேடை நிகழச்சிகளிலும் பாடுவார். மேல்நாட்டு நடனங்கள் கற்றவர். 'பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே', 'நான் ஒரு முட்டாளுங்க', 'பிறக்கும் போதும் அழுகின்றான்', 'சிரிப்பு வருது சிரிப்பு வருது 'சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது' ஆகிய பாடல்கள் அவர் பாடி பிரபலமானவை.

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டு கிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக்கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார். 

“உன் பெயர் என்ன?’’ 

“சந்திரபாபு’’ 

“தற்கொலைசெய்துகொள்ள விஷம் குடித்தாயா?’’
“ஆமாம்’’ 

“ஏன்’’ 

“சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிருக்கட்டும், எனக்கு இப்போ சிகரெட் வேணும்’’ என்றதும் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கொடுக்கிறார். “இது பிளேயர்ஸ். என் பிராண்ட் கோல்டு பிளாக்’’ என்கிறார் சந்திரபாபு. ஆளனுப்பி வாங்கிக்கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர். 

மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை. நீதிபதி கேள்வி கேட்கிறார். 

‘’ஏன் இப்படிச் செஞ்சே?’’ 

“எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, விஷம் குடிச்சேன்’’ 

“இனிமேலும் இந்தமாதிரி செய்வியா?’’ 

“சொல்ல முடியாது’’ 

“ஏன் சொல்லமுடியாது?’’ என்று நீதிபதி கேட்டதும், தனது பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, தீக்குச்சியை உரசி உள்ளங்கையில் வைத்து எல்லோருக்கும் காட்டினார். திடுக்கிட்டுப்போன நீதிபதி, “என்ன செய்கிறாய் நீ?’’ என்று அதட்டலாகக் கேட்டார். “நான் செய்ததை உங்களால் பார்க்க முடிந்தது. ஆனால், அந்தச் சூட்டை உங்களால் உணரமுடியாது. அதேபோலத்தான் என் உணர்ச்சிகளை யாராலும் ஃபீல் பண்ண முடியாது. சரி, எனக்கு என்ன தண்டனை?’’ என்றார். “முதல்முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன். 

நீ போகலாம்’’ என்று நீதிபதி சொன்னதும், “ஓ.கே நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்’’ என்றபடி கோர்ட்டைவிட்டு வெளியேறினார் சந்திரபாபு. 

பிறந்த சில நாட்களிலேயே பிழைக்க மாட்டார் என்று நம்பப்பட்டவர் சந்திரபாபு. அவரைக் கடுமையான விஷக் காய்ச்சல் தாக்கியிருந்தது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா ஜோசப் ராட்ரிக்ஸ் தூத்துக்குடி தேவாலயத்துக்கு மனைவியுடன் போனார். குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு, இருவரும் முழந்தாளிட்டு, “ஏசுவே! இந்தக் குழந்தை எங்களுக்கு நீர் கொடுத்த பிச்சை. இதை பிழைக்கச்செய்யும்! குழந்தைக்கு பிச்சை என்றே பெயரிடுகிறோம்’’ என்று வேண்டிக்கொண்டார்கள். குழந்தை பிழைத்தது. ஜோசப் பிச்சை என்று பெயரிட்டார்கள். 

ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து ஏற்படுத்திய பரபரப்பில் பட வாய்ப்பு கிடைத்தது. பி.எஸ். ராமையா இயக்கத்தில் ‘தன அமராவதி’ படத்தில் அறிமுகமானார் சந்திரபாபு..ஜெமினி நிறுவனத்தின் ‘ராஜி என் கண்மணி’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கு காரணம் ஒரு கடிதம். 

“திரு.வாசன் அவர்களுக்கு, நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்க முடியாதுன்னு சொல்லீட்டீங்க. என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிஞ்சவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது தப்பு. இத்தனை பெரிய ஸ்டுடியோவில் எனக்கு சான்ஸ் இல்லை. நான் ஒழிஞ்சு போறேன், செத்துப்போறேன்’’ என்று விஷம் குடித்தபோது சந்திரபாபு எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி வாசனிடம் ஒப்படைத்தவர் ஜெமினி கணேசன். 

அவருக்கு மனைவியாக வந்த ஷீலா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக ஷீலாவை உரியவரிடம் ஒப்படைத்தார் சந்திரபாபு. அதன் தொடர்ச்சியான மதுப்பழக்கத்தில் விழ்ந்தார். 

தமிழகத்தின் கலைக்குழுவுக்கு ஒருமுறை சிறப்பு விருந்துவைத்தார் அப்போதைய ஜனாதிபதி எஸ். ராதாகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு பாடிய ‘பிறக்கும்போதும் அழுகின்றான்…’ பாடலை ரொம்பவே ரசித்தார். அந்த ரசணையைக் கண்டு நெகிழ்ந்த சந்திரபாபு, அவரின் தோளில் கைபோட்டு, தாடையைப் பிடித்து, ‘’நீ ரசிகன்டா’’ என்று சொன்னதைக் கேட்டு கலைக்குழுவே ஆடிப்போயிருக்கிறது. அப்படிப்பட்ட அப்பாவித் துணிச்சல்காரர் சந்திரபாபு.

சந்திரபாபுவுக்கு 1956ல் திருமணம் நடந்தது. மதுரையைச் சேர்ந்த லைலா என்னும் ஆங்கிலோ - இந்திய பெண்ணை மணந்தார். ஆனால் இருவரும் சேர்ந்து வாழவில்லை. விவாகரத்து செய்து கொண்டனர். 'என் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. முதல் இரவிலேயே நாங்கள் பிரிந்து விட்டோம்' என்று, பல கட்டுரைகளில் சந்திரபாபு குறிப்பிட்டு இருந்தார்.

தனியாகவே சந்திரபாபு வாழ்ந்தார். வேலைக்கார சிறுவன் மட்டுமே கூட இருந்தான். எம். ஜி. ஆரை கதாநாயகனாக வைத்து, 'மாடி வீட்டு ஏழை' என்னும் படம் தயாரிக்கத் தொடங்கினார். ஆனால் அது பாதியில் நின்றுவிட்டது.

சந்திரபாபுவின் பிற்கால வாழ்க்கை, சோகமானது. பட அதிபர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று பரவலாக புகார் கூறப்பட்டது. அதனால் ஒரு காலத்தில் சந்திரபாபுவின் 'கால்iட்'டுக்காக தவம் கிடந்த படஅதிபர்கள், விலகி ஓடத் தொடங்கினார்கள். சந்திரபாபுக்கு மதுபழக்கம் உண்டு. சோகம் அதிகமாக மதுபழக்கமும் அதிகமாகியது.

7.3.1984 அன்று அதிகாலை 3.30 மணிக்கு அவர் உடல் நிலை திடீரென்று மோசமாகியது. ரத்த வாந்தி எடுத்தார். அப்போது அவருடைய வேலைக்கார பையன் வந்து அவருக்கு உதவி செய்தான். அறையை சுத்தம் செய்துவிட்டு, சந்திரபாபுவின் முகத்தையும் துடைத்துவிட்டான்.

'நான் தூங்கப் போகிறேன், நீ கவலைப்படாமல் போய்படு' எனறு அவனிடம் கூறி விட்டு, சந்திரபாபு படுத்துக் கொண்டார். 8ந் திகதி அதிகாலை 5.00 மணி அளவில்அவர் மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக