மொத்தப் பக்கக்காட்சிகள்

10/15/2013

பெண்மையின் உண்மைபெண்மையை தெய்வீகத்துக்கு ஒப்பிட்டால், அதை இயற்கையோடும் ஒப்பிடலாம். தவறில்லை. இயற்கையின் சுழற்சியை வலுக்கட்டாயமாகச் சிதைப்பதால், இயற்கையே சிதைந்து சின்னாபின்னமாவதைப் போல, பல்வேறு காரணங்களினால் பெண்மை அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்படும் போது, பெண்மை வெடித்துச் சிதறுவதையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

இரவு, பகல் என்ற கணக்கில்லாமல் 24 மணிநேர வேலை; அம்மா, மனைவி, சகோதரி, மகள், மருமகள் பலதரப்பட்ட  ‘ரோல்’கள்; சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட  வேலை, நர்ஸ், டீச்சர் இப்படி சகலகலாவாணி போல எல்லா வேலைகளையும் செய்யும் திறமை கொண்டவள்; வார விடுமுறை, மாத விடுமுறை, மருத்துவ விடுப்பு என்று ஒருநாள் கூட ஓய்வே இல்லாத வேலை; இது தான் நம் இந்திய பெண்களின் நிலை.

இன்றைய நவீனப் பெண்களுக்கு இன்னும் கூடுதல் சலுகையாக இரட்டிப்பு பணிச்சுமை; ஆம். அலுவலகம், வீடு என இரண்டையும்  நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்தால் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்ற நிலை போய், அச்சுதந்திரமே இரட்டிப்புச் சுமையை பெண்களின் தலையில் சுமக்கச் செய்கின்ற சூழல் இன்றைக்கு.

அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்தப் பேருண்மை அவளுக்குத் தெரிகிறதா என்று யோசித்துக்  கொண்டிருந்த போது என் கண்களில் ஒரு கதை தென்பட்டது.

சுமார் 10 வருடங்களுக்கு முன் மாத பத்திரிகை ஒன்றில் வெளிவந்த ஒரு கதை…

கடவுள் பெண்ணைப் படைத்துக் கொண்டிருந்தார். ஒரு வார காலம் ஆகியும் படைத்து முடிக்கவில்லை. வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை கடவுளிடம் கேட்டது. ‘ஒரு பெண்ணைப் படைக்க நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?’. அதற்கு கடவுள்  பதில் சொன்னார்:

    ‘நீ என்ன இவளை சாமானியப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் முன்னூறுக்கும் மாறுபட்ட பாகங்களைப் பொருத்த வேண்டும்…

    வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் மிச்சம் மீதியை சாப்பிட்டுக் கொண்டும் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்…

    ஒரே சமயத்தில் மூன்று நான்கு குழந்தைகளை மடியில் தவழ விட்டுக் கொள்பவளாக இருக்க வேண்டும்…

    அவளின் ஒரே ஒரு பாச முத்தத்தினால் குழந்தைகளின் அழுகை, ஆத்திரம், ஆங்காரம், கோபம், பிடிவாதம் போன்று எல்லா விதமான உணர்வுகளுக்கும் வடிகாலாக இருக்க வேண்டும்…

    ஆனால் இதை அத்தனையையும் செய்வதற்கு அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்….

கடவுள் சொல்லிக் கொண்டே போக தேவதை ஆச்சரியத்தினால் விழியை விரித்துப் பார்த்தது. உடனே கடவுள் சொன்னார், ‘என்ன இதற்கே மலைத்து விட்டாயா? இன்னும் கேள் இவளைப் பற்றி…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

    ‘அவள் தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்…’

    ‘ஒரு நாளுக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து உழைப்பாள்…’

   ‘இவள் பார்வைக்கு மிருதுவானவள்…ஆனால் மனதளவில் வலிமையானவள்…இவளது எதையும் தாங்கும் சக்தியை உன்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது…’

    ‘சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக, தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்…’

இதற்குள் தேவதை கடவுள் படைத்துக் கொண்டிருந்த பெண் உருவத்தின் கன்னத்தில் வழிந்த ஈரத்தை கவனித்தது. தொட்டுப் பார்த்து விட்டு பதறியது. ‘கடவுளே…இங்கு பாருங்கள் ஈரக் கசிவு… மெதுவாக படையுங்கள்…’.  கடவுள் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.

    ‘அது ஈரக் கசிவு இல்லை தேவதையே…அது தான் பெண்ணின் கண்ணீர்த் துளி…அந்தக் கண்ணீர்த் துளி தான் அவளது ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு…அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த்  துளிதான் வெளிப்படுத்துகிறது…’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதைக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். கடவுள் மேலும் தொடர்ந்தார்…

    ‘பெண்ணால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில் கூட அழகாய் சிரிக்கவும் பாடவும் முடியும்.’

    ‘அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான சூழ்நிலையிலும் சிரிக்க முடியும்.’

    ‘அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும்.’

    ‘அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக தான் பட்டினி கிடக்க முடியும்.’

    ‘அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும்.’
 
  ‘அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களைப் பாதியாக்க முடியும்.’

    ‘தன் குழந்தைகளின் சாதனைக்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும்.’

    ‘ஐயோ…என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை எதிர்நோக்க முடியும்.’

கடவுள் பெண்ணின் பெருமையை இப்படி அடுக்கிக் கொண்டே போக, தேவதை கேட்டது.  ‘அப்படியானால் நீங்கள் படைக்கின்ற பெண்ணிடம் குறை ஏதும் இல்லையா?’. இதற்கு கடவுள் சொன்னார்.

    ‘இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்… தன்னிடம் இருக்கின்ற அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்…’

தேவதைக்கு புல்லரித்தது. ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றது. தேவதைக்கு மட்டுமல்ல படித்துக் கொண்டிருக்கும் நமக்கும் புல்லரிக்கிறது தானே? இக்கதையில் சொல்லியிருக்கின்றபடி, பெண்ணைப் பற்றிய உண்மையை நம்மில் யாராலாவது மறுக்க முடியுமா? முடியாதல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக