மொத்தப் பக்கக்காட்சிகள்

7/23/2012

காமராஜர் ஆட்சியின்போது பெரிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் அமைப்பு: புதிய அணைகளும் கட்டப்பட்டன


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பெரிய தொழிற்சாலைகள் பெரும்பாலும் வடநாட்டில் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.

இதனால், 'வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது' என்று தி.மு.கழகத்தினர் பிரசாரம் செய்தனர்.இது, மக்களின் மனதில் ஆழப் பதிந்தது. தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.

தி.மு.க. கூறுவதில் உண்மை இருப்பதை காமராஜரும் உணர்ந்து கொண்டார். எனவே, தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலைகளையும், அணைகளையும் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

மத்திய அரசிடம் வற்புறுத்தி, ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு கணிசமான தொகை ஒதுக்கும்படி செய்தார். சென்னை பெரம்பூரில், சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் ரெயில் பெட்டி தொழிற்சாலை ரூ.12 கோடி செலவில் தொடங்கப்பட்டது.இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது.

நீலகிரியில் ரூ.11 கோடி மதிப்பில் பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கான தொழில் நுட்ப உதவியை பிரான்சு வழங்கியது. சென்னை கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

தென் ஆற்காடு மாவட்டம் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று கண்டறியப்பட்டதும், 1956-ல் ரூ.160 கோடி மதிப்பீட்டில் நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக அங்கு 250 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் சக்தி நிலையம் அமைக்கப்பட்டது.

சென்னை ஆவடியில் ராணுவ டாங்கி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரஷிய உதவியுடன் அமைக்கப்பட்டது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், 1800 ஏக்கர் நிலத்தில் பாய்லர் தொழிற்சாலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையும் திருச்சியில் அமைக்கப்பட்டது.

சென்னை கிண்டி, மதுரை, விருதுநகர், திருச்சி உள்பட 9 நகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் மேலும் 13 தொழிற்பேட்டைகளை அமைக்க அரசு முடிவு செய்தது. அப்போது அம்பத்தூரில் 1,200 ஏக்கர் நிலத்தில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகள் இங்கு அமைக்கப்பட்டன. இதேபோன்ற தொழிற்பேட்டை, ராணிப்பேட்டையிலும் அமைக்கப்பட்டது.

கி.பி. 2-ம் நூற்றாண்டில் காவிரி ஆறு குறுக்கே சோழ மன்னன் கட்டிய கல்லணை தான் உலகின் முதல் அணை. வெள்ளையர் ஆட்சியில், 1934-ம் ஆண்டில் மேட்டூரில் கட்டப்பட்ட அணைதான், இந்தியாவில் சிமெண்ட்டை பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் அணையாகும்.

காமராஜர் ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டப்பட்டன. அவற்றில் சிறந்தது, பரம்பிக்குளம்-ஆளியாறு அணைக் கட்டு ஆகும். தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நதிகளின் நீர்,கேரளத்தின் வழியாக ஓடி வீணாக அரபிக் கடலில் கலந்தது. அதைத்தடுத்து, அந்த நீரை நீர்ப்பாசனத்திற்கும், மின்சார உற்பத்திக்கும் பயன்படும் விதத்தில் சென்னை மாநில அரசும், கேரள அரசும் பேச்சு நடத்தி, இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்பவானி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், வைகை அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு திட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம், புள்ளம் பாடி கால்வாய் திட்டம் ஆகியவையும் காமராஜர் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டவைதான்.

1962-ம் ஆண்டில், தென்னாட்டில் பெரிய தொழிற்சாலை ஒன்றை, செக்க-சுலோ-வக்கியா நாட்டு உதவியுடன் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இடத்தை தேர்வு செய்ய 'செக்' நாட்டு நிபுணர் குழுவினர் இந்தியா வந்தனர். முதலில் ஆந்திரா சென்று சில இடங்களைப் பார்வையிட்டனர். சில இடங்கள் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள்.பிறகு சென்னை வந்தனர். சென்னையில் சில இடங்களை நிபுணர்கள் பார்வையிட்டனர்.

இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. பெரிய இயந்திரங்களைத் தாங்கக்கூடிய வகையில், தரையும் கடினமாக இல்லை. எனவே, இங்கு இந்த தொழிற்சாலையை அமைக்க இயலாது என்று கூறினர்.

அப்போது முதல்-அமைச்சராக காமராஜர் இருந்தார். அவர் அமைச்சர் ராமையாவை அழைத்து, திருச்சிக்குப் பக்கத்தில், கடினமான தரையுள்ள நிலம் நிறைய இருக்கிறது. தண்ணீரும் தாராளமாக கிடைக்கும். நீங்கள் உடனே நிபுணர் குழுவை திருச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

உடனே அமைச்சர் ராமையா, நிபுணர் குழுவினரை திருச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் ஏராளமான நிலம் காடு போல் கிடந்தது. அந்த இடத்தின் மண் வளத்தையும், தண்ணீர் வசதியையும் பரிசோதித்த நிபுணர்கள், தொழிற்சாலை அமைக்க இந்த இடம் பிரமாதமாக இருக்கிறது என்று அறிவித்தனர்.

இந்தச் செய்தி வெளியானதும், ஆந்திராவில் பயங்கர கலவரம் மூண்டது. தொழிற்சாலையை ஆந்திராவில்தான் அமைக்க வேண்டும். திருச்சியில் அமைக்கக் கூடாது என்று ஆந்திரர்கள் கிளர்ச்சி செய்தனர்.இதனால் மத்திய அரசு, அமைய இருக்கும் தொழிற்சாலையை இரண்டாகப் பிரிக்கத் தீர்மானித்தது. டிரான்ஸ்பார்மர் தொழிற்சாலையை ஆந்திராவிலும், பாய்லர் தொழிற்சாலையை திருச்சியிலும் அமைக்க முடிவு செய்தது.

பாய்லர் தொழிற்சாலைக்கும், அதன் விரிவாக்கத்துக்கும், குடியிருப்புகள் அமைக்கவும், மற்ற வசதிகள் செய்யவும் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது.

1965-ம் ஆண்டில், பாய்லர் தொழிற்சாலையை அன்றைய ஜனாதிபதி ஜாகிர் உசேன் தொடங்கி வைத்தார். இன்று, பாய்லர் தொழிற்சாலை ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருப்பதுடன், அந்தப்பகுதியே நவீன நகரமாக காட்சி அளிக்கிறது. 

Thanks to malaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக