மொத்தப் பக்கக்காட்சிகள்

4/05/2012

நிலையானது மரணம்.. நிலையில்லை வாழ்க்கை


மரணம்..

எல்லோர்க்கும் நிச்சயம்.
ஆயினும்
உற்றாருக்கு வாய்த்ததும்
அலறுகிறது மனம்..
ஏன்..?

இறக்கத்தான் மனிதன்
படைக்கப்பட்டான் எனில்
இடையில் பாசம் எதற்கு
பற்று   எதற்கு..?

நிலையின்மை பற்றி
நிதம் நிதம் பேசினாலும்
நட்பின் மரணம்
நம்மை நிலை குலைப்பதேன்..?

அண்ணா
தம்பி
ஐயா
அப்பா
நண்பனே
அம்மு
எல்லாம் சட்டெனமாறி

சடலம் என்னும்
பொதுப்பெயர் பெறுகிறோம்..

சலனமிருந்தால் சந்தோஷம்
சடலமானால் துக்கம்..

மனிதன்
உயர்பிறவிதானா..?



சிலகாலம் வந்தோம்
சிலகாலம் சிரித்தோம்
சிலகாலம் அழுதோம்
சிலகாலம் மகிழ்ந்தோம்

ஒருநாளில் மறைகிறோம்.
மாயம்தான் வாழ்க்கை எனில்
மனிதன்
உயர்பிறவிதானா..?

சென்றவரெல்லாம் திரும்புவதில்லை
இருப்பவர் அவருடன் செல்வதில்லை

இன்று இறந்தவருக்காய்
நாளை போகுபவர் அழுகிறார்கள்..
மனிதப்பிறவி
உயர்வானது தானா..?

நிலையில்லை வாழ்க்கை
நிலையில்லை மகிழ்ச்சி
நிலையில்லை அழுகை
நிலையில்லை சலனம்
நிலையில்லை ஜனனம்

நிலையானது மரணம்..

மனிதன் உயர்வானவன் ..

மரணம்

அவனினும் உயர்வானது..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக