32 வயதில் 650 பரிசுகள்.. 90 தையல்கள்.. ஜல்லிக்கட்டின் கில்லி மதுரை மணி!
“இதோ இந்தா தொடையில கெடக்கு பாருங்க ஒரு தழும்பு... அது கமுதியில ஒரு கருப்பன்கிட்ட வாங்கினது... வாடிவாசலைத் தாண்டி கொம்பைத் தணிச்சுக்கிட்டு பம்மி அவுட்டோர் சுத்துப் போட்டுச்சு பாருங்க... காலைக் குடுத்து வளைஞ்சேன். சரக்குன்னு இறக்கிருச்சு...
அவனியாபுரத்துல ஒரு செவலையோடத் திமிலைப் பிடிச்சு வளைச்சுட்டேன். லாடக்காலால ஒரு ஒழட்டு ஒழட்டி வீசுச்சிடுச்சு. ரெண்டு விரலு செதஞ்சு போச்சு. இதோ வயித்துல நீளமா ஒரு கோடு இருக்கு பாருங்க... அது கொசவப்பட்டி ஜல்லிக்கட்டுல ஒரு மறைமாடு குத்திக் கிழிச்சது... குடலெல்லாம் கொட்டிப்போச்சு. அள்ளி வச்சு தச்சிருக்கு.
இப்படி உடம்பு பூரா நிறைய வரலாறு எழுதி வச்சிருக்கேன். தவராம்பு கம்மாயில நடந்த ஜல்லிக்கட்டுல ஒரு மாட்டைப் பிடிக்கும்போது கானாம்பரத்துல (உயிர்நாடியில) குத்தி வீசிடுச்சு. பொழச்சதே பெரிசு...”
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... மாடுகளைச் சுத்துப்போட்டு பிடித்த களைப்பு துளியும் இன்றி விருதுகளைக் காட்டும் பெருமிதத்தோடு தம் உடலில் பதிந்து கிடக்கும் காயத்தழும்புகளைக் காட்டுகிறார் மணி. நேற்று (10.02.2017) மட்டும் அலங்காநலூரில் 12 காளைகளை அடக்கியிருக்கிறார் மணி!
மதுரை வட்டாரத்தின் பெயர் பெற்ற மாடுபிடி வீரர் மணி. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், சத்திரப்பட்டி, அச்சம்பட்டி, கொளமங்கலம், களணை, புதுப்பட்டி, அய்யாபட்டி, சாத்தாம்பாடி, பாரப்பட்டி, சோளங்குருணி என்று தென்மாவட்டங்களில் நடக்கும் எல்லா ஜல்லிக்கட்டுகளிலும் மணிக்கென்று சாதனைப் பட்டியல் இருக்கிறது.
32வயது மணி இதுவரைக்கும் ஜல்லிக்கட்டில் பெற்ற பரிசுகள், 119 தங்கக்காசுகள், 148 வெள்ளிக்காசுகள், 280 குத்துவிளக்குகள், 15 சைக்கிள்கள், 12 பீரோக்கள், 40 மிக்ஸிகள், 8 ஆடுகள், 3 கன்றுக்குட்டிகள், 25 அண்டாக்கள்... இதுதவிர உடம்பு முழுவதும் 90க்கும் மேற்பட்ட தையல்கள்.
மணிக்கு ஜல்லிக்கட்டுதான் வாழ்க்கை. இதன் மீதுள்ள பிடிப்பில் திருமணம் கூட இன்னும் செய்து கொள்ளவில்லை. மாடுகள் வளர்ப்பது, ஜல்லிக்கட்டுக்கு மாடுகளை தயார் செய்வது, இளைஞர்களுக்கு மாடு பிடிக்க பயிற்சி அளிப்பது... ஜல்லிக்கட்டு நடக்கிறதோ இல்லையோ... மணி தன் செயல்பாடுகளை நிறுத்துவதே கிடையாது. காலையும் மாலையும் காளைகளோடு தான். பெரிய இளந்தாரிக் கூட்டம் மணிக்குப் பின்னால் உண்டு.
“ஜல்லிக்கட்டுங்கிறது எங்க வாழ்க்கையோட ஒரு பகுதி. `எப்படா பொங்கல் வரும், எப்படா வாடிவாசல் திறக்கும்'ங்கிற எதிர்பார்ப்பே எங்களுக்குக் கொண்டாட்டம் தான். ஜல்லிக்கட்டை தடை செய்யனும்ன்னு சொல்ற ஒருத்தருக்கும் அதோட தத்துவமும், பண்பாடும், நடைமுறையும் சுத்தமா தெரியாது. எங்க பாட்டன் பூட்டன் காலத்துல காளைகளை வதைச்சிருக்கலாம். இப்பல்லாம் எங்களுக்கு காளைங்கதான் உயிர். அதுங்க மேல எவனாவது அழுத்தமா கை வச்சாவே சுருக்குன்னு கோபம் வரும். காளைங்களை நாங்க மாடுகளாவே நினைக்கிறதில்லை. எங்க குடும்பத்துல ஒருத்தனாத்தான் பாப்போம். அதுக்குன்னு ஒரு பேரு வச்சு, புள்ளை மாதிரி வளர்ப்போம். மிருகவதை பத்திப் பேசுறவங்களுக்கு இந்த வரலாறெல்லாம் தெரியாதுண்ணே. ஜல்லிக்கட்டுல நிக்குதோ நிக்கலையே கடைசி வரைக்கும் ராஜா மாதிரி வீட்டில இருக்கும். பலபேரு அப்பன் ஆத்தாளுக்கு சமாதி கட்டுற மாதிரி காலங்கடந்து செத்த மாடுகளுக்கும் சமாதி கட்டி வருஷாவருஷம் நினைவு நாள் கொண்டாடிக்கிட்டிருக்காங்க..”- இடையிடையே சத்தம் போட்டு சக வீரர்களை உற்சாகப்படுத்தியபடி பேசுகிறார் மணி.
மணிக்கு பூர்வீகம் கோரிப்பாளையம். அப்பா அப்பகுதி கவுன்சிலராக இருக்கிறார். ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமல்லாமல், அதன் பின்னால் இருக்கும் உணவு அரசியல், வணிக அரசியலெல்லாம் பேசுகிறார் மணி.
“ஒரு சமுதாயத்துக்கு வீரியமுள்ள விதைங்க முக்கியம்ணே... அதனாலதான் நம்ம பாட்டன் பூட்டனுங்க ஜல்லிக்கட்டு, சிலம்பம்ன்னு வீர விளையாட்டுகளை வாழ்க்கையோட ஒரு பகுதியா வச்சாங்க. அதெல்லாம் இல்லாட்டி, கம்ப்யூட்டரை மட்டுமே இயக்கத் தெரிஞ்ச மாற்றுத்திறனாளி சமூகமா மாறிடுவோம்... விவசாயத்துல நம்ம விதைங்களை அழிச்சுட்டாங்க. இப்பொ மனுஷங்கள்லயும் அழிக்கப் பாக்குறாங்க. - மணியில் பேச்சில் ஆதங்கம்.
“அப்பல்லாம் நல்லா மாடு பிடிக்கிறவங்களுக்கு ஹீரோ கணக்கா ஊருக்குள்ள மரியாதை இருக்கும்ணே. நல்லது கெட்டதுல எல்லாம் அவங்களைதான் முன்னாடி உக்கார வைப்பாங்கே. அதைப் பாத்துத் தான் நமக்கும் மோகம் வந்துச்சு. பத்து வயசுலயே அவனியாபுரம், ஆனையூர், குலமங்களம்ன்னு வாடிவாசலைத் தேடி அலைய ஆரம்பிச்சுட்டேன். குடியரசு தினம், சுதந்திர தினம், நினைவு நாள், பிறந்தநாள்ன்னு ஏதாவது ஒரு காரணத்தைசை சொல்லி தினமும் எங்காவது ஒரு ஜல்லிக்கட்டு நடந்துக்கிட்டிருக்கும். காளைங்க மேல இருந்த ஆர்வத்துல பள்ளிக்கூடத்தை மறந்துட்டேன். ஜல்லிக்கட்டு களமே கதியாக் கெடந்தேன்.
எனக்குள்ள ஜல்லிக்கட்டு கனவை விதைச்சது எங்க அம்மாதான். நிறைய கதைகள் சொல்லும். இந்தப் பகுதியில மாடுபிடி வீரர்களா இருந்த சிலபேரை சிறு தெய்வங்களா மக்கள் கும்பிடுறாங்க. அவங்களைப் பத்தியெல்லாம் சொல்லும்போது அப்படியொரு கொடுப்பினா நமக்குக் கிடைக்காதான்னு ஏக்கமா இருக்கும். அம்மா இப்போ இல்லை. ஆறு வருஷம் முன்னாடி காலமாகிடுச்சு.- கண்கலங்குகிறார் மணி.
“ஸ்ரீதர், பாண்டித்துரை, பால்பாண்டி, லட்சுமண்ன்னு ஏகப்பட்ட ஹீரோக்கள் எங்க பகுதியில இருந்தாங்க. அவங்க களத்துக்குள்ள வந்துட்டா, காளைங்கள்லாம் மிரளும். அவங்களை மாதிரி ஆகனுங்கிறது அப்போ என்னோட கனவு. பதினாறு வயசுல அலங்காநல்லூர்லதான் முதன்முதல்ல களத்துல எறங்கினேன். இப்போ மாதிரி அப்போ கட்டுப்பாடுங்கள்லாம் இல்லை. மனசுல திடம் இருக்கிற யாரும் மாடு பிடிக்கலாம். எறங்குன முதல் களத்துலயே கொம்புக்குள்ள சிக்கிட்டேன்.
வாடிவாசலுக்கு முன்னாடிப் போயிட்டா பயமிருக்கப்புடாது. காளையா, நாமளாங்கிற கேள்வி மட்டும் தான் இருக்கனும். காளை குத்தத்தான் செய்யும். அதுதானே அதோட இயல்பு. அதுல தப்பிச்சு, மாட்டை நம்ம வசப்படுத்துறதுதான் ஜல்லிக்கட்டு விளையாட்டு. முதல்ல நமக்கு அந்த நுட்பமெல்லாம் தெரியலே. முறைப்படி யாரும் கத்துத்தரவும் இல்லை. நாம பாட்டுக்கு குருட்டுத் தைரியத்துல போயி நின்னோம். கொம்பைப் பாத்ததும் பயம் வந்திடுச்சு. என்ன செய்யிறதுன்னு யோசிக்கிறதுக்குள்ள தூக்கி போட்டுட்டு அடுத்த ஆளைப் பாக்க போயிடுச்சு காளை. முத களத்துலயே கையில எலும்பு முறிவு.
இருக்கிறதுலயே பெரிய அவமானம், குத்துப்பட்ட பின்னாடி ஜல்லிக்கட்டை விட்டு விலகுறது தான். காலாகாலத்துக்கும், ”குத்து வாங்கின பயடா”ன்னு கேலி பண்ணுவாங்கே. அந்த வைராக்கியம்... அம்மாவும், ”காயமெல்லாம் படத்தான் செய்யும்... பார்வையை கொம்புல வைக்காதே... திமில்ல வையி... மாட்டைப் பாத்து பயப்புடாதே”ன்னு சொன்னுச்சு. என்னல்லாம் தப்பு பண்ணினோம்ன்னு யோசிச்சேன். அடுத்த இருபது நாள்ல சத்திரப்பட்டி குடியரசு தின விழாவுல ஜல்லிக்கட்டு... மாவுக்கட்டை கழட்டி வீசிட்டு கிளம்பிட்டேன்.
அதுல நின்னு விளாண்டேன். ஒரு பெரிய அண்டா பரிசாக் கிடைச்சுச்சு. அதுக்கப்புறம் பித்தம் முத்திப்போச்சு. நாம இல்லாத களமே இல்லேன்னு ஆயிப்போச்சு. ஆளு வச்சு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. நமக்குன்னு ஒரு கூட்டம் உருவாயிடுச்சு. முழு நேரமும் ஜல்லிக்கட்டு தான். எங்கோ போனாலும் பரிசில்லாம திரும்புறதே கிடையாது. குறைந்தபட்சம் குத்தையாவது வாங்கிட்டு வருவோம்.
ஜல்லிக்கட்டு பத்தி வெளியில நிறைய பேரு தப்பா நினைச்சுக்கிட்டிருக்காங்க. அது உயிரை வதைக்கிற விளையாட்டோ, எடுக்கிற விளையாட்டோ இல்லை. முறையா விளையாட கத்துக்கிட்ட எவனும் மாட்டுக்கிட்டே குத்துப்பட மாட்டான். மாட்டையும் வதைக்க மாட்டான். அவனுக்கு இலக்குத் தெரியும். எங்கே கை வச்சா மாடு கைக்குள்ள வரும்ன்னு புரியும். அப்படியே மாட்டுக்கிட்ட குத்துப்பட்டாலும் அதுக்காக மாடு பிடிக்கிறவங்களோ, அவங்க குடும்பமோ வருத்தப்படுறதில்லை. மதுரைக்காரன் பாதிப்பேருக்கு உடம்புல மாடு குத்தின வடு கிடக்கும்.
ஜல்லிக்கட்டுல மாடு பிடிக்கிறவங்களுக்கு கிரிக்கெட்ல கொடுக்கிற மாதிரி, புட்பால்ல கொடுக்கிற மாதிரி லட்சங்கள்ல, கோடிகள்ல எல்லாம் பரிசு இல்லை. அதிகப்பட்சம் 1 கிராம் தங்கக்காசு, 5 கிராம் வெள்ளிக்காசு, சைக்கிள், கட்டில், மிக்சி.. இதுதான் பரிசு. நம்மளோட தைரியத்தை தக்க வச்சுக்கிறதுக்காக, உடல் வலிமையை பாதுகாத்துக்கிறதுக்காக நம்மோட சுய விருப்பத்தின் பேர்ல தான் மாடு பிடிக்கப் போறோம். பணமோ, புகழோ பெரிசில்லை.
இந்த 32 வருஷ அனுபவத்துல நூற்றுக்கணக்கான வாடிவாசல்களைப் பாத்திருக்கேன். நிறைய காளைகளோட நின்னு வெளையாண்டிருக்கேன். எனக்கடுத்த தலைமுறை, ஜல்லிக்கட்டுல இருந்து அந்நியமாகிக்கிட்டே போகுது. மாட்டைக் கண்டாலே பசங்கள்லாம் பயந்து ஓடுறானுங்க. இன்னொரு பக்கம், அந்நிய சக்திகள் இந்த வெளையாட்டையே அழிச்சிடனும்ன்னு துடிக்கிறாங்க. அவங்க சூழ்ச்சியை முறியடிக்கனுன்னா நல்ல வீரர்களையும், நல்ல வீரியமுள்ள காளைகளையும் உருவாக்கனும். ஒரு மாடுபிடி வீரனா அது எனக்கான கடமைன்னு உணர்ந்தேன். மதுரையைச் சுத்தி நாலு இடத்துல வாடிவாசல் கட்டுனேன். மாடு வச்சிருக்கிற சில பேர், ”நல்ல விஷயம் பண்றே... நாங்களும் வர்றோம்”ன்னு உதவிக்கு வந்தாங்க. பசங்களும் ஆர்வமா வந்தாங்க.
என் அனுபவத்தை வச்சு பாடத்திட்டம் மாதிரி உருவாக்கி இருக்கேன். மனுஷனுக்கும் சரி, காளைக்கும் சரி, வதை கூடாது. அப்படி விளையாடனுன்னா 60 வகையான பயிற்சிகளை முடிக்கனும். பயப்படக்கூடாது. காளையைக் கண்டு ஓடக்கூடாது. மாட்டோட நெற்றியை இலக்கு வச்சு விலகனும். கொம்புல கை வச்சா நாம பயந்துட்டோம்ங்கிறதை மாடு உணர்ந்திடும். திமிலை பிடிக்கனும். எப்போ மாட்டோட காலை பின்னனும், எப்போ பின்னக்கூடாது, எப்போ தொங்கனும், எப்போ ஓடனும்ன்னு நிறைய கணக்குகள் இருக்கு. மாடு ரெண்டு பக்கமும் அட்டாக் பண்ணப் பாக்கும். களத்துல நமக்கு ரெண்டு கண்ணு போதாது. நாலு கண்ணு வேணும். நிறைய இளந்தாரிங்க பயிற்சி முடிச்சிருக்காங்க.
முதல்ல பசங்களுக்குத் தான் பயிற்சி தந்துக்கிட்டிருந்தேன். சிலபேர் வந்து, மாடுகளையும் தயார்படுத்திக் கொடுன்னு கேட்டாங்க. முன்னமாதிரி கௌரவத்துக்கெல்லாம் யாரும் காளைங்க வளக்குறது கிடையாது. அதுவும் கடந்த ரெண்டு வருஷமா ஜல்லிக்கட்டு நடக்காததால பலபேரு காளை வளர்க்கிறதையே விட்டுட்டாங்க. அதைப் பெருக்கனுங்கிற எண்ணத்துல தான் கடந்த ரெண்டு வருஷமா காளைகளுக்கும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன்.
புளிக்குளம், காங்கேயம் காளைங்க தான் ஜல்லிக்கட்டுக்கு ஏத்தவை. கிடைக்காரங்ககிட்ட நல்ல கண்டுகளாக வாங்கிட்டு வந்து படிப்படியா தயார்படுத்துவோம். ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சின்னு பல விஷயங்கள் இருக்கு என்னைக்கிருந்தாலும் ஜல்லிக்கட்டு திரும்பவும் நடக்கும்ன்னு நம்பிக்கை இருந்துச்சு. அந்த நம்பிக்கையில தான் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கிட்டிருந்தேன்.. இன்னைக்கு எங்க எதிர்பார்ப்பு நிஜமாயிடுச்சு. ஆயிரம் வருஷமா நம்ம பண்பாடா இருந்ததை எங்கிருந்தோ வந்த சிலபேர் எப்படி தடுக்க முடியும்..? இது வெறும் ஜல்லிக்கட்டு விவகாரம் மட்டுமில்லை. நம்ம உயிர்நாடியிலே கை வைக்கிற வேலை. இதை சரியாப் புரிஞ்சுக்கிட்டுத் தான் நம்ம பசங்க களத்துல இறங்கியிருக்காங்க..." - உற்சாகமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வாடிவாசலுக்கு விரைகிறார் மணி.
#தலைவணங்குவோம்.