மொத்தப் பக்கக்காட்சிகள்

12/11/2015

என்னவாகலாம்….??

 
என்னவாகலாம்….??
*

எம்.பி.பி.எஸ்.படித்தால் மருத்துவர் ஆகலாம்

பி்.ஈ படித்தால் பொறியாளர் ஆகலாம்
 
பி.எல். படித்தால் வழக்கறிஞர் ஆகலாம்
 
ஐ.ஏ.எஸ். படித்தால் மாவட்டஆட்சியர் ஆகலாம்
 
எதுவுமே படிக்காமல் மந்திரி ஆகலாம்
 
ஆனால், என்ன படித்தால் மனிதர் ஆகலாம்
 
மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம்.
 
ஆதாரம் : “ முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் 
 
மகளே…! ” நா.முத்துநிலவன் – நூல் – பக்கம் 62.
 
தகவல் : ந.க.துறைவன்
*


மழை:

மழை: 

"நான் கடலுக்கே போகிறேன்!"

நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்...

பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்...

கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,

உனக்காக கீழ் இறங்கினேன்!

கொஞ்சமும் நினைவு இல்லையா?

வஞ்சனை செய்கிறாயே...

என்னை அழைத்து விட்டு...!

வறண்ட என் நிலக் காதலி 

நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்....

சுரண்டி அவள் மேனியெல்லாம்

சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்!

நனைத்து அணைப்பதாலே 

உடல் குளிர சுகம் கொள்வாள்!


அனைத்தும் நிராகரித்து,

கடல் சேரவே வழி செய்தாய்..........

குளம் குட்டை ஏரியென 

அங்கங்கே தங்கியிருந்தேன்......

வளம் கொழித்த அத்தனைக்கும்

பங்கம் செய்யவே வாழ்ந்திருந்தாய்.

உனக்கு வழி வேண்டி

சாலைகள் நீட்டினாய்;

தொழிற்சாலைகள் கட்டினாய்;

காண்கிரீட் கட்டடமாய்

நிலமெல்லாம் நிரப்பினாய்.

நான் செல்லும் வழியடைத்து

திட்டமிட்டு துரத்தினாய்.

பூமித்தாய் மூச்சு விட திணறுகிறாள்....

மண் பார்க்க முடியாமல்

அவள் முகமெல்லாம்

மறைத்து விட்டாய்.

எனக்கென்று இருந்த சின்னஞ் சிறு

உறவுகள் தானே குளமும் குட்டையும்!

கண்மூடித்தனமாக

மண் போட்டு மூடி விட்டாய்.

என்னையே நம்பியிருந்த

கடைசி உறவுகளையும்

கொள்ளளவு ஏற்றியே உடைப்பெடுத்து

கொல்ல வைத்தாய்.

பள்ளம், குழி, சிறு தாழ்வு இருந்தாலே

வெள்ளமாய் தங்கி வாழ்வு தருவேனே!

உள்ளம் என்று இருந்திருந்தால்

கள்வன் போல் வசப்படுத்தி

கல் மண் கொட்டி குப்பை நிரப்பி 

நீ மட்டும் தங்கும் தப்பை நினைப்பாயா?

என்னை வந்த வேகத்திலே 

விரட்டி விட்டு

மண்ணை துளையிட்டு

நானூறு அடியில் என்ன தேடுகிறாய்....!

நாற்பது அடியில்

கிணற்றின் மடியில்

நாளும் சுரந்தேனே!

ஊற்று, கால் என்றெல்லாம் நீ

முகர்ந்து குடிக்க மகிழ்ந்தேனே!

நினைவில்லையா?

எனக்கான இடத்தை நீ 

உனக்காக வளைத்த மடத்தை

செய்யாமல் இருந்திருந்தால்

உன் கால் சுற்றி

கட்டிய வீட்டை சுற்றி

தேங்கி கிடக்கும் மடமையை

நானா செய்திருப்பேன்?

அவமானம் வேறு 

வெகுமானமாக தருகிறாய்.


நீர் வடியும் இடமெல்லாம்

நீயாக அடைத்து விட்டு

பேரிடர் என்கிறாய்;

வெள்ளப்பெருக்கு என்கிறாய்;

மக்கள் அவதி என்கிறாய்;

இயல்பு வாழ்க்கை பாதிப்பென்கிறாய்!

அலுவலகம் செல்வதற்கு,

தொழில் நிற்காமல் நடப்பதற்கு,

மழை நிற்க வேண்டுகிறாய்.

பிழையாக குழி 

நீ உனக்கே தோண்டுகிறாய்.......

உன் வாழ்வாதாரம் வேண்டியே

உன்னைத் தேடி நான் வந்தேன்....!

உனக்கே வேண்டாம் என்ற போது

நான் கடலுக்கே போகிறேன்.........

இனியாவது நீ திருந்துவாயா

உனக்காக நான் வந்தால்.....?

#படித்ததில்_பிடித்தது

திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என்றால் நம்பமுடிகிறதா?!!!!?

மூன்று முறை திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என்றால் நம்பமுடிகிறதா?!!!!?

அவருக்குச் சொந்தமாக வீடோ, வாகனமோ, செல்போனோ கிடையாது என்றால்
நம்புவீர்களா?

வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது.
நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.
தற்போது 64 வயதாகும் மாணிக்சர்க்கார் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர்.

மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார்.
அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே
ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம்.

அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு
ரூ. 46,000-தான்.

இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான்.

சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது. முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா?

அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார். கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது.

‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.

‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி...

‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, 

ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்:

தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.
2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர்.

சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.
நண்பர்களே....... 

இந்த உத்தமர், நம் மாநிலத்திற்கு கிடைக்க வில்லையே!!!

பொறாமை கொள்ளுங்கள் நண்பர்களே....... 

இவரைப் போல நம்மால் இருக்க முடியவில்லையே என்று!!!

12/08/2015

கண்ணாடி சொல்லும் 3 பாடங்கள் !

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...
(தெரிந்துகொள்வோம் )

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
 
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
 
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?
 
இல்லையே…!
 
அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
 
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்.
Thanks to S.Nataraj








12/04/2015

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.

10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-

அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ !

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..


Thanks to Sountha!