மொத்தப் பக்கக்காட்சிகள்

7/25/2012

கவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு


இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அந்த அளவுக்கு தன் எழுத்தால் பிரபலமானவர். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலி திரைப்படங்களுக்கு 20,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் பல திரைப் படங்களிலும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நடித்த திரைப் படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய் கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை, வாலியின் சொந்த ஊர். ஸ்ரீரங்கத்துக்குவந்து குடியேறிய ஸ்ரீனிவாச அய்யங்கார் – பொன்னம்மாளின் மகன் வாலி. படித்தது எஸ்.எஸ்.எல்.சி. பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடப் படிப்பு!.

தன் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி அவர்கள் நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர் கூட்டமே பங்கேற்றுக் கொண்டது. அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் பெரும் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.

வாலிக்கு எப்படி தமிழின் மேல் ஒரு தீராத பற்று இருந்ததோ அதேபோல ஒவியத்தின் மீதும் ஒரு கண் இருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலி அவர்களைப் போலவே தானும் தமிழ்கூறும் நல்லுலகத்தை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபுதான் ‘மாலி’யைப் போல நீயும் சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி ‘வாலி’ என்னும் பெயரைச் சூட்டினான்

தமிழ்சினிமாவில் அன்றைய இயக்குனரில் இருந்து இன்றைய இயக்குனர் வரை இவருடன் பணியாற்றுகின்றனர். எல்லா தலைமுறையினருக்கும் ஏற்ற பாடலாசிரியர். இளையோருக்கு முதியோருக்கு என பன்முக மக்களுக்கு எழுதவல்ல பன்முக பாடலாசிரியர். இவரை வாலிபக்கவிஞர் என்கிறார்கள் அதன் காரணம் இதுவே…

சமீபத்தில் வாலிக்கு நடந்த எண்பதாவது பிறந்த நாள் விழாவில் தமிழ்திரையுலக ஜாம்பவான்களே திரண்டு வாழ்த்தினர். கவிப்பேரரசு வைரமுத்துவில் ஆரம்பித்து நேற்று பாட்டு எழுத ஆரம்பித்த சோனைமுத்து வரை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

கவிஞர் வாலியின் சில புத்தகங்கள்

ஆறுமுக அந்தாதி

பகவத்கீதை கவிதை நடை

சரவண சதகம்(நூறு நேரிசை வெண்பாக்கள்)

பாண்டவர் பூமி பாகம் 3

இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்

கம்பன் எண்பது

கலைஞர் காவியம்

நானும் இந்த நூற்றாண்டும்

இவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்

இன்றும் என்றென்றும் என்றென்றும் பாடல் எழுதவல்ல வாலிபக்கவி மேலும் நல்ல உடல் நலத்துடன் பல பாடல்கள் எழுத வாழ்த்துவோம்…ஸ்ரீரங்கத்திலேயே பிறந்து எழுத்துலகில் தங்களது தனி முத்திரையைப் பதித்தவர்கள் இரண்டு ரங்கராஜன்கள். ஒருவர் கவிஞர் வாலி (இயற்பெயர் ரங்கராஜ்) மற்றவர் எழுத்தாளர் சுஜாதா (இயற்பெயர் ரங்கராஜ்).

திரையுலகம் நான்கு தலைமுறை-களைப் பேசுகிறது. பேசும் படங்கள் தோன்றிய 1931 முதல் 1948 வரையில் அமைந்த காலம், திரையுல-கின் முதல் தலைமுறை. 1949 முதல் 1970 வரை இரண்டாம் தலைமுறை, 1970 முதல்1990 வரை மூன்றாம் தலைமுறை. 1991 முதல் இன்றுவரை நான்காம் தலைமுறை என்று சொல்லலாம்.

தமிழ்த் திரையுலகில் முதல் தலை-முறையில் வடமொழி சொற்கள் பாடல்-களில் வளைய வந்தன. இரண்டாம் தலைமுறை தொடக்கத்-தில் இருந்து-தான் கருத்தாழ-மிக்க எளிய தமிழ்ச்-சொற்கள் அமைந்த பாடல்கள் திரை-யுலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

உடுமலை நாராயண கவி, கவிஞர் அ.மருதகாசி, கவி க.மு.ஷெரிப், தஞ்சை ராமய்யா தாஸ், கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கே.டி.சந்தானம், சுரதா, கே.பி.காமாட்சி, ஆத்மநாதன், கு.மா.பாலசுப்பிரமணியன், கம்பதாசன் போன்றோரின் பாடல்கள் கரிசல் மேட்டு நிலங்களில்கூட கலகலகத்தன.

இரண்டாம் தலைமுறையின் இறுதி-யில் இணைந்தவர் கவிஞர் வாலி. மூன்றாம் தலைமுறையில் கவிப்பேரரசு வைரமுத்து. திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இந்த இருவரின் காலங்களில்தான் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

இன்றைய இசையில் இரைச்-சலையும் மீறி, இசை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் எதிர் நீச்சல் போடும் வீரர்களாகத் தங்களது கவித் தன்மையை இழந்துவிடாமல் இருப்பவர்கள் இவர்கள்.

தமிழ்த் திரையுலகில் தனது எழுத்துக்களை பதிவுச் செய்ய கவிஞர் வாலி ஏற்றுக் கொண்ட சோதனை-களை ஆயிரம் நா கொண்ட ஆதிசேஷ-னாலும் எடுத்துச் சொல்ல இயலாது.

திரைப்படத்தில் முதன்முதலாக எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்’ என்ற திரைப்படத்தில், கவிஞர் வாலி ஒரு பாடலை எழுதினார்.

அதற்கு பின்னர் ஆண்டுகள் சிலவற்றுள் அலை-கழிக்கப்பட்டார் கவிஞர் வாலி. வெற்றிப் பாடலாக அமைந்திருந்தும் அவரது விலாசம் தெரியாமல் இருந்தது. தயாரிப்பாளர் சுலைமான், இயக்குனர் முக்தா வி.சீனிவாசன் இருவரின் இதயத்தில் இடம் பெற்றார் கவிஞர் வாலி. ‘இதயத்தில் நீ’ என்ற படத்தில் மூன்று பாடல்களை வெள்ளித் திரையில் வித்திட்டார்.

ஒன்று...

பூ வளையும் பூங்கொடியே

பூமாலைப் போடவா

பொன்மகளே வாழ்கவென்று

பாமாலைப் பாடவா...

இரண்டு...

உறவு என்றொரு சொல்லிருந்தால்

பிரிவு என்றொரு பொருளிருக்கும்...

மூன்று...

ஒடிவதுபோல் இடை இருக்கும்

இருக்கட்டுமே-அது

ஒய்யார நடை நடக்கும்

நடக்கட்டுமே...

சிந்தனையைத் தூண்டும் வரிகளாக இருந்தாலும் சிறகு முளைக்காத பறவையாகத்தான் சினிமா, கவிஞரை கருதியது. ஒரு கவிஞனின் ஆற்றலை மற்றொரு கவிஞரால்தான் உணரமுடியும். கவிஞர் வாலியின் அபரிமிதமான சிந்தனை கருத்து-களுக்கு, கற்பக விருட்சமாக அமைந்தவர் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அவரே ஒரு கவி.

“உன்னழகை கன்னியர்கள் சொன்னதினாலே

உள்ளமெல்லாம் உன்வசமாய் ஆனதினாலே...”

‘உத்தமபுத்திரன்’ படத்தில் இந்தப் பாடலும் வேறொரு பாடலும் ‘தெய்வப் பிறவி’யில்

‘கட்டத்துக்கு மனைப் பொருத்தம் அவசியம்

காதலுக்கு மனப்-பொருத்தம் அவசியம்...’

போன்ற பாடல்களை எழுதி-யவர் கே.எஸ்.-கோபால-கிருஷ்ணன். கவிஞர் வாலிக்கு ‘கற்பகம்’ என்ற படத்தின் மூலம் பாட்டெழுத வாய்ப்-பளித்து கவிஞரின் வாழ்க்கைக்-குக் கை கொடுத்த தெய்வமாக விளங்கினார் கே.எஸ்.ஜி. ‘கற்பகம்’ படத்தில் நான்கே பாடல்கள். பாடியவர் பி.சுசீலா. ஒவ்வொரு பாடலும் தங்கத்தில் வைரம் பதித்தது போன்றவை. மக்கள் திலகம், நடிகர் திலகம் ஆகியோருக்காக எழுதப்படும் பாடல்களே ரசிகர்-களின் கைத்தட்டலைப் பெறும்.

புதுமுகமாக அறிமுகப்-படுத்தப்-பட்ட திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயா நடித்த பாடலுக்கான வரிகளுக்கு அரங்கமே அதிர்ந்தது. இன்றும் என் அகத்துள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒலியின் அமைப்பாளர் கவிஞர் வாலி.

கதாநாயகனுக்கு ஓர் அன்பு மனைவி. அவளுக்கு அமைந்தது அகால மரணம். மனைவியின் தந்தையே தனது மாப்பிள்ளைக்கு மறுமணம் செய்து வைக்கிறார். கதாநாயகனும் முதல் மனைவியின் நினைவுகளிலேயே மூழ்கி இருக்கிறார். இந்த முதல்மனைவி வானத்தில் தோன்றி கதாநாயகனின் மனதை மாற்ற வேண்டிய சூழ்நிலை. இதற்காக ஒரு பாடல்.

மன்னவனே அழலாமா? கண்ணீரை விடலாமா?

உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீயிருக்க...

இந்தப் பாடலின் சரணத்தில் கவிஞர் வாலியின் சிந்தனை வந்தனைக்குரியது. கணவன்-மனைவி தாம்பத்தியத்தில் உடல் என்பது மதிப்பற்றது. உயிர் மரியாதைக்குரியது. அவள் உயிர் அவனிடம். அவன் உயிர் அவளிடம். இதனை பல்லவியிலேயே பதிய வைத்துவிட்டார் கவிஞர் வாலி. அதற்குப் பின்னர் கதாநாயகனின் எண்ண ஓட்டங்களை சீர் செய்வதற்கு வரிகள் பலவந்து விழுந்தன.இறுதி சரணத்தில் கதாநாயகியின் வாயிலாகக் கவிஞர் வைத்த வேண்டுகோள் கண்ணீரை வரவழைத்தது.

உன் மயக்கம் தீர்க்க வந்த

பெண் மயிலைப் புரியாதா?

தன் மயக்கம் தீராமல்

தவிக்கின்றாள் தெரியாதா?

என் உடலில் ஆசை யென்றால்

என்னை நீ மறந்துவிடு!

என் உயிரை மதித்திருந்தால்

வந்தவளை வாழவிடு!

சாட்டையால் சுரீரென்று கொடுத்த அடிபோல் வந்து விழுந்த இந்த வரிகளை ரசிகர்கள் ஆமோதித்தது பலத்த கைதட்டல்களாக பரிமளித்தது. சிக்கலான சூழ்நிலை சம்பவம். கதாநாயகன் மீது தவறு சொல்ல இயலாது. அப்படிப்பட்டவனை மாற்ற வேண்டிய கட்டாயம். ரசிகர்களும் சம்மதிக்க வேண்டும். கவிஞர் வாலியின் அந்த வைர வரிகள் கற்பகம் என்ற திரைப்படத்தில் மட்டுமின்றி கவிஞரின் வாழ்க்கைக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. முதல்நாள் படத்தைப் பார்த்துவிட்டு விளைந்த உந்துதலில் ஓர் மடல் எழுதி கவிஞருக்கு என் மனதை திறந்து காட்டினேன். காலம் தாழ்த்தாமல் கவிஞரிடம் இருந்து பறந்து வந்த ஓர் அஞ்சல் அட்டை என் இல்லத்து கதவைத் திறந்தது.

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
 கந்தனே உனை மறவேன்,”

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.

திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!

’தரைமேல் பிறக்க வைத்தான் – எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் – பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

”ஒளி விளக்கு,” படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,” என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
கண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?” பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.

மரபு வழியில் – ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,’ என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்” என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.

டி.எம்.சௌந்தரராஜன்


கம்பீரக்குரலால் செயியுறுபவர்களை கட்டிப்போட வைக்கும் வசியக்குரலுக்கு சொந்தக்காரர் டி எம் எஸ்.

அந்தக்காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி படங்கள் என்றால் டி எம் எஸ் இல்லாத பாட்டுக்களே இல்லை எனலாம்.

அந்தளவுக்கு அநேக படங்களுக்கு இவர்கள் இருவருக்காகவும் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி படங்கள் இமாலய வெற்றிபெற உதவி இருக்கின்றார்.

பக்திபாடல்கள், குறிப்பாக முருக பக்திபாடல்கள் பாடி நடித்து இயக்கி இப்படி பன்முகம் காட்டி திரையுலகில் வலம் வந்த ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்தவர்.

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் என்ற தத்துவப்பாடலாகட்டும்,எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற சோகப்பாடலாகட்டும்,

குறத்தி வாடி என் குப்பி என்ற ஹைபிட்சில் ஒலித்த பாடலாகட்டும்,ஞாயிறு என்பது பெண்ணாக என்ற மெலடிபாடலாகட்டும்,

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ என்ற டப்பாங்குத்து பாடலாகட்டும்,

பாவடை தாவணியில் பார்த்த உருவமா என்ற அமைதிப்பாடலாகட்டும்,மலர்களை போல் தங்கை என்ற பாசத்தைக்குழைத்து குரலெடுத்து பாடிய பாடலாகட்டும்,

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்ற காதல் பாடலாகட்டும் குரலை ரப்பர் போன்று வளைத்து,நெளித்து,கேட்போரை நெகிழ வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர்.

பட்டத்து ராணி பார்க்கும் பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது


நடிகர் திலகத்திற்காக முதன் முதலாக

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்த போது ...

எனக்காக நீங்கள் குரலை மாற்றிப் பாட வேண்டாம்..

உங்கள் பாணியிலேயே பாடுங்கள்...

நடிக்கும் போது உங்கள் குரலுக்கு இசைவாக எனது நடிப்பை அமைத்துக்கொள்கிறேன் என்றாராம் சிவாஜி.

சிவாஜி சொன்னபடி எஸ்.பி.பி. தமக்கே இயல்பான 'நளினம் கொஞ்சும்' நந்தவனக் குரலில் அந்தப் பாடலை மிக சுதந்திர உணர்வோடு பாடினார்.

பாடல் பிரமாதமாக பதிவானது.

ஆனால் பாடலைக் கேட்ட போது,

டி.எம்.எஸ்ஸின் குரலைப் போல இந்த புதிய குரல்... அதுவும் மென்மையான குரல் நடிகர் திலகத்தின் நடிப்போடு இசையுமா?

என்று சிலர் சந்தேகப் படவும் செய்தனர்.

ஆனால் அந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட்ட போது...

எஸ்.பி.பியின் நளினமான குரலுக்கு ஏற்ப தமது நடையையும் பாவனைகளையும் அசைவுகளையும் குழையக் குழைய வெளிப்படுத்தினார் நடிகர் திலகம்.

சந்தேகப் பட்டவர்கள் பிரமித்துப் போனார்கள்.

பிரமிப்பின் மறு பெயர் தானே நடிகர் திலகம் !

அந்தப் பாடல் ...'சுமதி என் சுந்தரி' படத்தில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் மலர்ந்த' பொட்டு வைத்த முகமோ'.

காலப் புயலில் கலைந்து போகாத பாட்டு தீபங்களில் இன்றும் இளமை ஊஞ்சலாடும் இந்தப் பாடலும்...
பாடல் காட்சியும் ஒரு வசந்த வரலாறு.

30 வருட பாலுவின் சேவையை பாராட்டி சென்னையில் ஒரு
நிகழ்ச்சியில் திரு.கங்கை அமரன் சொன்னது. இந்த பாடலைப்பற்றி
மேலும் ஒரு தகவல். இந்த பாடல் பதிவு செய்த நாள் அன்று இரவே
சென்னை வானோலி நிலையம் சுடச்சுட ஒலிப்பரப்பட்டது என்பது மகிழ்ச்சியான விஷயம் தானே சார்

தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!


நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல

டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல்

வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.

மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.

ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.

சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.

சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.

ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,

ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.

மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.

ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.

பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?

என்று எல்லோருக்குமே குழப்பம்.

அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற

அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.

எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.


திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.

உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.

அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.

அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...

அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மிகவும் சவாலான ஒரு வேலை தான்.

ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.

மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை

கை கொடுத்துப் பாராட்டினார்.

இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.

வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.

ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.

டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற

அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்

கருவிகளை நம்பாமல்

திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி

இந்த சாதனையைப் படைத்த இருவரும்

தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!

இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான

அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?

'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற

'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது.

கவியரசர் கண்ணதாசன் - டி.எம்.எஸ்.



'வானம்பாடி' படத்தில்...ஒரு பாடல்...

'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
அவன் காதலித்தே வேதனையில்
சாக வேண்டும்...'

என்று கவியரசர் கண்ணதாசன் எழுத...'திரை இசைத் திலகம் 'கே.வி.மகாதேவன் இசையமைக்கிறார்.

அந்தப் பாடலை...டி.எம்.எஸ் அவர்களிடம்...கே.வி.மகாதேவனின் உதவியாளர் பாடிக் காட்டுகிறார்.

பாடலைக் கேட்டுப் பார்த்த டி.எம்.எஸ்...

'இந்தப் பாடலின் பல்லவியில் கடவுளை சாக வேண்டும் என்று வரும் வரியை நான் எப்படிப் பாடுவது?

மனிதனுக்குத் தான் மரணம் உண்டு...

கடவுள் சாகா வரம் பெற்றவர்...

எனவே அவரை சாக வேண்டும் என்று வரும் வரிகளை...

கடவுளை சதா புகழ்ந்து பாடிய என் வாயினாலேயே பாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.

டி.எம்.எஸ் இப்படிச் சொல்லும் போது...கவியரசர் கண்ணதாசனும் அருகில் இருந்தார்.

'கடவுளை சாடுவதற்காக அப்படி எழுதவில்லை.

கதாபாத்திரம்...காதல் தோல்வியில் அப்படி பாடுவதாக...கதையின் போக்கை அனுசரித்து அப்படி எழுதினேன்.'.என்று..கவிஞர், டி.எம்.எஸ்ஸிடம் சமாதானம் சொன்னார்.

உடனே டி.எம்.எஸ்..கதாநாயகன்...முட்டாள் தனமாக காதலித்து..பின்பு அது..கை கூடாமல் போகும் போது..அந்தக் குற்றத்தை...அறிவார்ந்த பொருளான கடவுள் மீது சாட்டுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

எனவே...கடவுள்..சாக வேண்டும் என்ற வரியை மட்டும் நான் பாட மாட்டேன்...என்றார் மீண்டும் பிடிவாதமாக.

கண்ணதாசன் மட்டுமல்ல..கே.வி.மகா தேவனும்...எவ்வளவோ சமாதானம் செய்தும்...டி.எம்.எஸ் தனது முடிவில் தீர்மானமாக இருந்தார்.

உடனே கண்ணதாசன்...'அவ்வளவு தானே முருக பக்தரே...சாக வேண்டும் என்ற வரியை...'வாட வேண்டும்' என்று மாற்றி எழுதித் தருகிறேன்...' என்று சொல்லி...அதை வாங்கி திருத்தம் செய்து கொடுத்தார்.

கவியரசராக அவர் இருந்த போதிலும்...சக கலைஞனின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் கண்ணதாசன் அன்று பெருந்தன்மையாக நடந்து கொண்ட விதம்...

இன்றும் என்னை வியக்க வைக்கிறது...வணங்க வைக்கிறது என்கிறார் டி.எம்.எஸ்.