மொத்தப் பக்கக்காட்சிகள்

11/30/2024

எதற்காக திருமண பொருத்தம்???

 திருமண பொருத்தம்images for indian tamil marriage4

முன்னுரை:

💐 நாகரிகமும், அறிவியலும் வளர்ந்த இந்த நவீனக் காலத்தில் திருமணங்கள் முறையாக நடக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். இரு மனங்கள் இணையும் திருமண வாழ்வு, பயிர்களை போலச் செழித்து நிற்க நம் முன்னோர்கள் பல உத்திகளைக் கையாண்டனர். பெயர், ராசி, நட்சத்திர பொருத்தம் எனப் பல பொருத்தங்களைப் பார்த்து திருமணம் நடத்தினர். அதன் மூலம் முழு மனதுடன் வாழ்ந்து தங்கள் குடும்பத்தை வாழவைத்து வாழ்வை வளப்படுத்தினர். இத்தகைய திருமண பொருத்தம் பார்த்து திருமணம் புரிய நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! திருமண வாழ்வைத் தொடங்குங்கள்!!

எதற்காக திருமண பொருத்தம்???

💐 இந்தப் பொருத்தங்கள் எல்லாம் எதற்காகப் பார்க்கப்பட்டன? இது நம் முன்னோர்களின் அபார திறமையை விளக்குகிறது. உதாரணமாகத் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இது மூடநம்பிக்கையாகவோ அல்லது நகைச்சுவையாகவோ இருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் செவ்வாய் என்பது இரத்தத்தைக் குறிக்கிறது. எண்ண ஓட்டங்களும் இரத்த ஓட்டங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரத்த வகையை பரிசோதித்தால்தான் அது "பாசிட்டிவ்" அல்லது "நெகட்டிவ்" என்பதை அறிய முடியும். இதைத்தான், செவ்வாய் ஸ்தானத்தை வைத்து நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. இப்படிப் பல அறிவியல் விஷயங்கள் இந்த ஜோதிடத்தில் மறைந்துள்ளன. நமது முன்னோர்கள் இதை அறிவியல் பூர்வமாக விளக்காமல் அதை ஜோதிடம் என்று விட்டு விட்டதால் தான் இன்று நாம் ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ள மறுக்கிறோம்.

💐 எனவே, திருமண பொருத்தமானது மிகவும் முக்கியமானது. திருமணம் செய்யப்போகும் ஆண், பெண் இருவருக்கும் ஜாதகம் பொருத்தம் உள்ளதா என்று தெரிந்து கொண்டு திருமணம் செய்தால், வம்சம் "வாழையடி வாழையாக" தழைக்கும்.

திருமண பொருத்தம்:

💐 திருமண பொருத்தம் மொத்தம் 12 ஆகும். அவற்றுள் 10 பொருத்தம் மட்டுமே முக்கிய பொருத்தம் என்பார்கள்.

1. தினப்பொருத்தம்
2. கணப் பொருத்தம்
3. மகேந்திர பொருத்தம்
4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
5. யோனிப் பொருத்தம்
6. ராசிப் பொருத்தம்
7. ராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜுப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்

1. தினப்பொருத்தம்:

💐 தினசரி பொருத்தம் என்பது கணவன்-மனைவிக்கு இடையேயான அன்றாட சூழ்நிலையைப் பார்க்க இந்த பொருத்தம் உதவுகிறது மற்றும் இரு ஜாதகங்களிலும் சந்திர பகவான் அமைவதன் மூலம் இந்த தினப் பொருத்தம் கணிக்கப்படுகிறது.

💐 இந்த நாள் திருமண பொருத்தத்திற்கு ஏற்றதாக இருந்தால், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் நல்லிணக்கமும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் இருக்கும்.

2. கணப் பொருத்தம்:

💐 ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் மூன்று கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் ஆகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க இந்த பொருத்தம் மிகவும் முக்கியமானது.

3. மகேந்திர பொருத்தம்:

💐 மகிழ்ச்சியான திருமணத்திற்கும் இல்லறம் இனிதே இருக்கவும் குழந்தை செல்வம் அவசியம். இந்த பொருத்தம் தம்பதிகளின் குழந்தை செல்வத்தைக் குறிக்கும், அல்லது புத்திரர்கள் மூலம் செல்வம் பெருகும்.

4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்:

💐 திருமண வாழ்க்கையை மங்களகரமாகத் தொடங்கும் திருமணமான பெண், தன் வாழ்நாள் முழுவதும் மஞ்சள் குங்குமத்துடன் மங்களகரமாக இருக்க விரும்புவார். அதனால்தான் பெரியவர்களும் திருமணமான பெண்களை “தீர்க்கசுமங்கலி பவ” என்று வாழ்த்துகிறார்கள். இது பெண்ணிற்கான முக்கியமான பொருத்தமாகும்.

5. யோனிப் பொருத்தம்:

💐 ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்தப் பொருத்தம் காணப்படுகின்றது. ஆண் மற்றும் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் இது பொருந்தாது. பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குத் தம்பதிகளிடையே அன்னியோன்யம் தேவை. எனவே இந்த பொருத்தம் காணப்படுகிறது. இந்த இணக்கம் இருந்தால், திருமண உறவு வெற்றி பெறும்.

6. ராசிப் பொருத்தம்:

💐 ராசி அதிபதிப் பொருத்தம் என்பது குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காணும் பொருத்தம். பன்னிரெண்டு ராசிகளுக்கும் அதிபதி உண்டு, அந்த ஆட்சிக் கிரகம் மற்ற கிரகங்களுடன் நட்பு, சமத்துவம், பகை என மூன்று வழிகளில் உறவைக் கொண்டுள்ளது. இதில் ஆண், பெண் ராசிகளுக்குள் பகை தவிர நட்பு, சமத்துவம் இருந்தால் பொருத்தம் உள்ளது என்று அர்த்தம்.

7. ராசி அதிபதி பொருத்தம்:

💐 மணமகன், மணமகள் இருவரும் ஒரே ராசியாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். இல்லையெனில், இருவரின் ராசியில், நட்பு ராசியானது அதிபதியாக இருந்தால் பொருத்தம் பொருந்தும். இரு ராசி அதிபதிகளும் பகையாக இருக்கக்கூடாது. இது ராசி அதிபதி பொருத்தம் ஆகும்.

8. வசியப் பொருத்தம்:

💐 ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும்போது, இறுதியில் சலிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த சலிப்புத் தன்மை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு வசியப் பொருத்தம் இருக்க வேண்டும்.

💐இந்த இணக்கத்தன்மை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்:

💐 திருமணப் பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தம்பதியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

💐 மிக எளிமையாகச் சொல்வதானால், திருமணத்திற்கான ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜு அல்ல என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். இவ்வாறு பார்ப்பதன் மூலம் அந்தப் பெண் தீர்க சுமங்கலியாகச் சுகமாக வாழ்வாள்.

10. வேதைப் பொருத்தம்:

💐 வேத பொருத்தம் என்பது திருமண வாழ்வில் வலியற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு பொருத்தம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரம் மட்டுமே வேதாவாக இருக்க முடியும். இந்த வகையான வேத நட்சத்திரம் ரஜ்ஜு பொருத்தம் இல்லாத அல்லது ஒற்றை ரஜ்ஜூ நட்சத்திரமாக இருக்கலாம்.

💐ரஜ்ஜு குறுகிய கால திருமணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்றது. ஆனால் வேதா நட்சத்திரம் சேர்ந்தால் குறுகிய கால திருமண வாழ்க்கை கூட மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும். பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதா நட்சத்திரமாக இருந்தால், திருமணத்திற்குப் பிறகும் அவர்களுக்கிடையேயான வாழ்க்கை சண்டையாகவே இருக்கும்.

முடிவுரை:

💐 திருமணம் என்பது பூலோகத்தில் நிச்சயிக்கப்படுவது அல்ல, அவை சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். மேலே கொடுக்கப்பட்டுள்ள திருமண பொருத்தம் பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். திருமண பொருத்தம் பார்த்து வாழையடி வாழையாக திகழ செய்து வாழ்வை ஒளிமயமாக்குங்கள்!!

11/29/2024

பாடகர் மனோ !

 

இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.

🌹இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படம் ஒன்றில் இசையமைப்பாளர் அம்சலேகா வாய்ப்பு கொடுத்தார்.

🌹 1986-ஆம் ஆண்டு இளையராஜா, பூவிழி வாசலிலே என்றத் தமிழ்த் திரைப்படத்தில் “அண்ணே அண்ணே” என்ற பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். அன்றிலிருந்து இவரது பாடல் பயணம் ஆரம்பித்தது. வேலைக்காரன், சின்னத்தம்பி, காதலன், சொல்லத்துடிக்குது மனசு, உள்ளத்தை அள்ளித்தா, சின்னக் கண்ணம்மா, முத்து, எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, சிற்பி., எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், தேவா, சந்திரபோஸ் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடிவந்தார். 

 🌹இவர் பாடகராவதற்கு முதலில் நடிகராகத்தான் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். பாடும் வாய்ப்புப் பின்னர் இவரை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டது. முதலில் 1979-ஆம் ஆண்டில் ‘நீடா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். தமிழில் ‘சிங்கார வேலன்’ படத்தில் 1982-ஆம் ஆண்டில் இவரை நடிகராக அறிமுகம் செய்தது பாவலர் கிரியேஷன்ஸ் பட நிறுவனம், இப்படத்தில் இவர் கமலஹாசனின் இணை பிரியா நண்பர்கள் குழுவில் ஒருவராக கவுண்டமணி, வடிவேலு கூட்டணியுடன் மனோ என்ற தனது பெயருடன் நகைச்சுவை விருந்தளித்தார். இதையடுத்து எனக்கு இருபது உனக்கு பதினெட்டு உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலான படங்களில் தமிழில் நடித்தார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.

எல். ஆர். ஈஸ்வரி !

 சைஞானி இளையராஜா இசையமைப்பில் ஒரே ஒரு பாடலை மட்டுமமே பாடியுள்ள பிரபல பாடகி...

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இசையமைப்பாளர்களுடனும் ஏராளமான ஹிட் பாடல்கள் பாடியுள்ள ஈஸ்வரி, இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ஒரே ஒரு பாடலை மட்டும் தான் பாடியுள்ளார். நல்லதொரு குடும்பம் என்ற சிவாஜி நடிப்பில் உருவான திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், ஒன் டூ சாச்சா என ஆரம்பமாகும் பாடலை தான் எல். ஆர். ஈஸ்வரி தான் பாடியிருப்பார்.

இன்று வரையிலும் இளையராஜா இசையமைத்து வந்தாலும் கடந்த 45 ஆண்டுகளாக வேறு எந்த பாடல்களையும் அவரது இசையில் பாடாமல் இருந்து வருகிறார் ஈஸ்வரி. இதனால் அவர்களுக்குள்ளே ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்ற கருத்தும் பரவலாக ஒரு காலத்தில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் இது தொடர்பாக ஒருமுறை இளையராஜாவுக்கும், ஈஸ்வரிக்கும் சண்டை என பயங்கரமாக பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில், ராஜாவின் சகோதரரான கங்கை அமரனிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் தெரிவித்தவர், அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சரியான சந்தர்ப்பமும், சூழலும் அமையாததால் தான் அவர்கள் இருவரும் பின்னர் இணையவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இதே போல சங்கர் கணேஷ் இசையிலும் எல். ஆர். ஈஸ்வரி பாடாமல் இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்த, அவர்கள் இருவரும் இணைந்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதற்கான சூழல் அமையாததால் தான் பாடவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாசுதேவன் !

 

மலேசியா வாசுதேவன் பாடுவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணமா?.. ஆச்சரியம் ஆனால் அதுதான் உண்மை

ரஜினி நடித்த மனிதன் மனிதன் என்ற பாடல் ரஜினி என்ற அந்த உச்ச நட்சத்திரத்தையும் தாண்டி மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்துகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட வசீகரக்குரல் திடீரென நின்று போனது ஏன்? இவரது வெண்கலக் குரலில் தண்ணீ கருத்துருச்சி, ஆகாய கங்கை, ஆசை 100 வகை, கூடையிலே கருவாடு, பட்டு வண்ண சேலைக்காரி ஆகிய பாடல்கள் இன்றும் இனிப்பவை.

சந்திரபோஸ் இசையில் மனிதன் படத்தில் மனிதன் மனிதன் பாடல் ரெக்கார்டிங் ஆகி ஓடிக்கிட்டு இருக்கு. இது ரஜினிக்கே தெரியாது. இந்தப் பாட்டை நம்ம படத்துல வைத்தால் என்னன்னு கேட்கிறார் ரஜினி. அதன்பிறகு தான் அவருக்கே தெரிந்தது இது நம்ம படத்தோட பாட்டு தான் என்று. முதலில் இந்தப் பாடலைப் படத்தில் எங்கு வைப்பது என்று சிக்கல் வந்ததாம். அதன்பிறகு தான் டைட்டிலில் வைத்தார்களாம்.

தமிழ்சினிமாவில் மலேசியா வாசுதேவனின் குரல் மாறுபட்டது. குரலில் பாவங்களைக் கொண்டுவதில் ஆற்றல் மிக்கவர் தான் அவர். முதல் மரியாதை படத்தில் அவரது பூங்காற்று திரும்புமா என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். ஒரே வரியில் உங்களைப் பாட்டோடு கலக்கச் செய்து விடுவார் அந்தப் பாடகர். அவர் ஒரு பாடலைப் பாடி விட்டார் என்றால் அது சக்சஸ் தான்.

பாரதவிலாஸ் படத்தில் தான் மலேசியா வாசுதேவன் பாடகராக அறிமுகமானார். அதன்பிறகு வாய்ப்பு வரவே இல்லையாம். இளையராஜா சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல் சம்பந்தமாக ஒரு இசை ஆல்பம் பண்ணினாராம். அதில் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். 16 வயதினிலே படத்தில் இருந்து தான் அவர் ஹிட் ஆனார். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற அந்தப் பாடல் உண்மையிலேயே சூப்பர்ஹிட். பட்டிக்காட்டுல எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிப் பயலின் உணர்ச்சிகளை குரலிலேயே கொடுத்து விடுகிறார் மலேசியா வாசுதேவன்.

எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் சம கால நண்பர்கள். கல்யாணராமன் படத்திலும் அப்பாவி, அறிவாளிக்குமான சிறுவித்தியாசத்தை மலேசியா வாசுதேவன் குரலில் கொண்டு வந்து அசத்தியிருப்பார். அதுதான் காதல் வந்திரிச்சி…பாடல். எதுக்கு வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக்கூடிய குரல் அம்சம் கொண்டவர் தான் மலேசியா வாசுதேவன்.

சினிமாவிலும் வில்லத்தனத்தில் வெளுத்துக்கட்டினார். ஒரு கைதியின் டைரி படத்தில் இவரது வில்லத்தனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. அவ்வளவு அருமையாக நடித்து இருப்பார். அந்த நக்கல், நய்யாண்டி, குறும்புத்தனம் எல்லாம் ரொம்பவே நம்மை ரசிக்க வைக்கும்.

நடிப்பாசையைத் தாண்டி சொந்தப்படம் எடுப்பதில் தான் அவர் சிக்கினார். இதில் தான் அவர் ஒரு இடத்துக்கு மேல் அவரால் பண்ண முடியவில்லை. குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் படங்கள் இல்லாமல் இருந்தார். அதனால் தான் அவர் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

தேன் மொழி

பகிர்வு

சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர்.

 

நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரை குறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர்.

மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு.

யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர். விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.

முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும் முடித்து விடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது.

எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

சாண்டோ சின்னப்பா தேவர் - யார்?

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.

'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்` என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர்.

நல்ல உடற்கட்டு உள்ளவர்.

நவீன உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார்.

அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார்.

மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார்.

ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.

சினிமாவில் நுழையும் முயற்சியும்

டூரிங்க் டாக்கிசில் சினிமா பார்ப்பது சின்னப்பாவுக்கு ருசிகரமான அனுபவம். கூலி வாங்கியதும் ஓடுகிற ஒரே இடம் அதுதான்.

மௌனப்படங்கள் மட்டுமே வெளியான காலகட்டம் அது.

வெளிநாட்டு சண்டைப்படங்கள் என்றால் தேவருக்கு அத்தனை இஷ்டம்.

மறுநாள் நண்பர்களுடன் சேர்ந்து அட்டைக்கத்தி வீசுவார், ஆக்ரோஷமாகப் பாய்ந்து குத்துவார், குதிரை ஏறிப் பறக்கும் சின்னப்பாவின் ஆசையில் ஆற்றங்கரைக் கழுதைகள் அல்லல்படும், கிணற்றில் நீர் இறைக்கும் தாம்புக் கயிறு சின்னப்பாவை மரத்துக்கு மரம் தாவும் டார்ஜனாக மாற்றுமாம்.

1931-ஆம் ஆண்டு சினிமா பேசத் தொடங்கியது.

ஒலியோடு கூடிய ஒளிச்சித்திரங்களில் நடிக்க நடிகர் நடிகையர் தேவை எனும் விளம்பரங்களோடு, பிரபல சினிமா நிறுவனங்களின் முகவரிகள், அக்கால பத்திரிகைகளில் வரத்தொடங்கின. உற்சாகமான சின்னப்பத்தேவர் தன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாரானார்.

பல சினிமா நிறுவனங்களுக்கு தனது புகைப்படத்துடன் வாய்ப்புக் கேட்டு கடிதம் எழுதினார்.

எதற்கும் பதில் வரவில்லை.

இரவு தெருக்கூத்துகளில் ஆடிப்பாடி ஆத்ம திருப்தியடைந்தார்.

அடிப்படை சங்கீதம், ராக பாவம் குறித்தெல்லாம் தெரியாவிட்டாலும், கேள்வி ஞானத்தில் சொற்களைச் சேர்த்து இஷ்டத்துக்குப் பாடுவார். அதற்கே கைத்தட்டல்கள் தொடர்ந்தன.

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன.

அதற்கு திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தேவைப்பட்டனர்.

பிரபல ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பத்தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி, எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர் அவர்தான்.

ஆனால், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல தங்கை’ சுமாராகத்தான் ஓடியது.

ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.

அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில் சிக்கல் நீடித்தது.

தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின.

மருதமலை முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.

செங்கோட்டை சிங்கம் படத்தில்தான் அறிமுகப்படுத்தினார்.

’’வெற்றி... வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்குத்தான் வெற்றி...’’ என்று எஸ்.வி.சுப்பையா பேசுகிற முதல் காட்சியின் வசனத்தை வாய்விட்டுக் கூறினார்,

ஆரூர்தாஸ். ’’நிறுத்துப்பா... முதல் மூணு ஆட்டத்த நாம காட்டலியே’’ என்றார் தேவர்.’’அதனால எண்ணண்ணே... தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம், அதைத்தான் வெற்றி வெற்றி-ன்னு எழுதினேன்’’ என்று கூற தேவர் உருகிவிட்டார்.

ஆரூர்தாஸ் கூறியபடி, அந்தப்படமும் வெற்றிபெற, தனது ஒவ்வொரு படத்திலும் கதாநாயகன் வெற்றி... வெற்றி... என்று கத்தியபடியே ஓடி வருவதை ஓர் அம்சமாகவே நிலைநாட்டினார்.

ஒரு கட்டத்தில் மற்ற ஃபைனான்சியர்களை நாடிச் செல்ல மனமில்லாமல், குறைந்த செலவில் புதுமுகங்களை மட்டும் வைத்துப் படம் பண்ணலாமா, அல்லது மிருகங்களை அதிகளவில் பயன்படுத்திப் படம் பண்ணலாமா என்கிற யோசனையில் இருந்த தேவர், ’’எலிஃபேண்ட் பாய்’’ என்னும் ஆங்கிலப்படத்தை தமிழ்ப்படுத்த விரும்பினார்.

தனது லட்சியப் படமாகவும் அதனை அறிவித்தார்.

யானைகளை எப்படிப் பிடிக்கிறார்கள் என்பதை நிஜமாகவே படமாக்க எண்ணினார்.

முழுக்க முழுக்க காட்டு மிருகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

முதுமலை ஸ்ரீநிவாச எஸ்டேட்டில் யானைகளுக்காக பெரிய பெரிய பள்ளங்கள் தோண்டி தவம் கிடந்தார். 1960ஆம் ஆண்டு தீபாவளிக்கு ’யானைப் பாகன்’ ரிலீசானது.

உண்மையில் தமிழ் சினிமாவில் புதுமையான முதல் முயற்சி அது என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் தீனதயாளன், அதே தினத்தில் வெளியான கைதி கண்ணாயிரம், கைராசி, மன்னாதி மன்னன் போன்ற படங்களின் முன் யாரும் யானைப்பாகனை கண்டுகொள்ளவில்லை என்றும், பத்திரிகைகள் கூட, தேவரின் டாக்குமெண்ட்ரி படம் என்று கிண்டல் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.

தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது.

அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார்.

எம்.ஜி.ஆரை தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.

எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.

முருகனின் தலங்களை அடிப்படையாகக்கொண்ட பாடல்களோடு ’தெய்வம்’ எனும் திரைப்பட்டத்தை தயாரித்து 1972ஆம் ஆண்டு வெளியிட்டார்.

கண்ணதாசன் வரிகளுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட். ’’மருதமலை மாமணியே’’ பாடல் இடம்பெற்றதும் இத்திரைப்பபடத்தில்தான். ரமணியம்மாள் குரலில் ’’குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’’, சீர்காழி கோவிந்தராஜனின் மற்றும் டி.எம்.எஸ் காந்தக் குரலில் ஒலித்த ‘’திருசெந்தூரின் கடலோரத்தில்’’ எனும் பாடல்களைக் கேட்போரெல்லாம், இன்னமும் சிலிர்த்துப் போவார்கள்.

நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வர வைத்ததும் தேவரின் சாதனைதான்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போதே மறுநாள், அதாவது 1978 ஆம் செப்டம்பர் 8ஆம் நாள், மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார்.

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது.

தேவரின் மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள்.

தேவருக்குப்பின், மகன் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார்.

கமல், ரஜினி நடிப்பில் பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர்.